Last Updated : 08 Aug, 2018 08:20 AM

 

Published : 08 Aug 2018 08:20 AM
Last Updated : 08 Aug 2018 08:20 AM

தன் கதையைத் தானே எழுதிக்கொண்ட கதாசிரியர்: அண்ணாவுக்குப் பிந்தைய அரை நூற்றாண்டு!

அண்ணாவைப் போலவே தம்பிக்கு ‘தோழா!’ என விளித்துக் கடிதம் எழுதத் தொடங்கினார். 1971 ஏப்ரல் முதல் ‘உடன்பிறப்பே’ என்று எழுதவும் பேசவும் தொடங்கினார். பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கருணாநிதி எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை மட்டுமே கிட்டத்தட்ட 7,000. இந்தக் காலகட்டத்திலேயே எம்ஜிஆர் உட்பட எல்லோராலும் அவர் ‘கலைஞர்’ என்று அழைக்கப்படவுமானார். திராவிட இயக்கத்தின் செல்வாக்கு மிக்க பிரச்சாரகராக இருந்த நடிகர் எம்.ஆர்.ராதா பல ஆண்டுகளுக்கு முன் அவருக்குக் கொடுத்த பட்டம் அது.

கருணாநிதி முதல்வரானதும், “கருணாநிதியா? அவர் மத்திய அரசோடு ஒத்துழைப்பாரா? தகராறு செய்யக் கூடியவர் என்று கேள்விப்பட்டேனே!” என்பதுதான் பிரதமர் இந்திரா காந்தியின் எதிர்வினையாக இருந்தது. அடுத்த சில மாதங்களில் கருணாநிதி, “உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்றார். சொன்னபடியே 1969-ல் இந்திரா காந்தி ஆதரித்த வி.வி.கிரியைக் குடியரசுத் தலைவராக வெற்றி பெறச் செய்யவும், வங்கிகளை நாட்டுடைமையாக்குவதற்கும் உதவினார். அடுத்த ஆண்டு இந்திரா அரசு முன்னெடுத்த மன்னர் மானிய ஒழிப்புக்கும் துணை நின்றார்.

திட்டங்கள், ஐம்பெரும் முழக்கம்!

கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில், பள்ளி இறுதி வகுப்பு வரை இருந்த இலவசக் கல்வி புதுமுக வகுப்பு வரை ஆனது; நில உச்சவரம்பு 15 ஏக்கராக ஆனது. சட்டநாதன் ஆணையம் அமைத்த திமுக அரசு, அதன் பரிந்துரையின்பேரில் பிற்படுத்தப்பட்டோருக்கான 25% இடஒதுக்கீட்டை 31% ஆக மாற்றியமைத்ததுடன், தாழ்த்தப்பட்டோருக்கு 16%-லிருந்து 18%-ஆகவும் மாற்றியமைத்தது. பிறப்பைக் கருத்தில் கொள்ளாமல் தகுதியுடைய அனைவரும் அர்ச்சகராகலாம் என்று 1970 டிசம்பர் 2-ல் சட்டம் இயற்றப்பட்டது. பரம்பிக்குளம்- ஆழியாறு பிரச்சினையில் ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

உரிமைக்குக் குரல் கொடுக்க 1969-ல் அமைத்ததுதான் மத்திய-மாநில உரிமைகளை ஆராய நீதிபதி ராஜமன்னார் கமிட்டி. அதன் தொடர்ச்சியாய் 1970 பிப்ரவரி 22-ல் திருச்சியில் ஐம்பெரும் முழக்கங்களை வடித்துத் தந்தார்: 1. அண்ணா வழியில் அயராது உழைப்போம். 2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். 3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம். 4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம். 5. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி!

மனோன்மணீயம் பெ.சுந்தரனார் எழுதிய ‘நீராரும் கடலுடுத்த’ என்று தொடங்கும் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தானது.

1970 மார்ச் 21-ல் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் சேலம் இரும்பு ஆலைக்கான அறிவிப்புக்குத் தீவிரமாக வலியுறுத்தி, ஏப்ரல் 17 அன்று இந்திரா காந்தியால் அதை நாடாளுமன்றத்தில் அறிவிக்கவும் செய்தார் கருணாநிதி. உதவிகளைப் பெற்றுக்கொள்வதில் இந்திராவுக்கு இருந்த ஆர்வம் கருணாநிதியின் உரிமைக் குரலுக்கு உதவுவதில் இல்லை. அதிகாரக் குவிப்பில் ஆர்வம் மிக்கவரான அவருடைய அமைச்சரவையிலும் பலர், மாநிலங்களின் உரிமைகளை உரக்கப் பேசிய கருணாநிதியை ரசிக்கவில்லை.

எதிரியான எம்ஜிஆர்

மாறனின் ‘எங்கள் தங்கம்’ (1970) படத்தில் எம்ஜிஆர் சம்பளம் வாங்கவில்லை. ஜெயலலிதாவையும் வாங்க வேண்டாம் என்று சொன்னார் எம்ஜிஆர். இந்த அளவுக்கு இருவர் இடையிலும் ஒரு நெருக்கம் இருந்தாலும் பரஸ்பரம் முரண்பாடுகளும் இருந்தன.

1971 தேர்தலில் கருணாநிதி தலைமையில், எம்ஜிஆரின் பிரச்சாரத்தில் காமராஜர்-ராஜாஜி கூட்டணியை வீழ்த்தி 184 இடங்களைப் பிடித்துப் பெரும் சாதனையை நிகழ்த்தியது திமுக! பேருந்துகள் நாட்டுடைமை, குடிசை மாற்று வாரியம், இலவசக் கண் சிகிச்சை முகாம்கள், இரவலர் மறுவாழ்வுத் திட்டம், கை ரிக்‌ஷா ஒழிப்பு, சிப்காட், புஞ்சை நிலங்களுக்கு நிலவரி எடுத்தது என்று ஏராளமான திட்டங்களைத் தந்தது கருணாநிதி அரசு. ஆனால் ஊழல், அதிகார மமதை என்றும் பேச்சுகள் எழுந்திருந்தன. ஊழல் குற்றம்சாட்டப்பட்ட மூன்று அமைச்சர்களை நீக்கியிருந்தார் கருணாநிதி.

ஆனாலும் மத்திய அமைச்சர்கள் சி.சுப்பிரமணியமும் மோகன் குமாரமங்கலமும் திமுக ஆட்சியைத் தொடர்ந்து விமர்சித்தார்கள். 1972 ஜனவரி 17-ல் தஞ்சையில் கூடிய திமுக பொதுக்குழு ‘விரும்பத்தகாத நிலை’ என்று இவர்கள் போக்கை வர்ணித்தது. “இதற்குப் பின்னர் காங்கிரஸ் பகைக்கவே தொடங்கியது என்றே கூறலாம்” என்று குறிப்பிட்டிருக்கிறார் கருணாநிதி. இந்தப் பொதுக்குழுவில் எம்ஜிஆர் பங்கேற்கவில்லை.

இந்தச் சூழலினூடாகவே பிராந்திய சக்திகளின் எழுச்சிக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் திமுகவின் வளர்ச்சிக்கு அணை போட பல முயற்சிகள் நடந்துவருவதாகக் கட்சிக்குள்ளும் பேச்சுகள் அடிபடத் தொடங்கியிருந்தன. அக்டோபர் 8-ல், திருக்கழுக்குன்றத்திலும் பின்னர் சென்னையிலும் பேசிய எம்ஜிஆர், கழகம் கறைபடிந்துவிட்டதாகவும், கழக ஆட்சியிலும் கட்சியிலும் பொறுப்பில் உள்ளவர்கள் கணக்குக் காட்ட வேண்டும் என்றும் கேட்டார். “யாரோ ஒரு சலவைத் தொழிலாளி சந்தேகிக்கிறான்... இராமன் அனுப்பினான் சீதையைக் காட்டுக்கு! இராமன் அனுப்பலாம், இராமச்சந்திரன் இப்படிக் கழகத்தைக் காட்டுக்கு அனுப்பத் துணியலாமா?” என்று இலக்கிய நயத்தோடு நியாயம் கேட்டார் கருணாநிதி.

1972 அக்டோபர் 18-ல் அதிமுகவைத் தொடங்கினார் எம்ஜிஆர். “கருணாநிதி பதவி விலக வேண்டும்” என்று ஒவ்வொரு கூட்டத்திலும் பேசினார். டெல்லி வரை சென்று ஊழல் புகார்களைக் கொடுத்தார். 1973-ல் திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்று சாதனை புரிந்தார். மறுபுறம் முதல்வர் கருணாநிதி ராஜராஜசோழனுக்குச் சிலை, பூம்புகார் கலைக்கூடம், கட்டபொம்மனுக்குக் கோட்டை, பொதுவாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச ஊழலைத் தடுப்பதற்கான மசோதா, மாநில சுயாட்சித் தீர்மானம், கச்சத்தீவுத் தீர்மானம் என்று அயராமல் இயங்கிக்கொண்டிருந்தார்.

நெருக்கடி நிலை

1975 ஜூன் 25-ல் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அடுத்த நாள் அதிகாலை 4.00 மணிக்குத் தன் கைப்பட எழுதிய கண்டன அறிக்கையில், “இந்திரா காந்தி சர்வாதிகாரத்துக்கான தொடக்கவிழாவை நடத்தியிருக்கிறார்” என்றார் கருணாநிதி. திமுகவினர் பலர் கைதுசெய்யப்பட்டனர். ஸ்டாலின் அப்போது ஊரில் இல்லை. ஸ்டாலினைத் தேடி வந்த போலீஸாரை அடுத்த நாள் வருமாறு சொன்னார். மறுநாள் மிசா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார் ஸ்டாலின். மாறனும் கைதுசெய்யப்பட்டார். நெருக்கடி நிலையின்போது பல அடக்குமுறைகளை திமுக அரசும் கருணாநிதியும் சந்திக்க நேர்ந்தது. கூடவே, சர்க்காரியா கமிஷனும் சேர்ந்துகொண்டது.

அதற்கு முன்னதாக 1976 ஜனவரி 31-ல் ஆட்சியும் கலைக்கப்பட்டது.

கடுமையான பத்திரிகைத் தணிக்கை இருந்த அந்தக் காலகட்டத்தில் ஒரு பத்திரிகையாளராக கருணாநிதி மிகச் சாதுரியமாகச் செயல்பட்டார். 1976 பிப்ரவரி 3 அன்று ‘அண்ணா சதுக்கத்திற்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல்’ என்று அவர் சூசகமாய் வெளியிட்ட பட்டியலில், மிசா சட்டத்தில் மாவட்டவாரியாகக் கைதுசெய்யப்பட்ட திமுகவினரின் பெயர்கள் இடம்பெற்றது ஒரு உதாரணம்.

நெருக்கடி நிலையின் மூலம் மத்திய அரசு தந்த அழுத்தத்தைத் தாங்க முடியாமல், பேசாமல் கழகத்தைக் கலாச்சாரக் கழகமாக்கலாம் என்றனர் சிலர். கட்சியில் இருந்தே கருணாநிதியை விலகச் சொன்னவர்களும் உண்டு. “கப்பலின் தலைவன் மூழ்கும் கப்பலை விட்டுச் செல்வதில்லை” எனச் சொல்லிவிட்டார் கருணாநிதி.

1977 மார்ச் 21-ல் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது. ஆனால், கருணாநிதிக்கும் திமுகவுக்கும் மேலும் சோதனைகள் காத்திருந்தன. 1977 ஜூன் சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தது. அதற்குப் பின் 1989 வரை திமுகவால் ஆட்சிக்கு வர முடியவில்லை. என்றாலும், எதிர்க்கட்சியாக, திமுகவை 13 ஆண்டுகள் சிறப்பாக வழிநடத்தினார் கருணாநிதி. அரசின் ஊழலைச் சுட்டிக்காட்டுவதிலும், ஈழத் தமிழர்களுக்குப் பெரும் ஆதரவளிப்பதிலும் சட்ட மன்றத்தில் அவரது குரல் ஓங்கி ஒலித்தது!

சவால்கள், சோதனைகள், சாதனைகள்

1989 தொடக்கத்தில் மூன்றாவது முறையாக முதல்வரான கருணாநிதி பெண்களுக்குச் சொத்துரிமை, அரசுப் பணிகளில் 30% இடஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% தனி ஒதுக்கீடு என்று செயலாற்றினார்.

இதற்கிடையில் வி.பி.சிங் அரசு கவிழ்க்கப்பட்டது. அதன் பிறகு தமிழகத்தில் விடுதலைப் புலிகளை சுதந்திரமாய் நடமாட விடுவதாய்ச் சொல்லி திமுக ஆட்சியும் கலைக்கப்பட்டது. இது போதாதென்று அதற்குப் பின் 1991 தேர்தல் சமயத்தில் நடந்த ராஜீவ் படுகொலை திமுகவின் படுதோல்விக்கு வழிவகுத்தது. சட்ட மன்றத்தில் ஒரே உறுப்பினர் பணியாற்றினார் 1991-96 காலகட்டத்தில். திமுக அஸ்தமித்துவிட்டது என்றே அரசியல் நோக்கர்கள் கருதினர்.

இந்த ஆரூடங்களையெல்லாம் பொய்யாக்கி 1996-2001-ல் மீண்டும் தமிழகத்தில் திமுகவை ஆட்சிக்குக் கொண்டுவந்தார் கருணாநிதி. பெண்களுக்கு உள்ளாட்சியில் 33% இடஒதுக்கீடு, தொழில் முனைவோருக்கு ஒற்றைச்சாளர முறை, டைடல் பூங்கா, அருந்ததியினருக்கு 3% தனி ஒதுக்கீடு, நெம்மேலி கடல்நீர் திட்டம், மெட்ரோ ரயில், ஒகேனக்கல், பரமக்குடி கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், ஹூண்டாய், போர்டு மற்றும் இதர வெளிநாட்டு முதலீடுகள், உழவர் சந்தை, சமத்துவபுரம், ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீடு, திருவள்ளுவருக்கு 133 அடி சிலை என்று திமுக ஆட்சியில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. பொற்கால ஆட்சி என்று இந்த 5 ஆண்டுகளைக் குறிப்பிட்டன திமுக விளம்பரங்கள்.

1987 ஆகஸ்ட் 8-ல் டெல்லியில் திமுக உட்பட ஏழு கட்சிகள் இணைந்து ‘தேசிய முன்னணி’ எனும் கூட்டணியை அமைத்தன. 1988 செப்டம்பர் 17 அன்று சென்னையில்தான் தேசிய முன்னணி தொடக்க விழா நடந்தது. 1989 தேர்தலில் அக்கூட்டணி வென்று, வி.பி.சிங் பிரதமரானார். கூட்டணி அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்தது. காவிரி நடுவர் மன்றம் உருவானது. மண்டல் கமிஷன் போன்றவற்றில் திமுகவின் பங்கு முக்கியமானது. இதிலிருந்து 2014 வரை மத்திய அரசின் கூட்டணி யுகத்தில் பெரும் பங்காற்றினார் கருணாநிதி. காங்கிரஸ், பாஜக இல்லாத கூட்டணி, பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி என்று அவர் அடுத்தடுத்து நகர்த்திய கூட்டணிக் காய்களில் திமுகவும் அதனால் தமிழ்நாடும் பெரும் பயன் அடைந்தன. குறிப்பாக, 2004-ல் மன்மோகன் சிங் பிரதமராகப் பொறுப்பேற்றபோது, மத்திய அமைச்சரவையில் தமிழகத்துக்கு 12 இடங்கள் கிடைத்தன. தமிழகமே அதிக அமைச்சரவைப் பொறுப்புகளைப் பெற்ற மாநிலமாக மாறிற்று. இந்தியாவின் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, நெடுஞ்சாலை, சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் நடந்த சாதனைகள் திமுகவைச் சேர்ந்த அமைச்சர்களைச் சாரும். தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

என்றாலும், இந்தக் கூட்டணி யுகத்தில் திமுக கடுமையான குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ளாமல் இல்லை. வாஜ்பாய் காலத்தில் பாஜகவுடன் அவர் வைத்த கூட்டணி திமுகவின் மதச்சார்பின்மைப் பயணத்தில் ஒரு களங்கம் ஆனது. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் 2-ஜி அலைக்கற்றை ஏல முறைகேடு, குடும்ப அரசியல் குற்றச்சாட்டுகளுக்குக் கட்சி பெரும் விலையைக் கொடுக்க நேர்ந்தது. அதேபோல, 2008-09 இலங்கை இறுதிப் போர் காலகட்டத்தில் திமுக ஈழத் தமிழர்களுக்காக எவ்வளவு காரியங்களை முன்னெடுத்தபோதிலும் போதுமான அளவு துணை நிற்கவில்லை என்ற கடும் விமர்சனத்துக்குள்ளானார் கருணாநிதி. விளைவாக, 2011 சட்ட மன்றத் தேர்தல், 2014 மக்களவைத் தேர்தல்களில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது கட்சி. ஆனால், 2016 சட்ட மன்றத் தேர்தலில் மீண்டும் கட்சியைத் தூக்கி நிறுத்தினார் கருணாநிதி. ஆட்சியைப் பிடிக்கவில்லை என்றாலும், இதுவரை எந்த எதிர்க்கட்சியும் பெற்றிடாத வகையில் 89 இடங்களுடன் வலுவான எதிர்க்கட்சியாக உட்கார்ந்தது திமுக.

தன்னுடைய 80 ஆண்டு பொது வாழ்வில் கருணாநிதி சந்தித்த சவால்களும், அவற்றைத் தாண்டி அவர் புரிந்த சாதனைகளும் இந்தியாவில் மிக அரிதானவை. 75 திரைப்படங்கள், நாடகங்கள், குறளோவியம், சங்கத்தமிழ், தொல்காப்பியப் பூங்கா, இரண்டு லட்சம் பக்கத்துக்கும் அதிகமான எழுத்துகள், ஆயிரக்கணக்கான பொதுக்கூட்டங்கள், பலமுறை சிறைவாசம், போராட்டங்கள் என்று அவர் அளவுக்கு அரசியல் அனுபவம் கொண்ட தலைவர்கள் மிக மிகக் குறைவு. மாபெரும் உயரங்கள், படுமோசமான பள்ளங்கள் இரண்டையும் மாறி மாறி சந்தித்துவரும் கருணாநிதியின் கதையின் மிக மிக முக்கியமான அம்சம், தன்னுடைய கதையைத் தானே எழுதிக்கொண்ட கதாசிரியர் அவர் என்பது. அந்தக் கதை தமிழ்நாடு உள்ளவரை அதன் நினைவில் இருக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x