Published : 22 Aug 2018 09:37 AM
Last Updated : 22 Aug 2018 09:37 AM

திருவாரூரைக் கல்வி மையமாக வளர்த்தெடுத்த கருணாநிதி!

சமூக மாற்றத்துக்கான பெரியாரின் கனவை அண்ணாவின் வழியில் சாதித்துக் காட்டிய கருணாநிதி, கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்வு மேம்பாடு அடைவதில் மிகப் பெரும் பங்காற்றியவர். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வியின் பலன் சென்றடையக் காரணமாக இருந்தவர். கல்வித் துறையில் தமிழகம் முழுமைக்கும் அவர் கொண்டுவந்த திட்டங்கள் பல தலைமுறைகளுக்குப் பலனளித்திருக்கின்றன.

திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம், திருக்குவளை அண்ணா பல்கலைக்கழகக் கிளை, திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆகியவையும் இவற்றில் அடக்கம். சொந்த ஊர் என்பதையும் தாண்டி, சுயமரியாதையைச் சுவாசிக்கக் கற்றுக்கொடுத்த மண்ணுக்கு அவர் செய்த மரியாதை அது!

நீளும் சாதனைப் பட்டியல்

தனது ஆட்சிக்காலங்களில், தமிழகத்தில் பல்வேறு கல்வி நிலையங்களை நிறுவினார் கருணாநிதி. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்விப் பயணம் தடைபடாத வகையிலான முக்கிய முடிவுகளை எடுத்தார். 2007-08-ம் கல்வி ஆண்டு முதல், பட்டப்படிப்பு மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தை ரத்துசெய்தது; 2010-11ல் அரசுக் கல்லூரிகளில் பயிலும் பட்ட மேற்படிப்புக்கான கட்டணத்தை ரத்துசெய்தது; பட்டதாரி அல்லாத குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்கள் தொழிற்கல்வி படிப்பில் சேர்வதற்குக் கட்டணத்தை ரத்துசெய்தது.

வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தது என்று கல்விக்கான அவரது பணிகளின் பட்டியல் மிகப் பெரியது. ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் செய்ததுபோலத் தன் சொந்த மண்ணுக்கும் அவர் சில பணிகள் செய்தார்.

சொந்த மண்ணுக்கு சேவை

கருணாநிதியால் பிற்பாடு உருவாக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தின் சுற்றுப்புறங்கள் கல்வியில் அன்று ஏற்றம் பெற்ற இடங்கள் அல்ல. இன்று திருவாரூரையே ஒரு கல்வி மையமாக அவர் மாற்றியிருக்கிறார். திருக்குவளையில் அரசுப் பள்ளியை நிறுவ அரசுக்கு பங்குத் தொகை செலுத்தி, அஞ்சுகம் முத்துவேலர் நினைவு தொடக்கப் பள்ளியைத் தொடங்கினார். தனது ‘மணிமகுடம்’ நாடகத்தின் வாயிலாகத் திரட்டிய நிதியைப் பங்குத் தொகையாக அரசுக்குச் செலுத்தி, காட்டூரிலும் ஒரு அரசுப் பள்ளியைத் தொடங்க ஏற்பாடு செய்தார்.

அதே ஊரில் மேல்நிலைப் பள்ளியைத் தொடங்கவும் நடவடிக்கை எடுத்தார். தான் படித்த வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் தனது சட்ட மன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் வகுப்பறைக் கட்டிடங் களைக் கட்டிக்கொடுத்தார்.

2008-ல், தமிழகத்தில் 16 இடங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளைகள் நிறுவப்பட்டன. திருக்குவளையிலும் ஒரு கிளையைத் தொடங்க வேண்டும் என்று கருணாநிதி விரும்பினார்.

“போதுமான இட வசதி அரசிடம் இல்லாத நிலையில், தருமபுர மடத்துக்குச் சொந்தமான நிலத்தை அறநிலையத் துறை மூலம் அரசுக்கு விலைக்கு வாங்க தனியாக அரசாணையை வெளியிட்டார். அப்படித் தொடங்கியதுதான் அண்ணா பல்கலைக்கழகத் திருக்குவளை கிளை. அந்தத் தொகையைத் திருக்குவளை கோயிலுக்கும் பெற்றுத் தந்தார்” என்று நினைவுகூர்கிறார் திருக்குவளையைச் சேர்ந்த கோசி.குமார்.

இன்றைக்கு, திருக்குவளை கிளை மூலம் ஆண்டுக்கு 420 மாணவர்கள் பொறியியல் பட்டம் பெறுகிறார்கள். திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூர் பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்களே இங்கு அதிகம் பயின்றுவருகின்றனர்.

“திருக்குவளையில் அதிகளவு பொறியியல் பட்டதாரிகள் உருவாகியிருப்பதன் விளைவாக அருகில் உள்ள தனியார் கல்லூரி ஒன்று, ஐஏஎஸ் பயிற்சி வகுப்பைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இது ஒன்றே இப்பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குச் சான்று” என்கிறார் திருக்குவளை பொறியியல் கல்லூரியின் டீன் துரைராஜன்.

அடித்தட்டு மக்களுக்குச் சிகிச்சை

திருவாரூரில் 2010-ல் அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்கிய கருணாநிதி, அடித்தட்டு மக்களுக்கு மருத்துவ சிகிச்சை சென்றடையவும், தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான எண்ணிக்கை அதிகரிக்கவும் காரணமாக விளங்கினார். இந்த மருத்துவக் கல்லூரி மூலம் ஆண்டுக்கு 100 பேர் மருத்துவப் படிப்பு பயின்றுவருகிறார்கள்.

2009-ல் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு தொடங்கப்பட்ட ஏழு மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஒன்று திருவாரூர் அருகே நீலக்குடியில் இயங்கிவரும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம். சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் இயங்கிவரும் இப்பல்கலைக்கழகத்தில் 22 துறைகள் உள்ளன.

ஒருங்கிணைந்த 5 ஆண்டு பட்டப் படிப்புகள், ஒருங்கிணைந்த 4 ஆண்டு கல்வியியல் பட்டப் படிப்புகள். 22 துறைகளில் எம்.ஃபில், பிஹெச்டி படிப்புகள், பல்வேறு பல்கலைக்கழகங்களுடனான புரிந்துணர்வின் அடிப்படையில் பட்டயப் படிப்புகள் என்று மாணவர்களின் கல்விக் கனவுகளைச் சாத்தியமாக்கும் பல்கலைக்கழகம் இது.

மத்தியப் பல்கலைக்கழகத் தொடக்க விழாவில் கலந்துகொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் அப்போதைய அமைச்சர் கபில் சிபலிடம், “மத்தியப் பல்கலைக்கழகத்தில் 50% இடஒதுக்கீட்டைத் தமிழகத்துக்கு, குறிப்பாக இந்தப் பகுதி மாணவர்களுக்கு வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார் கருணாநிதி. அந்தக் கோரிக்கை இதுவரை நிறைவேற வில்லை. அது நிறைவேறும்போது கருணாநிதியின் இன்னொரு கல்விக் கனவும் பூர்த்தியாகும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x