Last Updated : 05 Oct, 2018 09:35 AM

 

Published : 05 Oct 2018 09:35 AM
Last Updated : 05 Oct 2018 09:35 AM

தலைவன் 11 தகவல்கள்: மு.க.ஸ்டாலின்

ஸ்டாலின் ஆகிய அய்யாதுரை

மு.கருணாநிதி - தயாளு தம்பதியின் இரண்டாவது மகனாக 1953, மார்ச் 1 அன்று பிறந்தார் ஸ்டாலின். தொண்டர்களால் ‘அய்யா’ என்றழைக்கப்பட்ட பெரியார், அண்ணாவின் முழுப் பெயரான அண்ணாதுரை இருவர் பெயரையும் போற்றும் வகையில் ‘அய்யாதுரை’ என்ற பெயரையே மகனுக்குச் சூட்ட முடிவெடுத்திருந்தார் கருணாநிதி. அதே காலகட்டத்தில் மறைந்தார் ரஷ்ய அதிபர் ஸ்டாலின். அவர் மீது தனக்கிருந்த மதிப்பை வெளிப்படுத்தும் விதமாக ஸ்டாலின் பெயரைச் சூட்டினார் கருணாநிதி. அந்நாட்களில் சர்ச் பார்க் பள்ளியில் இருபாலரும் படிக்கலாம். “ஸ்டாலின் பெயரை மாற்றிக்கொள்ள முடியுமா?” என்று கேட்டது பள்ளி நிர்வாகம். பள்ளியையே மாற்றிவிட்டார் கருணாநிதி.

அரசியல் பிரவேசம் @ 15 வயது

திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் மூன்று வயதுதான் இடைவெளி. திமுகவின் வளர்ச்சியும் கருணாநிதியின் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருந்ததால், தன் தந்தையோடு ஏனைய தலைவர்களையும், கட்சியின் இயக்கத்தையும் அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு ஸ்டாலினுக்குக் கிடைத்தது. அரசியல் ஆர்வம் உந்தித் தள்ள பள்ளிப் பருவத்திலேயே நண்பர்களுடன் சேர்ந்து கோபாலபுரம் முடி திருத்தகம் ஒன்றில் ‘இளைஞர் திமுக’வைத் தொடங்கினார் ஸ்டாலின். 1968 செப்டம்பர் 30 அன்று தன்னுடைய பதினைந்தாவது வயதில் கோபாலபுரத்தில் ஸ்டாலின் நடத்திய அண்ணா பிறந்த நாள் விழா கூட்டம்தான் ஒருவகையில் அவருடைய அரசியல் பிரவேசம்.

நாடகம், சினிமா, பத்திரிகை

தீவிரமான எம்ஜிஆர் ரசிகர் ஸ்டாலின். எம்ஜிஆர் படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சிக்குச் சென்றவர். தன்னுடைய முதல் நாடகத்தை ஸ்டாலின் அரங்கேற்றியதும் எம்ஜிஆர் தலைமையில்தான். மகன் படிக்க வேண்டும் என்று நினைத்தார் கருணாநிதி. நாடகம், கட்சிக்கான பிரச்சாரம் என்று முளைவிட ஆரம்பித்த ஸ்டாலினுக்கு எம்ஜிஆர் மூலம் நாடக மேடையிலேயே அறிவுரை சொல்ல வைத்தார். ஸ்டாலினோ அரசியலை நோக்கி நாடகம், சினிமா, பத்திரிகை என்று நகர ஆரம்பித்தார். பி.ஏ. அரசியல் படித்தவர் ‘முரசே முழங்கு’, ‘வெற்றி நமதே’, ‘திண்டுக்கல் தீர்ப்பு’ என்று முதலில் பிரச்சார நாடகங்களில் நடித்தார். நா.பார்த்தசாரதியின் நாவலான ‘குறிஞ்சி மலர்’ தூர்தர்ஷனில் தொடர் நாடகமாக வந்தபோது, அதன் நாயகன் ஆனார். ‘மக்கள் ஆணையிட்டால்’, ‘ஒரே ரத்தம்’ ஆகிய படங்களிலும் நடித்தார். பிற்காலத்தில் ‘இளைய சூரியன்’ என்று ஒரு பத்திரிகையும் நடத்தினார். செயல் எதுவாயினும் ஸ்டாலினுக்கு நோக்கம் அரசியலாகவே இருந்தது.

களம் அமைத்த நெருக்கடிநிலை

துர்காவைத் திருமணம் செய்துகொண்டபோது ஸ்டாலினுக்கு வயது 22. எளிமையான விழா. கடும் உடல் நலக்குறைவில் இருந்தபோதும் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தினார் காமராஜர். நெருக்கடிநிலைத் தாக்குதலின் ஒரு பகுதியாக, அதுவரை தீவிர அரசியலில் இல்லாத ஸ்டாலினையும் திடீரென்று கைதுசெய்தது இந்திரா அரசு. முதல் நாள் வரை முதல்வரின் மகன். திருமணமாகி ஆறு மாதங்கள்கூட ஆகியிருக்கவில்லை. உதயநிதியை வயிற்றில் சுமந்துகொண்டிருந்தார் துர்கா. சிறையில் அடி, உதை, ரத்தம், வலி, அவமானம் எல்லாவற்றையும் சுமந்தார் ஸ்டாலின். திமுக, தமிழக அரசியல் இரண்டிலும் ஸ்டாலினுக்கான இடத்தையும் அதுவே அமைத்துக்கொடுத்தது.

முரண்களில் உறவு

கூடுமானவரை எல்லோருடனும் ஆக்கபூர்வமான உறவுடன் இருக்க முயற்சிப்பவர் ஸ்டாலின். திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது முதல் முறை மேயரானவர் ஏராளமான பாலங்கள், கட்டமைப்புகளை உருவாக்கினார். மக்களிடம் அவருக்கு உண்டான செல்வாக்கு அடுத்த முறையும் அவரையே மேயராகத் தேர்ந்தெடுக்க வைத்தது. ஆனால், சட்ட மன்றமோ இம்முறை அதிமுக கையில் இருந்தது. ஸ்டாலினுக்கே தெரியாமல் மாநகராட்சி மன்றத்தைக் கலைக்கும் பரிந்துரைக் கடிதத்தை ஆணையரைக் கொண்டு எழுத வைத்தார் ஜெயலலிதா. அதைச் செயல்படுத்த முடியாத நிலையில், ‘ஒருவருக்கு ஒரு பதவி’ எனும் சட்டத்தைக் கொண்டுவந்து, அப்போது சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்த ஸ்டாலினைப் பதவி விலக வைத்தார். ஸ்டாலின் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் என்று சொல்லி ஸ்டாலினோடு, கருணாநிதியையும் சேர்த்துக் கைதுசெய்து அதிர்ச்சி கொடுத்தார். இவ்வளவையும் தாண்டி, ஜெயலலிதா மீது மதிப்பு கொண்டிருந்தார் ஸ்டாலின். “ஒரு பெண்ணாக எல்லா சவால்களையும் எதிர்த்து நின்றவர் என்ற மரியாதை எப்போதும் அவர் மீது உண்டு. மாநில உரிமையையும் விட்டுக்கொடுக்க மாட்டார்” என்று சொல்வார்.

பொறுமை ஒரு ராஜதந்திரம்

தமிழகத்தில் தன் பாதம் படாத ஊர் இல்லை என்கிற அளவுக்குச் சுற்றுப்பயணம் செய்தவர் ஸ்டாலின். கட்சியினரைத் தாண்டி பொதுத் தரப்பினரோடும் தொடர்பில் இருக்க விரும்புபவர். எட்டுவழிச் சாலை, ஹைட்ரோ கார்பன் திட்டம் இவையெல்லாம் தொடர்பில் அந்தந்தப் பகுதி விவசாயிகளை அழைத்து, அவர்கள் கருத்துக் கேட்டு அதன்படியே முடிவெடுத்தார் ஸ்டாலின். தனக்கு நிபுணத்துவம் இல்லாத துறைகளில் மூக்கு நுழைக்கக் கூடாது என்றும் நினைப்பார். ‘கருணாநிதி புகழஞ்சலி’ கூட்டம் ஓர் உதாரணம். பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், திரைக்கலைஞர்கள் என்று பல தரப்பினருக்கும் திமுக தனித்தனியே நடத்திய இந்நிகழ்ச்சிகளில் அரசியல் மேடை நீங்கலாக ஏனைய எந்த மேடையிலும் அவர் ஏறவில்லை. பத்திரிகை விமர்சனங்களுக்கும் பெரிய முக்கியத்துவம் அளிப்பார். எதையும் நிதானமாக அணுகுவது ஸ்டாலினின் பாணி!

மறக்க முடியாத மூன்று பேர்

தன் வாழ்வில் மறக்க முடியாத மூவர் என்று ஸ்டாலின் குறிப்பிடும் கட்சி முன்னோடியினர் மூவர். சிட்டிபாபு, சுப்பு, உசேன். “சிறையில் என் மீது விழுந்த அடியையெல்லாம் சிட்டிபாபு தன் உடலில் வாங்கிக்கொண்டார். அவர் மட்டும் தடுத்திருக்காவிட்டால், நான் இன்று இல்லை” என்று பல முறை கூறியிருக்கிறார் ஸ்டாலின். சிறையில் ஸ்டாலினைப் பல முறை பாதுகாத்தவர் சிட்டிபாபு. ஸ்டாலினை இளைஞரணிச் செயலாளராக நியமிக்க அழுத்தம் கொடுத்தவர் சுப்பு. நெருக்கடிநிலையின்போது சிறை சென்றவர்களுக்கெல்லாம் 1976, 1980 தேர்தல்களில் வாய்ப்பளித்த கருணாநிதி, ஸ்டாலினுக்கு இடம் அளிக்கவில்லை. 1984 தேர்தலில் ஆயிரம்விளக்குத் தொகுதி வேட்பாளராக அவரை அறிவிக்கச் சொல்லி தீர்மானம் போட்டுக்கொடுத்தவர் அத்தொகுதியின் செயலரான உசேன்.

அரை நூற்றாண்டு அரசியல் பயணம்

சென்னை 75-வது வட்ட திமுக உறுப்பினராகப் பதிவு செய்துகொண்ட ஸ்டாலின், வட்டப் பிரதிநிதி, பகுதி பிரதிநிதி, மாவட்டப் பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர், இளைஞரணிச் செயலாளர், திமுக துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் என்று தலைமைப் பொறுப்புக்கு வர 51 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 1987, 1996, 2001, 2006, 2011, 2016 என்று இதுவரை ஆறுமுறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார் ஸ்டாலின். 2006-ல்தான் அமைச்சராகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. சட்ட மன்ற உறுப்பினராக, மேயராக, அமைச்சராக என்று இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட பணிகளில் எல்லாம் முத்திரை பதித்திருக்கிறார் ஸ்டாலின். செயல்திறன் மிக்க அதிகாரிகளை அருகில் வைத்துக்கொண்டு காரியங்களைத் துரிதமாகச் செய்வது ஸ்டாலின் பாணி.

குளியலறைப் பாடகர்

பரபரப்பான அரசியல் பணிகளுக்கு இடையே ஸ்டாலின் தேடும் ஒரே ஆறுதல் இசை. எம்ஜிஆர், சிவாஜி சினிமா பாடல்கள் அடிக்கடி கேட்பார். பாடகர்களில் பிடித்தவர் நாகூர் ஹனிபா. வீட்டில் பாடும் பழக்கம் ஸ்டாலினுக்கு உண்டு. மகள் செந்தாமரையின் திருமணத்தின்போது மேடையிலேயே பாடினார். முகநூல், டுவிட்டர் போலவே வாட்ஸ்அப்பையும் பயன்படுத்துகிறார் ஸ்டாலின். திமுக சட்ட மன்ற உறுப்பினர்களுக்கென ஒரு வாட்ஸ்அப் குழு தொடங்கி, உறுப்பினர்களின் நல்ல செயல்களைப் பதிவேற்றச் சொல்லிப் பாராட்டுவது அவரது பழக்கம்.

உடலே மெய்

மகன் உதயநிதி, மகள் செந்தாமரை இருவருக்கும் திருமணம் முடித்து, பேரன் பேத்தி பார்த்துவிட்டாலும் ஸ்டாலின் இளமையோடு நிற்கக் காரணம், உடற்பயிற்சியில் அவர் காட்டும் அக்கறை. உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அதிகாலை 5.30 மணிக்கு அந்த ஊர் மைதானம் அல்லது பூங்காவில் டி-ஷர்ட், ஷூ சகிதம் ஜாகிங் போவார் ஸ்டாலின். யோகாவிலும் ஈடுபாடு உண்டு. உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அதிகம். முடிந்தவரை வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவையே சாப்பிடுவார்

காத்திருக்கும் பெரும் பொறுப்பு

திமுக தலைவராகக் கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் பல காரியங்களை ஆற்ற வேண்டிய பொறுப்பு ஸ்டாலின் முன் நிற்கிறது. கட்சிக்குள் புதிய தலைமுறைத் தலைவர்களை உருவாக்குவது, காலத்துக்கேற்ப கட்சியைத் தகவமைப்பது போன்ற சவால்கள் கட்சி சார்ந்தவை. ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பின் ஒரு வலிய தலைவரை எதிர்நோக்கியிருக்கும் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எல்லோருக்குமான தலைவராக தன்னை வளர்த்தெடுத்துக்கொள்வது மாநிலம் சார்ந்தும் சுயம் சார்ந்தும் அவர் முன்னிற்கும் பெரும் சவால்கள். ஸ்டாலின் உணர்ந்திருக்கிறார்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x