Published : 19 Nov 2018 09:05 AM
Last Updated : 19 Nov 2018 09:05 AM

இணையகளம்: இந்தப் பொங்கல் கசக்கும்...

பொங்கலுக்காகக் கரும்பு வளர்த்திருந்தோம். பத்து மாத உழைப்பு. அப்படியே நாசம். நெடுவாசல் முழுக்க, ஒரு ஊரின் முழு கரும்புக் கொல்லைகளும் நாசம். ஒவ்வொரு விவசாயிக்கும் லட்சக்கணக்கில் இழப்பு. எங்கள் ஒரு ஊரில் மட்டும் கோடிக்கணக்கில் இழப்பு. எத்தனை கிராமங்கள், எத்தனை எத்தனை விவசாயிகள்? இந்தப் பொங்கல் காவிரி மாவட்டங்களில் கசப்புப் பொங்கல்.

- ராஜேந்திரன் உத்திராபதி

சுமாரான தேங்காய் ஒன்றின் விலை ரூ.16. சில்லுகளாகப் பார்த்துப் பார்த்துச் செலவுசெய்கிறோம். தீபாவளி தேவைக்காகப் பாப்பாநாடு தோழர் சிம்ளி விஜயன் இருபது காய்கள் கொடுத்திருந்தார். நேற்றைய கஜா புயலில் அவரது தென்னந்தோப்பில் பேரழிவு. முறிந்த தென்னையிலிருந்து சிதறிய குலைகளில் நூற்றுக்கணக்கான தேங்காய்கள் மட்டையுடன். அவற்றையெல்லாம் எடுத்து என்ன செய்ய முடியும்? முறிந்து கிடக்கும் மரங்களையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர் அந்தக் குடும்பத்தினர், மூத்தோரின் பிணத்தைப் பார்ப்பதுபோல!

- புலியூர் முருகேசன்

காவிரியை நிறைக்குமளவு பன்மடங்கு கண்ணீரைக் கொடுத்துச் சென்றிருக்கிறது கஜா புயல். நம்பிய விவசாயமும் தெங்கு பயிர்செய்கையும் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதை எண்ணி விவசாயிகள் உறைந்துபோயிருக்கின்றனர். இப்படி ஒரு பேரிடரில் தமிழ் நிலம் சிக்கியிருக்கும் இக்காலகட்டத்தில், தமிழ் ஊடகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்றும் பார்க்க வேண்டியிருக்கிறது. சமீபத்தில் கேரளத்தில் வெள்ளப் பெருக்கெடுத்த வேளையில் அது எப்படி அணுகப்பட்டது, இந்தப் புயல் எப்படி அணுகப்படுகிறது? ஜனங்களின் அல்லல் நிலை ஊடகங்களில் உரியபடி வரவே இல்லை.

- அகரமுதல்வன்

புதுக்கோட்டை மாவட்டம், தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாம் புயலினால் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. கடலூர் - குறிஞ்சிப்பாடி முகாம்கள் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகத் தகவல் கிடைக்கிறது. ஏற்கெனவே தமிழ்நாட்டிலுள்ள  பெரும்பாலான அகதிகள் முகாம்கள் பெரும் மழை காற்றுக்கே தாக்குப்பிடிக்க முடியாதவையாக இருக்கும் நிலையில், புயல் பாதிப்புக்குள்ளாகிவரும் மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம்கள் என்ன கதிக்கு ஆளாகியிருக்கும் என்பதை விவரிக்க வேண்டியதில்லை.

- பத்திநாதன்

ஒரு புயல் வந்தால் அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் இயல்பான ஒரு செயலைப் பாராட்ட வேண்டிய நிலையெல்லாம் துர்பாக்கியம். புயல் பாதித்த பகுதிகளிலிருந்து வரும் செய்திகள் அரசாங்கம் தத்தளிப்பதையே காட்டுகின்றன!

- மு.தெ.

ஏராளமான மரங்கள் வீழ்ந்திருக்கின்றன. விழுந்த மரங்களை வெட்டி அகற்ற வேண்டும். அதன் பின்னரே, மின்சார இணைப்புகளைச் சீரமைப்பது தொடர்பில் யோசிக்கவே முடியும்.

- எம்.எம்.அப்துல்லா

உதவச்செல்வோர் கவனத்துக்கு... உடனடியாகத் தேவைப்படுபவை... தண்ணீர், மெழுகுவத்தி,  குழந்தைகளுக்கான பால் மாவு, பிஸ்கட்டுகள், டீத்தூள், ரெடிமேட் சப்பாத்தி பாக்கெட், நாப்கின்,  தார்ப்பாய்கள், போர்வைகள்.

- துவாரகா சாமிநாதன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x