Published : 02 Oct 2018 09:52 AM
Last Updated : 02 Oct 2018 09:52 AM

காந்தி கடிதங்கள்...

ஒவ்வொரு பிரிட்டானியருக்கும்…

ஜூலை 2, 1940

… போர் நடவடிக்கைகளை நிறுத்திவிடும்படி நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் போரிட முடியாமல் களைத்திருக்கிறீர்கள் என்ற காரணத்தால் அல்ல, போரே சாராம்சத்தில் மோசமானது என்ற காரணத்தால் இவ்வாறு கேட்டுக்கொள்கிறேன். நாஜிக்களைக் கொன்றுவிட வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால், நீங்களே அதைப் பின்பற்றுவதன் மூலம், நாஜிஸத்தை ஒருபோதும் கொல்ல முடியாது. உங்கள் ராணுவ வீரர்கள், ஜெர்மானியர்கள் செய்வதுபோலவே அழிவு வேலையைச் செய்கிறார்கள். ஜெர்மானியர்கள் செய்வதைப் போல இவர்கள் முழுத் திறமையுடன் அதைச் செய்யவில்லை என்பதுதான் வித்தியாசமாக இருக்கக்கூடும். ஆயினும், உங்கள் ராணுவத்தினர் ஜெர்மானியர்களைவிட திறமையாகச் செய்யாவிட்டாலும் அவர்களைப் போன்ற அதே திறமையை விரைவில் அடைந்துவிடுவார்கள். வேறு எந்த விதமாகவும் நீங்கள் போரில் வெற்றிபெற முடியாது. வேறு விதமாகச் சொன்னால், நீங்கள் நாஜிக்களைக் காட்டிலும் அதிகக் கொடுமையாக நடந்துகொள்ள வேண்டும் என்றாகிவிடுகிறது. எந்த லட்சியமும் அது எவ்வளவு நியாயமாக இருந்தாலும், அதன் பொருட்டு இப்போது ஒவ்வொரு நிமிடமும் நடப்பது போன்ற கண்மூடித்தனமான படுகொலைகளைச் செய்வது நியாயமாகாது. இப்போது நடத்தப்படும் மனிதத்தன்மையற்ற செயல்கள் தேவைப்படுகின்ற எந்த லட்சியத்தையும் நியாயம் என்று கூற முடியாது.

 உங்கள் உண்மையுள்ள நண்பன்,

எம்.கே.காந்தி

 

அடால்ஃப் ஹிட்லருக்கு…

ஜூலை 23, 1939

அன்புக்குரிய நண்பரே,

 மனித குலத்தின் நன்மைக்காக நான் உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று நண்பர்கள் என்னை வற்புறுத்திவந்திருக்கிறார்கள். ஆனால், நான் அந்த வேண்டுகோள்களையெல்லாம் மறுத்துவந்திருக்கிறேன்; ஏனென்றால், நான் கடிதம் எழுதுவது அதிகப்பிரசங்கித்தனமாகும். ஆனால், நான் இப்படிக் கணக்குப் பார்க்கக் கூடாது என்றும், என் வேண்டுகோளுக்கு என்ன மதிப்பு கொடுக்கப்பட்டாலும் அதை நான் தெரிவித்தே ஆக வேண்டும் என்றும் என்னுள்ளே ஏதோ ஒன்று கூறுகிறது. இன்றைய உலகில் போர் வராமல் தடுக்கக்கூடியவர் ஒருவர்தான் என்பது தெளிவாக உள்ளது. போர் வந்தால் மனித குலமே காட்டுமிராண்டி நிலைமைக்குத் தாழ்ந்துபோய்விடும். ஒரு குறிக்கோள் உங்களுக்கு எவ்வளவு சிறந்ததாகத் தோன்றினாலும் இதற்காக இவ்வளவு பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டுமா? போர் வழியே வேண்டாம் என்று விலக்கி, அதில் கணிசமான வெற்றியும் பெற்றுள்ள ஒருவரின் வேண்டுகோளை நீங்கள் கேட்பீர்களா? உங்களுக்கு நான் எழுதியது தவறு என்றால், அதை மன்னிப்பீர்களென்று எதிர்பார்க்கிறேன்.

 உங்கள் உண்மையுள்ள நண்பன்,

எம்.கே.காந்தி

இக்கடிதம் ஹிட்லரைப் போய்ச் சேராமல் பிரிட்டிஷ் அரசு தபாலைத் தடுத்துவிட்டது.

 

வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு…

 ஜூலை 17, 1944

அன்பிற்குரிய பிரதம மந்திரி,

உங்களால் ‘நிர்வாணப் பக்கிரி’ என்று ஒருகாலத்தில் வர்ணிக்கப்பட்டதாகக் கூறப்படும் என்னை நீங்கள் நசுக்க விரும்புவதாகச் சொல்லப்படுகிறது. நான் பக்கிரியாக இருக்கவே, அதுவும், நிர்வாணப் பக்கிரியாகவே இருக்கவே - இது மேலும் அதிக கடினமான காரியம் - நான் நீண்ட காலமாக முயன்றுவந்திருக்கிறேன். எனவே, நீங்கள் கூறியதை நீங்கள் அவ்வாறு நினைத்துக் கூறாவிட்டாலும், ஒரு பாராட்டாகவே நான் கருதுகிறேன். எனவே நான், அந்த முறையிலேயே உங்களை அணுகி என்னிடம் நம்பிக்கை வைக்கும்படியும், உங்களுடைய மக்களுக்காகவும் என் மக்களுக்காகவும் இவர்கள் மூலம் உலகத்திற்காகவும் என்னைப் பயன்படுத்தும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.

  உங்கள் உண்மையுள்ள நண்பன்,

       எம்.கே.காந்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x