Published : 26 Dec 2018 09:39 am

Updated : 26 Dec 2018 10:50 am

 

Published : 26 Dec 2018 09:39 AM
Last Updated : 26 Dec 2018 10:50 AM

நீட்... அடுத்து நெக்ஸ்ட்... மருத்துவத்தைப் பணக்காரமயமாக்கும் அடுத்த அபாயம்!

திருத்தப்பட்ட ‘தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2017’, தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆதார் மசோதாவைப் போலவே இதுவும் நிதி மசோதாவாகத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. “மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதே இந்தச் சட்டத்தின் நோக்கம்” என்று முன்னுரையில் சொல்லப்பட்டாலும், மருத்துவக் கல்வி குறித்த விஷயங்களில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்களை அபகரிப்பதும், மருத்துவ சேவைகளில் தடையற்ற தனியார்மயத்தைப் புகுத்துவதும், மருத்துவராகும் வாய்ப்பைப் பணம் படைத்த நகர்ப்புற, மேல்தட்டு மாணவர்களுக்கு மட்டுமே அளிப்பதும் இதன் நோக்கம் என்று கல்வியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். எளிதில் புறந்தள்ள முடியாத முக்கியப் பிரச்சினை இது!

இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956-ன்படி இயங்கிவரும் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவர்களை ஒழுங்குபடுத்தும் தன்னாட்சி பெற்ற அமைப்பு இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ). இதில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் நாடு முழுவதும் உள்ள ஆங்கில மருத்துவர்களால் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எஞ்சியுள்ள மூன்றில் ஒரு பங்கு நியமன உறுப்பினர்களின் மூலமாக மட்டுமே மருத்துவ கவுன்சிலின் நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிட முடியும். அப்படிப்பட்ட மருத்துவ கவுன்சிலில் ஏற்பட்ட சில பிரச்சினைகளை முன்வைத்து அதற்கு முடிவுகட்டும் முயற்சிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. ஊழல் மலிந்த நிர்வாகத் திறமையற்ற ஒரு அமைப்பாக அது பார்க்கப்படுகிறது. இதன் முன்னாள் தலைவர் கேத்தன் தேசாய் போன்றோர் தொடர்பான ஊழல் புகார்கள் இதற்குக் காரணம்.

என்ன பின்னணி?

இத்தகைய பலவீனமான மருத்துவ கவுன்சில்கூட தடையற்ற தனியார்மயத்துக்குத் தடையாக இருந்துவருகிறது. மத்திய அரசின் தலையீடுகளைப் பல தருணங்களில் எம்சிஐ ஏற்க மறுத்திருக்கிறது. எம்சிஐ சட்ட வரைமுறையின்படி, ‘நீட்’ போன்ற தேர்வுகளை அது நடத்த முடியாது. அது தேர்வு நடத்தும் நிறுவனமல்ல. இந்திய மருத்துவ கவுன்சிலின் சட்டத்தில் திருத்தம் செய்ததன் மூலமாகவே ‘நீட்’ தேர்வு கொண்டுவரப்பட்டது. 2008-ல் முதல் இதில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர், எம்சிஐக்கு மாற்றாகத் தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் 92-வது அறிக்கையையும், மத்திய அரசால் அமைக்கப்பட்ட டாக்டர் ரஞ்சித்ராய் சௌத்ரி குழுவின் அறிக்கையையும் அடிப்படையாக வைத்து தேசிய மருத்துவ ஆணையத்தின் சட்ட முன்வடிவை நிதி ஆயோக் தயாரித்தது. 2017 டிசம்பர் 29-ல் நாடாளுமன்றத்தில் தேசிய மருத்துவ ஆணையத்தின் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு வந்ததையடுத்து நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. நாடாளுமன்ற நிலைக்குழு தன் அறிக்கையை 2018 மார்ச் மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. மத்திய அமைச்சரவை, அதில் தனக்கு சாதகமாக உள்ள சில திருத்தங்களை மட்டும் ஏற்றுக்கொண்டது. அவற்றை உள்ளடக்கிய மசோதாதான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிய மசோதாவில் என்ன பிரச்சினை?

உச்ச நீதிமன்ற ஆணையின்படி பல மாநிலங்களில் மாநில அளவிலான கல்விக் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சிறுபான்மைக் கல்லூரிகளில் 50% இடங்களையும் மற்ற கல்லூரிகளில் 65% இடங்களையும் அரசு ஒதுக்கீடாகப் பெற்று, குறைந்த கட்டணத்தில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். மீதமுள்ள 50% இடங்களிலும் 15% வரை மட்டுமே (வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு) மிக அதிகக் கல்விக் கட்டணத்தைத் தனியார்க் கல்லூரி நிர்வாகிகள் நிர்ணயிக்க முடியும். தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டால், 50% இடங்களைத் தங்கள் விருப்பப்படி எந்த விலைக்கு வேண்டுமானாலும் விற்றுக்கொள்ள முடியும். இது பணக்காரர்களுக்கு 50% இடஒதுக்கீடு செய்வதற்கு ஒப்பாகும்.

தேசிய வெளியேறும் தேர்வு ‘நெக்ஸ்ட்’ என்ற தேர்வையும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா முன்மொழிகிறது. ‘இறுதியாண்டு எம்பிபிஎஸ் தேர்வை ‘நெக்ஸ்ட்’ என்ற பெயரில் அகில இந்திய அளவில் மத்திய அரசு நடத்தும் என்று அது கூறுகிறது. அரசியல் சாசனப்படி பல்கலைக்கழகங்களை உருவாக்கவோ, நிர்வகிக்கவோ மத்திய அரசுக்கு அதிகாரமில்லை. மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது அது.

‘நெக்ஸ்ட்’ தேர்வில் தேர்ச்சி பெறவில்லையென்றால் பயிற்சி மருத்துவராக முடியாது. ஆறு மாதமோ அல்லது ஒரு வருடமோ காத்திருந்து தேர்வுக்குத் தயாராக வேண்டும். இதற்கான பயிற்சி மையங்களே இதில் பலனடையும். ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களுக்கு இது மேலும் சுமையை ஏற்படுத்திவிடும்!

மாநில உரிமைகளுக்கு வேட்டு வைக்கும்

25 பேரை உறுப்பினராகக் கொண்ட தேசிய மருத்துவ ஆணையத்தில் ஐந்து பேர் மட்டுமே மருத்துவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மற்ற 20 பேரும் நியமன உறுப்பினர்கள். ஒரு மாநிலத்துக்குத் தலா ஒரு நியமன உறுப்பினர் வீதம் 29 மாநிலங்கள் மற்றும் ஆறு ஒன்றியப் பிரதேசங்களிலிருந்து மருத்துவ ஆலோசனைக் குழுவுக்கு நியமிக்கப்படுவார்கள். இந்த ஆலோசனைக் குழுவுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இந்த ஆலோசனைக் குழுவிலிருந்து ‘சுழற்சி முறையில்’ 6 பேர் தேசிய மருத்துவ ஆணைய உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மருத்துவக் கல்லூரிகள் அதிகமுள்ள தமிழகம் போன்ற மாநிலங்களுக்குக்கூட 10 முதல் 12 வருடங்களுக்கு ஒருமுறைதான் இந்த ஆணையத்தின் உறுப்பினராக வாய்ப்பு கிடைக்கும். எனவே, மாநிலங்கள் தம் தேவைகள் குறித்தோ, பிரச்சினைகள் குறித்தோ தேசிய மருத்துவ ஆணையத்தில் விவாதிக்க இயலாது.

மேலும், இந்த ஆணையத்தில் நியமன உறுப்பினர்களைக் கொண்ட நான்கு வாரியங்கள் செயல்படும். இதில் ஒரு வாரியம், மருத்துவக் கல்வியின் தரத்தை மதிப்பீடு செய்யும். தனியார் ‘ரேட்டிங்’ நிறுவனங்களைக் கொண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளும். அதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும். இதனால், 24 அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட அதிகத் தொகையை அபராதமாகக் கட்ட வேண்டிய கட்டாயம் வரலாம். நாளடைவில் மாநில அரசுகள் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவே தயக்கம் காட்டும் சூழல் உருவாகிவிடும்!

மிதமிஞ்சிய அதிகாரம்

தேசிய மருத்துவ ஆணையத்தின் செயல்பாட்டில் தலையிடவும், முடிவுகளை மாற்றவும் நிராகரிக்கவும் மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக, தனக்குத் திருப்தியில்லையென்றால் ஆணையத்தைக் கலைக்கவும் மத்திய அரசுக்கு உரிமை உண்டு. ஆணையத்தின் செயல்பாடுகளில் குறையிருந்தால் மத்திய அரசிடம் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும்.

கூட்டாட்சித் தத்துவத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிரான ஒரு அமைப்பை முன்மொழியும் இந்த மசோதா நிராகரிக்கப்படுவதே இதற்குத் தீர்வாக அமையும். அதேசமயம், புகார்களுக்கு ஆளாகியிருக்கும் இந்திய மருத்துவ கவுன்சிலைச் சீரமைப்பதும் அவசியம். மருத்துவ கவுன்சிலை ஜனநாயகப்படுத்தி, முறையான தேர்தலை நடத்திட மத்திய அரசு முன்வர வேண்டும். மருத்துவம் தொடர்பான எந்த முடிவும், வருங்காலத் தலைமுறையின் கல்வி, வேலைவாய்ப்பில் மட்டுமல்லாது ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது. இந்தக் கடமையை அரசுக்கு நினைவூட்ட வேண்டியது ஜனநாயக சக்திகளின் தலையாய கடமை!

- எஸ்.காசி, பொதுச் செயலாளர், மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம்.

தொடர்புக்கு: drkkspcentre@yahoo.com

 

 

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

நீட்... அடுத்து நெக்ஸ்ட்...தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2017மாநில உரிமைகளுக்கு வேட்டு வைக்கும்மத்திய அரசுமருத்துவக் கல்விகூட்டாட்சித் தத்துவம்அரசியல் சாசனம்மருத்துவத்தைப் பணக்காரமயமாக்கும் அடுத்த அபாயம்!தேசிய மருத்துவ ஆணையம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author