Published : 04 Oct 2018 10:39 AM
Last Updated : 04 Oct 2018 10:39 AM

தேச விரோத அமைப்பா ஆர்எஸ்எஸ்?

டெல்லியில் நடந்த ஆர்எஸ்எஸ் இயக்க மூன்று நாள் மாநாடு, அதன் முக்கிய நோக்கத்தில் வெற்றி பெற்றுவிட்டது. தாங்கள் கவர நினைத்தவர்களை - தோற்றத்தை மாற்றி ஈர்த்துவிட்டது. பணிவடக்கமுள்ள இந்திய ஊடகங்களும் விமர்சகர்களும் சந்தேகம் ஏதும் படாமல், ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தேவைப்பட்ட, அது விரும்பியபடியிலான கேள்விகளையே கேட்டனர். ஒரு கடுமையான, ஆழமான கேள்வி ஆர்எஸ்எஸ் அமைப்பை நோக்கிக் கேட்கப்பட வேண்டிய நேரம் இது. அது, தேச விரோத அமைப்பா ஆர்எஸ்எஸ்?

வெளிப்பார்வைக்கு இது வித்தியாசமான கேள்வியாகவே தோன்றும். ‘தேசியவாதம்’, ‘இந்தியத்தன்மை’, ‘இந்துத்துவம்’ என்பதெல்லாம் ஆர்எஸ்எஸ்ஸின் அடிப்படை முழக்கங்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகமும் புறமும் எனக்குத் தெரியும். நூற்றுக்கணக்கான ஸ்வயம்சேவக்குகளும் பல பிரச்சாரகர்களும் எனக்குப் பரிச்சயம்.

கொள்கையும் நடத்தையும்

ஒவ்வொரு ஆர்எஸ்எஸ் தொண்டரும் தன்னை தேசியவாதியாகத்தான் கருதிக்கொள்கிறார். கம்யூனிஸ்ட்டுகளைப் போல, அந்தக் கால சோஷலிஸ்ட் இயக்கத்தவர்களைப் போல சராசரி ஆர்எஸ்எஸ் தொண்டரும் மிகுந்த நேர்மையாளராகவும், லட்சியவாதியாகவும்தான் இருக்கிறார். தேசியப் பேரிடர் காலங்களில் எந்தவித எதிர்பார்ப்பும், அங்கீகாரமும் இல்லாமல் மீட்பு – நிவாரணப் பணிகளில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் ஈடுபடுவதை நானே அறிந்திருக்கிறேன். அந்த இயக்கம் ‘அதிதீவிர தேசியவாதியாக’ இருக்கிறது என்பதுதான் இப்போதைய விமர்சனமே. எனவே, அது தேசியவாத அமைப்புதானா என்று கேட்பது மூர்க்கத்தனமானது.

அதேசமயம், இக்கேள்வியை மிகத் தீவிரமாகவும் நியாயமாகவும் விவாதிக்க வேண்டியிருக்கிறது. இந்தியா என்கிற தேசத்தைக் கட்டமைப்பதில் ஆர்எஸ்எஸ்ஸும் அதன் பரிவாரங்களும் விடுக்கும் சவால்களை நாம் விவாதிப்பதே இல்லை. ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பின் சித்தாந்தமும், தேசத்துடன் அதற்கு இருந்த, இருக்கிற, இருக்கப்போகிற தொடர்பும் விவாதிக்கப்பட வேண்டியவை.

சுதந்திரத்துக்கு முந்தைய காங்கிரஸ்

கடந்த காலம் தொடர்பான சந்தேகத்துக்கிடமில்லாத சில உண்மைகளை நினைவுகூர்வோம். 1925-ல் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தேசிய இயக்கத்தில் ஆர்எஸ்எஸ் பங்கெடுத்தது கிடையாது. அதன் சார்பு அமைப்பான இந்து மகாசபை போன்றவை தேசிய இயக்கத்தையே எதிர்த்தன. “இனி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு விசுவாசமாக இருப்பேன்” என்று நான்கு முறை கருணை மனு போட்டதன் பிறகே அந்தமான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சாவர்க்கரின் சித்தாந்தங்கள்தான் ஆர்எஸ்எஸ் உருவாக்கியவர்களை மிகவும் கவர்ந்தவை.

சிறையிலிருந்து விடுதலையானதும் பிரிட்டிஷ் அரசு கொடுத்த உதவித் தொகையைப் பெற்றுக்கொண்டு அவர்களுடைய ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தவர்தான் சாவர்க்கர். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைத்துச் செயல்பட்டவர் இந்து மகாசபையின் மற்றொரு தலைவர் சியாமபிரசாத் முகர்ஜி.

காலனி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் சேராமல் ஒதுங்கியிருந்தது. முஸ்லிம் லீக் கேட்பதற்கு முன்னதாகவே, தேசத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று கேட்டவர்கள் இந்து தேசியவாதிகள். மகாத்மா காந்தி படுகொலையில் ஈடுபட்ட நாதுராம் கோட்சேவின் பின்னணி ஊர் அறிந்த ரகசியம். இந்தக் காரணங்களுக்காக அதை தேச விரோத அமைப்பு என்று இப்போது முத்திரை குத்திவிட முடியாது.

சுதந்திரத்துக்குப் பிந்தைய காங்கிரஸ்

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு ஆர்எஸ்எஸ் என்ன செய்தது என்பது முக்கியமானது. ஆனால், இதற்கான பதிலும் எதிர்மறையானது என்பதுதான் துரதிருஷ்டவசமானது. இந்தியக் குடியரசின் சில முக்கிய அடையாளங்களை மதிக்க மறுத்த அமைப்புகளில் ஒன்று ஆர்எஸ்எஸ். அவை - தேசியக் கொடி, தேசிய கீதம், இந்திய அரசியலமைப்புச் சட்டம்.

அது எப்படியென்றால், நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் முதல் முறையாக ஒரு ஆர்எஸ்எஸ் தலைவர் கூறுகிறார், “அரசியல் சட்டத்தில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று. அவருக்கு முன் இப்பொறுப்பை வகித்தவர்கள் இதற்கு நேர் எதிரான கருத்தைத்தான் கூறி வந்துள்ளனர். அதுமட்டுமின்றி அரசியல் சட்டம் வலியுறுத்தும் முக்கியமான அம்சங்களான சமத்துவம், மதச்சார்பின்மை, கூட்டாட்சிமுறை, ஜனநாயகம் ஆகிய எதுவுமே ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு உவப்பானவை அல்ல. 1992-ல் நடத்தப்பட்ட பாபர் மசூதி இடிப்பு அரசியல் சட்டப்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவையே உடைத்ததுதான். அரசியல் சட்டத்துக்கு விசுவாசமான தேசபக்திதான் தேசிய அரசியல் வாழ்க்கையின் இதயம் என்றால், ஆர்எஸ்எஸ் அந்த நிலைக்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.

இந்திய தேசியவாதத்துக்கு நேரெதிர்

இந்திய தேசியவாதத்துக்குப் பொருத்தமில்லாத வகையில் அதன் சித்தாந்தங்களும் செயல்களும் இருப்பதால் அது ‘ஐரோப்பிய இறக்குமதி’ அமைப்பு என்பது அப்பட்டமாக வெளிப்படுகிறது. இப்போது எவராலும் ஆதரிக்கப்படாத ‘தேச-அரசு’ என்ற சித்தாந்தத்தை ஆர்எஸ்எஸ் ஸ்வீகரித்துக்கொண்டுள்ளது. ஒரு தேசத்தின் கலாச்சார எல்லைகளும் அரசியல் எல்லைகளும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது இதன் அடிப்படை.

ஒரே மாதிரியான இனம், மதம், மொழி, கலாச்சாரம் கொண்டதுதான் அரசு என்று ஐரோப்பாவில் கருதப்படுகிறது. இந்தியாவில் அதையே ‘இந்தி’, ‘இந்து’, ‘இந்துஸ்தான்’ என்று சாவர்க்கர் முழங்கி அடையாளப்படுத்தினார். இந்தியாவிலேயே வளர்ந்த தேசியவாதம், ஐரோப்பிய தேசியவாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரே கலாச்சார – அரசியல் எல்லைகளாக இருக்க வேண்டும் என்பதற்காக சிந்தப்பட்ட அர்த்தமற்ற ரத்த பலிகளை இந்தியா ஏற்கவில்லை. கலாச்சாரம், மொழி, மதம் ஆகியவற்றில் ஆழமான வேற்றுமைகள் இருந்தாலும் அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்தி வளர்ச்சி காண்பதுதான் இந்திய தேசியத்துவம்.

பன்மைத்துவத்தில் விரியும் உலகம் இப்போது இந்தியாவின் தேசியவாத மாதிரியைக் கைக்கொள்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்போ ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்த, பிரிவினையை வளர்க்கும் தேசியத்துவத்தைப் பிடித்துத் தொங்குகிறது. பெரும்பான்மைச் சமூகத்தைப் பிற சமூகங்களிலிருந்து பிளவுபடுத்தும் அதன் செயல் இந்திய தேசியத்துவத்துக்கு மிகப் பெரிய தடையாக விளங்குகிறது.

செயல்பாட்டு முரண்பாடு

தேச ஒருமைப்பாட்டுக்காகப் பாடுபடுவதாகக் கூறிக்கொள்ளும் ஒரு அமைப்பு, நம்முடைய தேச ஒற்றுமைக்கே ஆபத்தாக உள்ள பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வுகாண நேரமோ, ஆற்றலோ ஒதுக்காமல் இருப்பது விந்தையாக இல்லையா? உதாரணத்துக்கு கர்நாடகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் காவிரிப் பிரச்சினை, பஞ்சாபுக்கும் ஹரியாணாவுக்கும் தண்ணீர்ப் பிரச்சினை, தெலங்கானா, விதர்பா ஆகியவற்றில் பதற்றங்கள், பஞ்சாபி-இந்தி, கன்னடம்-மராட்டி மொழி மோதல்கள், வட கிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக பெங்களூருவில் வன்முறைத் தாக்குதல், இந்தி பேசுவோர் மீது மும்பையில் தாக்குதல் ஆகியவற்றைத் தீர்க்க ஆர்எஸ்எஸ் எடுத்த முயற்சிகள் என்ன?

ஏதாவது ஒரு விவகாரத்தில் மதம் சம்பந்தப்பட்டால் மட்டுமே ஆர்எஸ்எஸ் தேசியவாதிகள் தலையிடுகின்றனர். அதற்காக இந்து மதம் மீது அவர்களுக்கு அக்கறை என்றும் கூறிவிட முடியாது. வைதீக இஸ்லாமும் வைதீக கிறிஸ்தவமும் தங்களுடைய கருத்துகளை அப்படியே மற்றவர்கள் மீது திணிப்பதற்கு ஒப்ப, வைதீக இந்துத்துவத்தைத்தான் ஆர்எஸ்எஸ் நெருக்கமாகக் கருதுகிறது. ஆனால் உண்மையான இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கை, மனிதாபிமானம் மற்றும் எல்லா மதங்களையும் உயர்வாக நினைக்கும் சமநோக்குப் பார்வைதான்.

இந்தியாவின் தேச ஒற்றுமைக்கு பெரிய ஆபத்தாக இருப்பது இந்து-முஸ்லிம் இடையிலான மோதல்கள்தான். எனவே, இந்து-முஸ்லிம் இடையே பதற்றத்தை அதிகப்படுத்துகிறவர்களை தேச விரோதிகளாகவும், தேசத் துரோகக் குற்றம் இழைப்பவர்களாகவும்தான் கருத வேண்டும்.

பிரிவினைவாதிகள் இந்தியாவின் பிரதேச ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தானவர்கள். இடதுசாரி தீவிரவாதிகள் இந்திய அரசின் இறையாண்மைக்கு சவாலானவர்கள். ஆர்எஸ்எஸ் விடுக்கும் சவாலோ இன்னும் ஆழமானது. அது இந்தியா என்ற நாட்டின் கருப்பொருளையே வேறுவிதமாகச் சித்தரிக்கிறது. இந்தியக் குடியரசின் ஆன்மாவே அதுதான். இந்தச் செயல் தேச விரோதச் செயல் இல்லையென்றால், வேறு எதுதான் தேச விரோதச் செயல்?

ஒரு காந்திய முடிவு

ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தடைவிதிக்க வேண்டும் என்பதை நான் ஆதரிக்க மாட்டேன். தேசம் பற்றிய அதனுடைய சித்தாந்தமும் வழிமுறைகளும் கலாச்சார-அரசியல் நோயாக இருக்கிறது. இதைக் குணப்படுத்த வேண்டுமே தவிர தடைவிதிக்கக் கூடாது. நவகாலத்து இந்துவுக்கு ஏற்பட்ட தாழ்வுணர்ச்சியிலிருந்து இந்தக் கருத்து வெளிப்படுகிறது.

நம்முடைய மேற்கத்திய பாணி, மதச்சார்பற்ற கொள்கையிலிருந்து இப்படித் தோன்றியிருக்கிறது. நான் சொல்வது வினோதமாகத் தோன்றலாம். ஆம், இந்தியாவின் பரந்துபட்ட கலாச்சாரத்தை ஆர்எஸ்எஸ் அறிந்துகொள்ளச் செய்ய வேண்டும். பன்மைத்துவம் மிக்க மரபுகளை அதை உணரச் செய்ய வேண்டும்.

கலாச்சாரரீதியாகத் தங்கள் நாட்டின் ஐக்கியம் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த ரவீந்திரநாத் தாகூர், காந்தி ஆகியோருக்கு இந்து மதம் குறித்து நல்ல புரிதல் இருந்தது. விஞ்ஞான பவனத்தில் கூட்டம் நடத்தி மேலும் பலரைச் சென்றடைய வேண்டும் என்று கருதாமல் தனக்குள்ளேயே ஆத்மபரிசோதனை செய்துகொண்டால், காங்கிரஸுக்கு காந்தி சொன்ன அறிவுரையை சர்சங்கசாலக் மோகன் பாகவத், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் கூறக்கூடும். அது, ‘கலைந்துவிடுங்கள்!’

யோகேந்திர யாதவ்

தமிழில்: சாரி

 ‘தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x