Last Updated : 29 Aug, 2018 09:23 AM

 

Published : 29 Aug 2018 09:23 AM
Last Updated : 29 Aug 2018 09:23 AM

ஸ்டாலின் முன்னிருக்கும் சவால்கள்!

திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார் மு.க.ஸ்டாலின். கட்சிக்குள் கொண்டாட்டங்கள் களைகட்டியிருக்கின்றன. கட்சி சாராதவர்கள் மத்தியிலும் இது தொடர்பாக ஒரு நேர்மறை எண்ணம் எதிரொலிப்பதைப் பார்க்க முடிகிறது. தமிழகம் இன்று எதிர்கொண்டிருக்கும் பல்வேறு சவால்களுக்குத் தீர்வு காண்பதில் ஒரு அரசியல் தலைவராக ஸ்டாலின் முழுமூச்சுடன் ஈடுபடுவாரா எனும் அடிப்படையில் உருவாகியிருக்கும் மனநிலையாக இதைக் கருதலாம்.

திமுகவின் கட்சித் தலைவர் பொறுப்புக்கான தகுதியை ஸ்டாலின் பல ஆண்டுகளுக்கு முன்பே பெற்றுவிட்டார். ஆனாலும், தலைவர் பொறுப்பை 50 ஆண்டுகளாகத் தன் வசம் வைத்திருந்த கருணாநிதியின் மறைவுக்குப் பிறகுதான் ஸ்டாலின் அந்த இடத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார். இதுவரைக்கும் கட்சியின் தலைமைப் பொறுப்பு மீதே பெருமளவில் கவனத்தைக் குவித்திருந்தார் ஸ்டாலின். இனி கட்சியைப் பலப்படுத்துவதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

கருணாநிதி போலவே விமர்சனங்களுக்குக் காது கொடுக்கும் வழக்கம் ஸ்டாலினிடமும் இருக்கிறது. கட்சியின் தவறுகளைத் திறந்த மனதுடன் ஒப்புக்கொள்ளும் அவரது இயல்பு, தற்போதைய தமிழக அரசியல் சூழலில் குறிப்பிடத்தக்க ஒன்று. திமுகவின் எதிர்காலம் மட்டுமல்ல; அதன்வழியாகத் தமிழக அரசியல் நிலையையும் மேம்படுத்த வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. திமுகவின் பலம் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள். அதேநேரத்தில் பலமே பலவீனமாகவும் இருக்கிறது. காலவரையறையற்று கட்சிப் பதவியில் ஒருவர் அமர்ந்திருப்பது, அக்கட்சியின் வளர்ச்சியையும் இயக்கத்தையும் தேக்கமுறச் செய்கிறது. வாரிசு அரசியல் என்ற வரையறைக்குள் ஸ்டாலினைப் பொருத்திப் பார்க்க முடியாது. ஆனால், இதையே காரணம் காட்டி மாவட்டம், ஒன்றியம், நகரம் அளவுக்கு அந்தந்த நிர்வாகிகள் தங்கள் வாரிசுகளை உள்ளே கொண்டுவர அனுமதிக்கக் கூடாது. ஸ்டாலினுமே உதயநிதி விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாரிசு அரசியல், கட்சிக்குள் புதியவர்கள் நுழைவதற்கு வழியடைத்து நிற்கும்.

மாணவர்களாலும் இளைஞர்களாலுமே வளர்ந்த கட்சி திமுக. செயலூக்கம் மிக்க இளைஞர்களாகக் கட்சிப் பதவிக்கு வந்தவர்கள்தான் இன்றைக்கு இரண்டாம் கட்டத் தலைவர்களின் பட்டியலில் இருக்கிறார்கள். ஆனால், அதைத் தங்களது பின்ளைகளுக்கு தந்தைவழிச் சொத்தாக விட்டுச்செல்வார்கள் என்றால், கட்சியை அது சீரழித்துவிடும். படிப்பகங்களிலும் மாலை நேரக் கூட்டங்களில் வளர்த்தெடுக்கப்பட்டது திமுக.. இன்றைக்கு வாசிப்பு, அறிவியக்கத்தில் எந்த அளவுக்கு அதற்குத் தொடர்பு உள்ளது என்ற கேள்வி அர்த்தமுள்ளது.

எல்லாச் சமூகங்களுக்கும் இடமளிக்கும் வகையில் கட்சிப் பதவிகளில் இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்த திமுக, அதை எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்துகிறது என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக தலித்துகள், முஸ்லிம்கள் பிரதிநிதித்துவத்தில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் எந்த அளவுக்கு அக்கறை கொண்டிருக்கிறார்கள்? கட்சியின் மேல் மட்டத்தில் உள்ள அக்கறை கீழ் மட்டம் வரை கொண்டுசெல்லப்பட வேண்டும்.

கட்சியின் தொண்டர்கள் பலரும் பொருளாதார நிலையில் பின்தங்கி நிற்பவர்கள். அவர்கள் கட்சியின் மேலிடங்களை நோக்கி நகர இன்றைய கலாச்சாரம் இடமளிக்கிறதா? திமுகவை அண்ணா தொடங்கிய காலத்தில், ஒரு அரசியல் கலாச்சாரமாக அவர் வளர்த்தெடுத்த எளிமை இன்று சரிந்துவிட்டது. இந்தச் சரிவு சரிசெய்யப்பட வேண்டும்.

ஒரே தேசம், ஒரே மொழி என்ற அரசியல் கொள்கை வகுக்கப்பட்டபோது, அதைக் கடுமையாக எதிர்த்து களம்கண்டு வென்ற அரசியல் கட்சி திமுக. மாநிலங்களின் தனித்துவங்களை மறுத்து ஒற்றைமயப்படுத்தும் அந்தக் குரல், இப்போது இன்னும் வலுவாக எல்லா நிலைகளிலும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சிக்கிறது. சாதி-மத அரசியல் பேருரு கொண்டு நிற்கிறது. இந்தச் சூழலில், மாநில உரிமைகள், மதச்சார்பின்மை, சாதி ஒழிப்பு ஆகிய அரசியல் விழுமியங்களுக்கான திமுகவின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். “மதவெறியால் மத்திய அரசு மக்களாட்சி மாண்பைக் குலைக்கும் செயல்களில் ஈடுபடுகிறது” என்று பேசியிருப்பதன் மூலம் நம்பிக்கையை விதைத்திருக்கிறார் ஸ்டாலின்.

தமிழகத்தின் பிரத்யேக அடையாளங்களில் ஒன்றான 69% இடஒதுக்கீட்டுக்கு சட்டரீதியான ஆபத்துகள் ஏற்பட்டிருக்கும் சூழலில், நீதிமன்றத்தில் வலுவாக வாதாட வேண்டும் என்று தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார் ஸ்டாலின். இடஒதுக்கீடு விஷயத்தில் சமூக நீதியில் இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் தமிழகம் இருப்பதில் திமுகவுக்கு முக்கியப் பங்கு உண்டு. இன்றைக்கு, அதைப் பாதுகாப்பதில் ஸ்டாலின் தலைமையிலான திமுகவுக்கு மேலும் அதிகப் பொறுப்பு இருக்கிறது.

திமுக எதிர்க்கட்சியாக இருந்த காலங்களில், போராட்டங்கள்தான் அக்கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தன. அந்தப் பழைய அடையாளத்தை ஸ்டாலின் மீட்டெடுக்க வேண்டும். அதேசமயம், சட்ட மன்றம் என்றாலே புறக்கணிப்பு எனும் நிலை தொடரக் கூடாது. அடையாள நிமித்தமான போராட்டமாக அது மாறிவிடக் கூடாது. ஆக்கபூர்வமான விவாதங்களில் ஈடுபடுவதுடன் மாநில உரிமை தொடர்பான விஷயங்களில் ஆளுங்கட்சியுடன் சேர்ந்தும் திமுக செயல்பட வேண்டும்.

திமுக எனும் கட்சியையும் தாண்டி, ஒட்டுமொத்த தமிழகத்தின் மேம்பாட்டுக்கான, தற்போதைய உலகமயச் சூழலில் தாக்குப்பிடித்து நிற்பதற்கான ஒரு தொலைநோக்குத் திட்டத்தை முன்வைக்க திமுக தயாராக வேண்டும். பல துறை அறிஞர்களின் விவாதங்களோடு அது வடிவம்காண வேண்டும். வேளாண் துறை, பின்னலாடை, மீன்பிடித் தொழில், கால்நடை வளர்ப்பு, நெசவாளர்கள், அரசுப் போக்குவரத்து நிறுவனங்கள், மின்உற்பத்தி, உள்கட்டமைப்பு, பேரிடர் மேலாண்மை போன்ற முக்கிய விஷயங்கள் தொடர்பான செயல்திட்டங்களை வகுக்க வேண்டும்.

தலைவர் பொறுப்புக்கு முந்தைய ஸ்டாலினின் அடையாளம் என்பது கட்டுக்கோப்பான ஓர் இளைஞர் அணிக்குத் தலைமை வகித்தது. ஆனால், இன்றைய திமுகவின் மிகப் பெரிய பலவீனம், இளைய சமூகத்துடன் அக்கட்சிக்கு இருக்கும் பொருத்தப்பாடின்மைதான். இந்நிலையில், இளைஞர்களின் தலைவராக அடுத்த தலைமுறை இளைஞர்களையும் அவர் அரசியலுக்கு, கட்சிப் பொறுப்புகளுக்கு, ஆட்சிப் பொறுப்புகளுக்குக் கொண்டுவர வேண்டும்!

வெ.சந்திரமோகன், தொடர்புக்கு: CHANDRAMOHAN.V@THEHINDUTAMIL.CO.IN 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x