Published : 30 Aug 2018 09:28 AM
Last Updated : 30 Aug 2018 09:28 AM

திறன் மேம்பாட்டுத் தொழிற்பயிற்சி பலன் தர வேண்டாமா?

‘இந்தியாவில் தயாரிப்போம்’, ‘எழுக இந்தியா’ என்ற முழக்கங்களோடு மேற்கொள்ளப்பட்ட மத்திய அரசின் திட்டங்கள் எதிர்பார்த்த வெற்றிகளை அளிக்கவில்லை. இந்தியாவில் தயாரிக்க உதவியாகத் தொழிலாளர்கள் உற்பத்தித் திறன் மிகுந்தவர்களாக இல்லை. பொறியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்வி நிலையங்களுக்கு அடுத்த நிலையில் ‘ஐடிஐ’ என்று அழைக்கப்படும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் அரசாலும் தனியாராலும் நடத்தப்படுகின்றன. தனியார் ஐடிஐயில் பெரும்பாலானவை அடித்தளக் கட்டமைப்பு, உரிய தொழிற்பயிற்சி ஆசிரியர்கள், கருவிகள் இல்லாமல் இருக்கின்றன. இதை மத்திய தொழிலாளர் நலத் துறையுடன் இணைந்த நாடாளுமன்ற ஆலோசனைக் குழுத் தலைவர் கிரீட் சோமய்யா (பாஜக), நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை வெட்ட வெளிச்சமாக்குகிறது.

1950-களில் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. 2007 வரையில் அரசு ஆதரவில் 1,896, தனியார் மூலம் 2,000 நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. 2007-2017 காலத்தில் கூடுதலாக 9,000 ஐடிஐகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. தொழிற்பயிற்சி நிறுவனங்கள் தொடங்குவது தொடர்பான வரைமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டதை யாரும் கண்டுகொள்ளாததால், இவற்றின் எண்ணிக்கை இப்படி ஒரேயடியாக உயர்ந்தது. இவையன்றி, ‘தேசியத் திறன் மேம்பாட்டு கார்ப்பரேஷன்’ (என்எஸ்டிசி) மூலம் 6,000 தனியார் பயிற்சி மையங்கள் அவசரக் கோலத்தில் திறக்கப்பட்டன. இவை குறுகியகாலப் பயிற்சிகளை அளித்தன. எனவே, இவை திறக்கப்படுவதும் மூடுவதுமாகவே இருக்கின்றன. தரமுள்ள பயிற்சி அளிக்குமாறு அரசால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எந்தத் தொழில்நிறுவனமும் இந்தப் பயிற்சியை அளிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தொழில் நிறுவனங்கள் அளித்திருந்தால் தங்களுக்கு எந்த மாதிரியான தொழிலாளர்கள் தேவையோ அதற்கேற்பப் பயிற்சி அளித்திருக்கும். தொழிற்பயிற்சி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் ‘ஒரு அமைப்பு’ இல்லாததால், பயிற்சிக் கூடங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது, மதிப்பிடுவது, சான்று வழங்குவது ஆகிய அனைத்துமே தரமில்லாமல் போனது.

அது மட்டுமல்லாமல், இந்நிறுவனங்களைக் கண்காணித்து முறைப்படுத்த வேண்டிய வேலை ‘அயல்பணி ஒப்படைப்பாக’ மற்றவர்களிடம் விடப்பட்டது. அரசால் கண்காணிக்கப்படவில்லை. இந்நிறுவனங்கள் யாருக்குச் சொந்தம் என்பதில் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையில் இழுபறி ஏற்பட்டது.

அரசு ஊழியர்களின் பணிப் பளுவைக் கருத்தில் கொண்டு ஐடிஐகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்கும் பொறுப்பு ‘குவாலிட்டி கவுன்சில் ஆஃப் இந்தியா’ (கியூசிஐ) என்ற தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. ‘தொழிற்பயிற்சிகளுக்கான தேசிய கவுன்சில்’ (என்சிவிடி) விதித்த நியதிகளை கியூசிஐ பின்பற்றவில்லை. அது தகுதியையோ திறனையோ பற்றிக் கவலைப்படாமல், விரைவாக அங்கீகாரம் வழங்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுள்ளது. இதனால், இவற்றில் பயிற்சிபெற்ற 13.8 லட்சம் பேரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தரம் இல்லாத பயிற்சி நிறுவனங்கள் எப்போது வேண்டுமானாலும் மூடப்படலாம். ஐடிஐகளின் செயல்பாட்டு ஏற்பாடு விநோதமானது. கைவினைஞர்கள் பயிற்சித் திட்டத்தின் கீழ் இவை அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் அன்றாட நிர்வாகம், நிதி நிர்வாகம், மாணவர் சேர்ப்பு ஆகியவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. என்சிவிடி ஆலோசகராகச் செயல்படுகிறது. ஐடிஐகளுக்கு யாரும் உரிமை கோராததால் அடிக்கடி பிரச்சினைகளைச் சந்திக்கின்றன. இதன் தேர்வு நடைமுறையே இதற்கு உதாரணம். வினாத்தாள்களை என்சிவிடி தயாரிக்கிறது. தொழிற்பயிற்சி அளிக்கும் மாநிலக் கவுன்சில் தேர்வுகளை நடத்தி, விடைத் தாள்களை மதிப்பிடுகிறது. மாணவர்களுக்குத் தரப்படும் பயிற்சியின் தரத்தைப் பார்க்கும் பங்கு ஏதும் இல்லாமல் வெறும் முத்திரையாகச் செயல்படுகிறது என்சிவிடி. தரமான மதிப்பிடல் முறை இல்லாமல் தரம் எப்படி பயிற்சியில் வெளிப்படும்?

எங்கிருந்து தொடங்குவது?

சாரதா பிரசாத் குழுவின் பரிந்துரைகளை அமல் செய்வதிலிருந்து சீர்திருத்தங்களைத் தொடங்கலாம். தொழிற்பயிற்சி அளிப்பதை நன்கு கண்காணிக்க வேண்டும். அனைத்துவகை திறன் மேம்பாடுகளையும் தரப்படுத்த தேசிய வாரியம் அமைக்கப்பட வேண்டும். பயிற்சி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது, சான்றிதழ் தருவது, பாடங்களைத் தரப்படுத்துவது ஆகியவற்றை அரசே மேற்கொள்ள வேண்டும். இதையெல்லாம் அயல்பணி ஒப்படைப்பில் தனியார் அமைப்புகள் மூலம் செய்யக் கூடாது. தொழிற்பயிற்சிப் படிப்புகளுக்கென்றே தனி வாரியம் உருவாக்கப்பட வேண்டும். ஐடிஐகளின் அடித்தளக் கட்டமைப்பு, பயிற்சி, பாடங்கள், செயற்கூடங்கள், ஆசிரியர்கள் என்று அனைத்தும் சோதிக்கப்பட்டு தரப்படுத்துவதைச் சட்டப்படி கட்டாயமாக்க வேண்டும். அவற்றின் தரம் ஆண்டுதோறும் வெளிப்படையாகப் பிரசுரிக்கப்பட வேண்டும். பள்ளிப்படிப்பு வயதைத் தாண்டியவர்கள் தொடர்பான கல்விக்கு தேசிய மதிப்பிடல், அங்கீகார கவுன்சில் இருப்பதைப் போல தொழிற்பயிற்சிக் கல்விக்கும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

ஒரே வழிமுறை, ஒரே சட்டம், ஒரே தேசிய தொழிற்பயிற்சிக் கல்வி, பயிற்சி முறை ஏற்பட வேண்டும். தொழிற்பயிற்சி தொடர்பாக ஒருங்கிணைந்த தேசிய முறைமையை ஏற்படுத்த வேண்டும். அனைத்தையும் ஒருங்கிணைக்கும் சட்ட கட்டமைப்பு அதற்கு உதவும். இதற்கென்று தனிச் சட்டம் இல்லாததுதான் கண்காணிப்பையும் ஒழுங்குபடுத்தலையும் மேற்கொள்ள முடியாமல் தடையாக இருக்கிறது.

குறு நிறுவன சீர்திருத்தங்கள்

ஐடிஐ நிறுவனங்களுக்கும் ஊழியர்கள், அவர்களுக்கான ஊதியம் என்று பல உள் பிரச்சினைகள் உள்ளன. ஐடிஐ ஆசிரியர்களுக்கு மறு பயிற்சி அளிக்க வேண்டும், ஆசிரியர்-மாணவர் விகிதம் சரியான அளவில் பராமரிக்கப்பட வேண்டும். எந்தத் தொழில்நுட்பமானாலும் காலப்போக்கில் காலாவதியாகிவிடும் என்பதால் என்எஸ்டிசி மூலம் ஐடிஐகளுக்கு நிதியுதவி அளித்து புதிய தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற வைக்க வேண்டும்.

அங்கீகாரம் அளிப்பதற்கு அரசிடம் போதிய ஊழியர்கள் இல்லை என்பதால் அந்த பணிப் பளு அயல்பணியாக தனியார் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலை இன்றைக்கும் தொடர்கிறது. திறன் மேம்பாட்டுக்குத் தேவைப்படும் தகுதியுள்ள பயிற்சியாளர்களை வெளியிலிருந்தும் எடுத்து நியமித்துக்கொள்ள வேண்டும்.

வேலைவாய்ப்புக்கான தலைமை இயக்குநரகத்தை தொழிலாளர் துறையிலிருந்து விலக்கி, ‘திறன்மேம்பாடு-தொழில்முனைவுத் திறன் வளர்ப்புத் துறை’ (எம்எஸ்டிஇ) வசம் சேர்த்துவிடலாம்.

ஊழியர்கள், நிதியளிப்பு

திறன் மேம்பாட்டுத் திட்டம் எதுவாக இருந்தாலும் அதற்குத் தகுதியுள்ள பயிற்சியாளர்களைப் போதிய எண்ணிக்கையில் நியமிப்பதும் அவர்களுக்கு நல்ல ஊதியம் தருவதும் எப்போதும் சவாலான வேலை. இதற்கான நிதியைத் தொழில் நிறுவனங்களிடமிருந்தே பெறலாம். தொழில் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்குத் தரும் ஊதியத்தின் 1% அல்லது 2% அளவை மட்டும் இதற்காக ஒதுக்கினால் அதுவே ஆண்டுக்கு ரூ.17,000 கோடி அளவுக்குத் திரளும். இந்த முறை இப்போது 62 நாடுகளில் அமலில் இருக்கிறது.

பெரிய தொழிற்சாலைகளில் உற்பத்தியை முழுக்க முழுக்க இயந்திரமயப்படுத்தல், ரோபோக்கள் போன்ற மனிதர்களை நுட்பமான வேலைகளுக்குப் பயன்படுத்தல் என்று உற்பத்தி முறை நவீனமாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தொழிற்பயிற்சி நிறுவனங்களில் 13.8 லட்சம் இளைஞர்கள் தரமற்ற பயிற்சி பெறுவதை அனுமதிக்கவே முடியாது. என்எஸ்டிசி மூலம் பயிற்சி பெற்றவர்கள் வேலை பெறுவது 15%-க்கும் குறைவுதான். இந்த நிலையும் மாற வேண்டும் என்றால் தரமான பயிற்சி, அரசின் நேரடிக் கண்காணிப்பின் மூலமும் உதவிகள் மூலமும் நடைபெற வேண்டும்.

சந்தோஷ் மெஹ்ரோத்ரா - பொருளாதாரப் பேராசிரியர்,

ஆசுதோஷ் பிரதார் - பொருளாதார நிபுணர்

சுருக்கமாகத் தமிழில்: சாரி, ‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x