Published : 16 Nov 2018 09:13 AM
Last Updated : 16 Nov 2018 09:13 AM

வறுமை நிலைக்குத் தள்ளப்படும் முஸ்லிம்கள்: பின்னணி என்ன?

இந்தியா, வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டிருந்தாலும் முஸ்லிம்களின் ஏழ்மை நிலையில் பெரிதளவு மாற்றம் ஏதுமில்லை என்று தொழிலாளர் வர்க்கம் குறித்து ‘தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அலுவலகம்’ (என்எஸ்எஸ்ஓ) நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. வெவ்வேறு மதக் குழுக்களுடைய பொருளாதார, கல்வி அளவுகோல்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது முஸ்லிம்கள் மீண்டும் மீண்டும் வறுமையிலேயே சென்று முடியும் விஷ வட்டத்துக்குள் சிக்கியிருப்பது தெரிகிறது.

என்எஸ்எஸ்ஓ-வின் 68-வது சுற்று (2011-12), வெவ்வேறு மதங்களுக்கிடையில் கல்விநிலை, வேலைவாய்ப்புக் குறியீடுகளை ஒப்பிடுகிறது. கல்வியில் எல்லா மதத்தினரையும்விட முஸ்லிம்கள் பின்தங்கி உள்ளனர்.

நகர்ப்புறங்களில் பட்டதாரிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 1,000-க்கு 15 பேர்தான் முஸ்லிம்கள். பிற மதத்தினரான இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்களுடன் ஒப்பிடுகையில் இது நான்கு மடங்கு குறைவு. முஸ்லிம் மகளிரும் குறைவாகவே உள்ளனர். முஸ்லிம்களுக்குள்ளேயே ஆண் பட்டதாரிகள் ஆயிரத்துக்கு 71. இது பிற சமூகங்களைவிட பாதி; மேல்நிலைப் பள்ளி அல்லது உயர்நிலைப் பள்ளி வரையில் படித்த முஸ்லிம்கள் 1,000-க்கு ஆடவர் 162, பெண்கள் 90 என்று உள்ளது. இந்த எண்ணிக்கையும் பிற மதங்களுடன் ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவு.

கல்வியில் ஏற்படும் சவால்கள்

பள்ளிக் கல்வியில் முஸ்லிம்கள் மிக மிகப் பின்தங்கியிருப்பதாலேயே இப்படி நேர்கிறது. எழுத்தறிவில்லாதவர்கள் முஸ்லிம்களில்

1,000-க்கு 190. இதுவே இந்துக்களில் 84, சீக்கியர்களில் 79, கிறிஸ்தவர்களில் 57 ஆக உள்ளது. பதினைந்து வயதுக்கு அதிகமானவர்களில் தொடக்கக் கல்வி அல்லது நடுநிலைக் கல்வி பயின்றவர்கள் முஸ்லிம்களில் 1,000-க்கு ஆடவர் 257, மகளிர் 198 ஆக இருக்கிறது. உயர் கல்வி, மேல்நிலைக் கல்வி, நடுநிலை–தொடக்கநிலைக் கல்வி என்று மூன்று நிலைகளிலும் முஸ்லிம்கள் பின்தங்கியிருக்கின்றனர்.

பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம்கள் படிக்கச் செல்லும் நாட்களும் மற்ற மதத்தவர்களைவிடக் குறைவாகவே இருக்கிறது. 5-14 வயதுப் பிரிவில் 1,000-க்கு 869 பேரே அதிக நாட்கள் படிக்கச் செல்கின்றனர். இதில் கிறிஸ்தவர்கள் 981, சீக்கியர்கள் 971, இந்துக்கள் 955. இந்துக்களில் பட்டியல் இனத்தவர், பழங்குடிகள் இதில் பின்தங்கியுள்ளனர். 14 வயதுக்கு மேற்பட்டோரில் இந்த வேறுபாடு மேலும் தீவிரமாக இருக்கிறது.

முஸ்லிம்களின் கல்விநிலை உயர உயர வருகைப் பதிவு குறைவதற்கு ஒரு காரணம், படிப்புக்கான செலவு அதிகமாவதும் அதைச் சமாளிக்க முடியாமல் படிப்பைக் கைவிடுவதும்தான். முஸ்லிம்களின் நபர்வாரி அன்றாட நுகர்வுச் செலவு ரூ.32.66. சீக்கியர்கள் ரூ.55.30, கிறிஸ்தவர்கள் ரூ.51.43, இந்துக்கள் ரூ.37.50. 2014-ல் என்எஸ்எஸ்ஓ தயாரித்த 71-வது ஆய்வறிக்கையின்படி கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிக்கவும் தொழில்நுட்பப் படிப்பு படிக்கவும் சராசரியாக அரசுக் கல்லூரிகளில் தலா ரூ.25,783, ரூ.64,442 ஆகிறது. முஸ்லிம்களின் நபர்வாரி வருவாயுடன் இதை ஒப்பிட்டால் அவர்களால் ஏன் உயர் கல்வி படிக்க முடியவில்லை என்பது விளங்கும்.

14 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி இலவசம் என்று கல்வி உரிமைச் சட்டம் வகை செய்துள்ளது. உயர், ஆரம்பக் கல்விக்கு சராசரியாக ரூ.508 கட்டணமாக இருக்கிறது. கல்விக் கட்டணங்கள் எல்லா மதத்தினருக்கும் சமம்தான் என்றாலும் முஸ்லிம்களின் குறைந்த வருவாய் காரணமாக அவர்களுக்குச் சுமை அதிகமாகிவிடுகிறது. உயர், ஆரம்பக் கல்விக்கு முஸ்லிம்கள் செலவழிப்பது அவர்களுடைய மொத்த வருவாயில் 8.5%. அதுவே இந்துக்களுக்கு 7.4%, கிறிஸ்தவர்களுக்கு 5.4%, சீக்கியர்களுக்கு 5.03% ஆக இருக்கிறது.

கல்வியின்மையும் வறுமையும்

முஸ்லிம்களில் படிக்காதவர்கள் அதிகம் இருப்பதும், உயர் கல்வி கற்றவர்கள் குறைவாக இருப்பதும் அவர்களைத் தொடர்ந்து வறுமைச் சுழலிலேயே ஆழ்த்துகின்றன. உயர் கல்வி இல்லாததால் நல்ல வேலைவாய்ப்பிலும் அவர்கள் பின்தங்கியுள்ளனர். தொழிலாளர் சந்தையில் நல்ல வேலை கிடைக்க அறிவும் தொழில் திறனும் அவசியம். தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (எல்எஃப்பிஆர்) என்பது வேலையில் உள்ளோர், வேலை தேடுவோர், வேலை செய்யும் விருப்பம், கல்வித்தகுதி ஆகியவற்றுடன் தொடர்புள்ளது. வேலைவாய்ப்பின் தரம், கல்வி, திறன் நிலைகளுடன் நேரடி வீதத்தில் தொடர்புள்ளது. எனவே, கல்வியில் பின்தங்கிய சமூகம் தொடர்ந்து வறுமைச் சுழலிலேயே சிக்குகிறது. அரசின் தலையீடு இல்லாமல் இதை உடைப்பது எளிதல்ல.

முஸ்லிம்களின் வறுமைச் சுழலை அவர்களுடைய மிகக் குறைந்த நுகர்வு, சுமாரான வேலைவாய்ப்புகள், வேலைவாய்ப்பு அந்தஸ்து, மொத்த மக்கள்தொகையில் எத்தனை பேர் தொழிலாளர்கள் என்பதிலிருந்து புரிந்துகொள்ளலாம். முஸ்லிம் தொழிலாளர்கள் ஆயிரத்துக்கு 342 (நகரம்), 337 (கிராமம்) என்று உள்ளது. மகளிர் பிரிவிலும் முஸ்லிம்கள் இதில் பின்தங்கியுள்ளனர். முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் நகரங்களில்தான் வாழ்கின்றனர். நகரங்களில் வேலைவாய்ப்புகள் அதிகம் என்றாலும் முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியிருப்பதால்தான் வேலைவாய்ப்பிலும் பின்தங்குகின்றனர்.

என்ன தீர்வு?

நகரங்களில் நிரந்தர வேலையில் ஈடுபடும் முஸ்லிம்கள் ஆயிரத்துக்கு 288 (ஆடவர்), 249 (மகளிர்) என்று இருக்கிறது. கிறிஸ்தவர்கள் (494 ஆடவர், 647 மகளிர்), இந்துக்கள் (463 ஆடவர், 439 மகளிர்), சீக்கியர்கள் (418 ஆடவர், 482 மகளிர்) என்று உள்ளனர். நிரந்தரமான மாதச்சம்பளம் வாங்கும் முஸ்லிம்களின் விகிதமும் பிற மதத்தைவிடக் குறைவாகவே இருக்கிறது.

இந்த விஷ வட்டத்திலிருந்து முஸ்லிம்கள் விடுபட மத்திய, மாநில அரசுகள்தான் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் கல்வி கற்க அவர்களுக்குக் கல்வி மானியம், ஊக்குவிப்புகள் தரப்பட வேண்டும். இதனால் ஆரம்ப–நடுநிலைப் பள்ளிக்கூட மாணவர்கள் உயர்நிலை–மேல்நிலைக் கல்வி வரை படிக்கவும், அடுத்த நிலையில் கல்லூரிகளில் படிக்கவும் முடியும். பொதுப் பாடப்பிரிவுகளில் படிக்க விரும்பாத மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் தொழில் கல்வி அளிக்க வேண்டும்.

இர்ஃபான் அகமது, சந்தோஷ் மெஹ்ரோத்ரா

© தி இந்து ஆங்கிலம், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x