Last Updated : 27 Nov, 2018 10:27 AM

 

Published : 27 Nov 2018 10:27 AM
Last Updated : 27 Nov 2018 10:27 AM

இணைய களம்: பாதிக்கப்பட்ட மக்கள் திருடர்கள் அல்ல

காவிரிப் படுகையின் எந்தத் தெருவில் நுழைந்தாலும், ‘கஜா புயலால் பாதிக்கப்பட்டோர் முகாம்’ என்ற பெயர்ப்பலகைகள் அரை கிலோ மீட்டருக்கு ஒன்று தென்படுகின்றன. திரும்பிய பக்கமெல்லாம் முகாம்கள், முகாம்கள், முகாம்கள்.

குறுக்கும் நெடுக்குமாகப் பாய்ந்து செல்லும் பல நூறு நிவாரண வண்டிகள்... எண்ணற்ற ஊர்களிலிருந்து மக்கள் சேகரித்து அனுப்பும் பொருட்கள், வெளிநாடுகளிலிருந்து வந்து சேரும் ஏராளமான உதவித்தொகை... உண்மையில், குடிமைச் சமூகமே ஒரு ராணுவத்தைப் போல இணைந்து நின்று, இன்று காவிரிப் படுகை மக்களை அரணாகப் பாதுகாக்கிறது. அரச கட்டமைப்பின் பிரம்மாண்ட தோல்விக்கும், மனித மனதின் ஆதாரமான அறவுணர்ச்சிக்கும் இன்றைய காவிரிப் படுகை கிராமங்களே சாட்சி.

இரு வதந்திகள்

இத்தகைய சூழலில், கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் இரண்டு வதந்திகள் சுற்றுகின்றன. அவற்றைத் தெளிவுபடுத்தல் அவசியம் என்று நினைக்கிறேன்.

1. முதலில் நிவாரணப் பொருட்கள் ஏற்றிவரும் வாகனங்களை மக்கள் மிரட்டி பொருட்களை வழிப்பறி செய்கின்றனர் என்பது. இது முற்றிலும் தவறானது. மக்கள் யாரும் கொள்ளைக்காரர்கள் இல்லை; திருடர்கள் இல்லை. நிவாரண வாகனங்களில் இருக்கும் பிஸ்கட் பாக்கெட்டுகளையும், அரிசியையும், தண்ணீரையும் வைத்து அவர்கள் ஒன்றும் மாடி வீடு கட்டப்போவதில்லை.

நான்கு நாட்களாகக் கடும் பசி. ஏதேனும் ஒரு வாகனம் வருமா என எதிர்பார்த்துக் காத்திருந்து; ஏற்கெனவே காத்திருந்து கிடைத்த அனுபவத்தில்; இப்போது வரும் வாகனத்தை விட்டுவிடக் கூடாது என்ற பரிதவிப்பில் அவர்கள் கேட்கிறார்கள். அந்த அவலத்தின் குரல் கோபமாகத்தான் வெளிப்படும். அதை மிரட்டல் என்றோ வழிப்பறி என்றோ அழைப்பது மோசமானது; தவறானது.

நாம் கொடுக்கும் இரண்டு கிலோ அரிசியையும் நான்கு மெழுகுவத்திகளையும் பெற்றுக்கொள்ள அவர்கள் ஆதார் அட்டையைக் காட்டி கையெழுத்து போட வேண்டும் என எதிர்பார்க்கும் மனநிலை தயவுசெய்து வேண்டாம்.

2. நிவாரணப் பொருட்களைப் பங்கிட்டுக்கொள்வதில் சாதி பார்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கிராமங்களில் ஊர்த் தெரு முதலிலும் காலனித் தெரு அதைத் தாண்டியும் இருக்கும். நிவாரண வண்டிகள் ஊரை நோக்கி வரும்போது முதலில் ஊர்த் தெரு இருப்பதால், அவர்கள் அதை முதலில் பெற்றுக்கொள்கிறார்கள் என்றும் சேரிக்கு எதுவும் செய்வதில்லை என்றும் பல பதிவுகளை இங்கு கண்டேன். இது முற்று முழுதான உண்மையோ அனைத்து ஊர்களிலும் இதுதான் நிலைமை என்பதோ இல்லை.

ஒருவருக்கு ஒருவர் இணைந்து நின்று உதவிக்கொள்கின்றனர். எங்கள் பயணத்தில், “எங்களுக்கு இவை போதும்... மற்ற ஊர்களுக்குக் கொடுங்கள்” என்று சொன்னவர்களை நாங்கள் கண்டோம். காலையிலிருந்து சாப்பிடாத எங்கள் வாகனத்தின் ஓட்டுநர், மாலை தன் கைக்குக் கிடைத்த ஒரு பொட்டலம் உணவை முகாமில் பசியில் வாடிய ஒரு குழந்தைக்குத் தந்தார். அந்த முகாமில் சமைக்கப்பட்ட உப்புமாவை ஓட்டுநருக்கு மக்கள் தந்தார்கள். அது உழைக்கும் வர்க்கத்தின் ஆதார உணர்ச்சி. இது பிளவுகளை இணைக்க வேண்டிய தருணம். மேலும் அதிகப்படுத்த வேண்டிய தருணம் அல்ல.

அவர்கள் நம்மைப் போல இருக்கிறார்கள்

நிவாரண வண்டிகளின் கண்களில் தென்பட வேண்டும் என்பதற்காக, அவர்களின் இரக்கத்தைக் கோர வேண்டும் என்பதற்காக உள்ளடங்கிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பிரதான சாலை அருகே அகதிகளைப் போலக் காத்திருக்கின்றனர். சாலையோரத்தில் பாத்திரத்தை வைத்துச் சமையல் செய்கின்றனர். வாகனங்களை நோக்கிக் கைகளை நீட்டியபடி ஓடிவருகின்றனர். இந்தக் காட்சி ஒவ்வொன்றும் நெஞ்சை அறுக்கிறது.

காவிரிப் படுகையின் விவசாயத் தொழிலாளர்கள் கடும் உழைப்புக்குப் பெயர்போனவர்கள். நாளொன்றுக்கு 10 மணி நேரத்துக்கும் மேலாகக் கடைமடையில் நின்ற கால்கள், இன்று ஒரு பிஸ்கட் பாக்கெட்டுக்காக ஏங்கி நிற்கிறது. அவர்கள் சாலையில் நின்று கையேந்துவதைக் கண்டு மனம் பொறுக்கவில்லை. தன்மானத்தை ஒதுக்கி வைத்து தங்கள் குழந்தைகளின் பசித்த வயிற்றை மனதில் கொண்டு சாலைகளில் நிற்கும் இவர்கள் என் அப்பாவைப் போல இருக்கிறார்கள். என் அண்ணனைப் போல இருக்கிறார்கள். என்னைப் போல இருக்கிறார்கள்.தன்மானத்தை ஒதுக்கி வைத்து, தங்கள் குழந்தைகளின் பசித்த வயிற்றை மனதில் கொண்டு சாலைகளில் நிற்கும் இவர்கள் என் அப்பாவைப் போல இருக்கிறார்கள். என் அண்ணனைப் போல இருக்கிறார்கள். என்னைப் போல இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x