Last Updated : 03 Aug, 2018 08:58 AM

 

Published : 03 Aug 2018 08:58 AM
Last Updated : 03 Aug 2018 08:58 AM

திருத்தி எழுத முடியுமா அரசியல் சட்டத்தை?

பாஜகவும் அதன் முதுகெலும்பான ஆர்எஸ்எஸ் அமைப்பும் இரட்டை நாவுகளில் பேசினாலும் இந்திய வரலாற்றையும் அரசியல் சட்டத்தையும் இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்திலாவது திருத்தி எழுதிவிட வேண்டும் என்பது அவற்றின் அடங்காத ஆவல். அரசியல் சட்டத்துக்குக் காரணமாக இருந்த நம்முடைய சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் கலந்துகொண்டதே இல்லை. எனவே, வரலாற்றை அழிப்பது முக்கியம். வலதுசாரிகள் என்ன செய்வார்கள் என்று எளிதில் ஊகித்துவிடலாம், அவர்களிடம் முழு அதிகாரம் கிடைத்தால், முதலில் பலியாவது மதச்சார்பின்மைக் கொள்கைதான், அடுத்தது ஜனநாயகம்.

இந்திய அரசியல் சட்டம் மிகப் பெரியது, நிர்வகிக்க கடினமானது என்றாலும் உலகிலேயே ஈடு இணையற்றது. அரசியல் சட்டத்தை வகுத்ததில் பெனகல் நரசிங்க ராவ், அம்பேத்கர் ஆகியோரின் பங்கு ஈடு இணையற்றது. இருவரும் சட்டம், வரலாறு, அரசியல், சமூகவியல், இலக்கியம் ஆகிய துறைகளில் நிரம்பப் படித்தவர்கள். அத்துடன் பிற நாட்டுச் சட்டங்களை நன்கு படித்துத் தேறியிருந்ததால் அவற்றுடன் ஒப்பிட்டு, குறைகளைக் களைந்து நிறைகளைச் சேர்த்தனர்.

இந்திய வரலாற்றில் நடந்த இருவேறு நிகழ்வுகள் அரசியல் சட்டத்தை இயற்ற முக்கியக் காரணங்களாக அமைந்தன. ஒன்று, இந்தியாவை நிர்வகிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் இயற்றிய பல்வேறு சட்டங்கள் – குறிப்பாக இந்திய அரசுச் சட்டம்-1935. இரண்டாவது, இந்திய விடுதலைப் போர். சுதந்திரப் போராட்டம் மக்களிடையே கனவுகளை, கற்பனைகளை, லட்சியங்களை விதைத்தது. அவை அனைத்துமே சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஜனநாயகமாகவே திகழ்ந்தன.

மோதிலால் நேரு கமிட்டி

எதிர்கால இந்தியாவுக்கான அரசியல் சட்டத்தை வகுக்க 1928 மே 19-ல் மோதிலால் நேரு தலைமையில் ஒரு குழுவை நியமித்தது அனைத்துக் கட்சிக் கூட்டம். சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகள், சிறுபான்மைச் சமூக உரிமைகள், வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்ற எல்லாவற்றையும் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அக்குழு பணிக்கப்பட்டது.  இந்தக் குழுவின் அறிக்கையே 1940-களில் நியமிக்கப்பட்ட அரசியல் சட்ட நிர்ணய சபைக்கு ஊக்குவிப்பாக அமைந்தது. அரசியல் சட்ட சபையின் லட்சியம், நோக்கம் தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய ஜவாஹர்லால் நேரு, இந்த அவையின் பலமே மக்கள்தான் என்பதை அங்கீகரித்தார். நாம் எதுவரை போக வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களோ அதுவரை போவோம் என்றார் நேரு.

தேசப் பிரிவினையின் பின்னணியில்தான் அரசியல் சட்டசபை கூடி சட்டங்களைத் தொகுத்தது. உயிருக்கும் உடைமைகளுக்கும் பெருத்த சேதம் விளைவிக்கும் மதக் கலவரங்களுக்கு இடையிலும் சுதந்திரப் போராட்டம், ஜனநாயகம், அடிப்படை உரிமைகள், சிறுபான்மைச் சமூகத்துக்கான உரிமைகள், சட்டப்படியான ஆட்சி, வரைமுறைக்கு உட்பட்ட அரசு, சுதந்திரமான நீதித் துறை ஆகிய லட்சியங்களை விடாமல் கெட்டியாகப் பற்றி நின்றது. காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட பல நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக சர்வாதிகார ஆட்சியில் மீண்டும் சிக்கிக்கொண்டபோதிலும் இந்தியாவில் மட்டும் ஜனநாயகம் தழைக்க அதன் அரசியல் சட்டம்தான் முக்கியக் காரணம்.

அரசியல் சட்டம் சமகாலத் தேவைக்குப் போதவில்லை என்றால் அதை மாற்றலாம். ஆனால், அதற்கு நல்ல காரணங்கள் இருக்க வேண்டும். வலதுசாரிகள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதற்காக வரலாற்றை அழித்து எழுதக் கூடாது. பண்டைய இந்தியக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் அரசியல் சட்டம் எப்படிப்பட்டதாக இருக்கும்? இந்து பாரம்பரியப்படியான மாநில, கிராமப் பஞ்சாயத்துகளை அடியொற்றி ஜனநாயகமுள்ள அரசியல் சட்டத்தை இயற்றிவிட முடியாது என்று அம்பேத்கர் 1948-ல் எச்சரித்திருக்கிறார். கிராமம் என்பது என்ன – அறியாமை இருளில் மூழ்கியது, குறுகிய மனப்பான்மை கொண்டது, வகுப்புவாதத் தன்மையது என்றார் அம்பேத்கர். இந்தியாவின் ஆன்மாவைப் பிரதிபலிக்கும் அரசியல் சட்டம் தேவை என்று பேசும் வலதுசாரிகள், சாதிகளும் பாலினப் பாகுபாடும் இந்திய சமூகத்தில் ஆழமான பிளவுகளை ஏற்படுத்திவிட்டதை நினைவுகூர வேண்டும்.

அரசியல் சட்டம் அனைவருக்குமானது

ஜனநாயக வேட்கைக்குக் குரல்கொடுக்கிறது இந்திய அரசியல் சட்டத்தின் முகப்புரை. அரசியல் சட்டம் என்பது ஒரு தரமான நிர்வாக நிலையை உறுதிசெய்வது. அது வெளிப்படுத்தும் விழுமியங்களோ அனைவருக்குமானது. பெரும்பான்மையாக இருக்கும் ஒரு பிரிவின் நம்பிக்கையை மட்டுமே அது பிரதிபலிப்பதில்லை. சிறுபான்மைக் குழுக்களின் விழுமியங்களை நிராகரிப்பதும் இல்லை. நாம் இதைத்தான் நம்ப வேண்டும், இதைத்தான் செய்ய வேண்டும் என்று வலதுசாரிகள் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள்.

அரசியல் சட்ட நிர்ணய சபையில் 4.11.1948-ல் இத்தகைய போக்கைத்தான் அம்பேத்கர் எச்சரித்துப் பேசினார். கிரேக்கத்தின் வரலாற்றாசிரியர் கிரோட்டை மேற்கோள் காட்டி அரசியல் சட்ட தார்மிக நெறியை வலியுறுத்தினார். அரசியல் சட்டத்தை வழிபடத் தேவையில்லை, மதித்து நடந்தால் போதும். மக்களுக்கு முழுச் சுதந்திரமும் உரிமைகளும் இருக்கும்போது அரசியல் சட்டத்தின் மூலம் அனைத்து ஜனநாயகப் பலன்களையும் மக்கள் பெற முடியும். மாற்றுக் கருத்துகளுக்கும் ஜனநாயகம் இடம்தருவதுடன் இரு தரப்பும் பேசி சமரசம் காணவும் உதவுகிறது.

அரசியல் சட்ட தார்மிகம் என்பது பழக்கங்கள் மூலம் கைக்கொள்ளப்பட வேண்டியது. நம் மக்கள் அதைக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்திய நிலத்தில் ஜனநாயகம் என்பது மேல்மண் மாதிரி. அடியில் நம் நாடு ஜனநாயகமற்றது. அரசியல் சட்ட ஜனநாயகம் காரணமாகத்தான் நாம் ஒருவருக்கொருவர் எந்த வகையில் உறவினர் என்ற சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அரசியல் சட்டம் நமக்கு ஜனநாயகம் என்றால் என்ன என்று புரிய வைத்ததுடன் மேலும் அதிக ஜனநாயக உரிமைகளுக்கு ஏங்குபவர்களாக மாற்றியிருக்கிறது.

அரசியல் சட்டத்தை மாற்றியே தீர வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக 17.12.1946-ல் அரசியல் சட்ட நிர்ணய சபையில் பின்வரும் கருத்தை வலியுறுத்தியிருக்கிறார் அம்பேத்கர். ‘அதிகாரம் என்பது ஒன்று, அறிவு ஞானம் என்பது வேறொன்று’. ஒரு தேசம் செல்ல வேண்டிய திசையைத் தீர்மானிப்பவர்கள் அதில் வாழும் மக்களின் கண்ணியம், தலைவர்களின் கண்ணியம், அரசியல் கட்சிகளின் கண்ணியம் என்று தனித்தனியாகப் பார்க்க வேண்டியதில்லை. நாடு செல்ல வேண்டிய எதிர்காலப் பாதையே எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் போதுமானது.

- நீரா சந்தோக், டெல்லி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை முன்னாள் பேராசிரியர்

சுருக்கமாகத் தமிழில்: சாரி,

‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x