Last Updated : 25 Jul, 2018 08:22 AM

 

Published : 25 Jul 2018 08:22 AM
Last Updated : 25 Jul 2018 08:22 AM

லூலா: பிரேசில் பேசும் ஒரே பெயர்

பிரேசிலின் க்யூரிடிபா நகரின் 15 சதுர மீட்டர் அளவிலான ஒரு சிறை அறையில் காத்திருக்கிறார் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா. பிரேசில் அதிபராக (2003-2011) இருந்தபோது, அவரே திறந்துவைத்த சிறைச்சாலை அது. ‘ஆபரேஷன் கார் வாஷ்’ என்று அழைக்கப்படும் ஊழல் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட அவர், இந்த வழக்கில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த நிலையில், அவரை விடுவிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீதிபதிகளிடையே பெரும் விவாதம் நடந்தது. இது தொடர்பாக, பிரேசில் முழுவதும் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் பரவலாகப் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இறுதியில், லூலா சிறையிலேயே இருக்க நேர்ந்தது.

அக்டோபர் 7-ல் அதிபர் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது பிரேசில். தொழிலாளர் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளர் லூலாதான். அவரைத் தவிர வேறு வேட்பாளர் கிடையாது என்று உறுதியாக நிற்கிறது அக்கட்சி. லூலாவைத் தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது தொடர்பாக, ஆகஸ்ட் மாதவாக்கில் தேர்தல்கள் தொடர்பான நீதிமன்றம் முடிவெடுக்கவிருக்கிறது. 2018-ல் நடந்த ஒவ்வொரு தேர்தலும் வலதுசாரி வேட்பாளரான ஜேய்ர் போல்சோனாரோவைவிட லூலா முன்னணியில் இருப்பதைக் காட்டுகின்றன.

மக்களின் அதிபர்

லூலாவின் ஆட்சி சமூக ஜனநாயக ஆட்சியாக இருந்தது. பிரேசிலின் பொருளாதாரம் மந்தமாக இருந்த சமயத்தில், ஏற்றுமதிப் பொருட்களின் விலை அதிகரித்தது பொருளாதாரத்துக்குப் பலனளித்தது. பொது நிதியில் கணிசமான தொகையை, வறுமையை எதிர்கொள்வதிலும், கல்வி வாய்ப்புகளை அதிகரிப்பதிலும் பயன்படுத்தினார் லூலா. இந்தத் திட்டங்களால் சமூகரீதியில் சிறுபான்மையாக இருந்த மக்கள் பலனடைந்தனர். பிரேசிலின் முக்கியப் பிரச்சினையான பட்டினி ஒழிக்கப்பட்டது. நம்பிக்கையளிக்கும் விதத்தில் சில மத்திய பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டன.

2007-08 கடன் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், பிரேசிலின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பான சூழல் அந்நாட்டின் பணக்காரர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. லூலாவுக்குப் பின்னர் அதிபரான தில்மா ரூசெஃப் (2011-2016), அந்த நெருக்கடியின் பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்தது. பணக்காரர்கள், தொழிலதிபர்களின் பதற்றத்தைத் தணிக்கும் நடவடிக்கைகளில் தில்மா இறங்கியபோது, தொழிலாளர் கட்சியில் அவருக்கு ஆதரவு குறையத் தொடங்கியது. 2018 வரை நீடிக்க வேண்டிய அவரது ஆட்சி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிவுக்குவந்தது.

2018 வரை காத்திருந்தால், தாங்கள் மீண்டும் தோற்கடிக்கப்பட்டுவிடுவோம் என்று அஞ்சிய மேல்தட்டு வர்க்கத்தினர், தில்மா தலைமையிலான சமூக ஜனநாயக அரசை வீழ்த்த வேண்டும் என்று முடிவுசெய்தனர். வீதிகளில் இறங்கிப் போராடிய அவர்கள், ஆட்சி மாற்றம் வேண்டும் என்று கோரினர். தில்மா பதவியிலிருந்து அகற்றப்பட்டு, மிச்சேல் தெமர் அதிபராக்கப்பட்டார். மேல்தட்டு வர்க்கத்தினர் இவரை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, இயற்கை வளங்களைச் சுரண்டுவது, தொழிலாளர் சட்டங்களைப் புறக்கணிப்பது, அரசுக் கருவூலத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நிதிப் பரிமாற்றங்களை மேற்கொள்வது என்று மேல்தட்டு மக்கள் இறங்கினர்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்

அற்பமான சான்றுகளின் அடிப்படையில், லூலா குற்றவாளியாக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த சிலரே ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், அதை வெளிப்படையாகச் சொல்ல அவர்கள் விரும்பவில்லை. பிரேசில் அரசியல் களத்திலிருந்து லூலா அகற்றப்படுவது தங்களுக்குப் பலனளிக்கும் என்று கருதும் மூத்த அரசியல் தலைவர்கள் மவுனம் காக்கிறார்கள்.

மேல்தட்டு வர்க்கத்தினர் தங்கள் அசுத்தமான அரசியல் உலகத்துக்குள் நீதித் துறையை இழுத்திருக்கிறார்கள். ஆனால், அரசியல் உலகத்துக்குள் மீண்டும் நுழையும் எண்ணம் பிரேசில் ராணுவத்துக்கு இல்லை. ராணுவ உயரதிகாரிகளை ராணுவ ஆட்சி ஊழல்மயமாக்கிவிட்டது என்றும், ராணுவத்தின் நம்பிக்கையைச் சிதைத்துவிட்டது என்றும் சர்வாதிகாரியாக இருந்த ஜெனரல் எர்னஸ்டோ கீஸெல் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஆபத்தில் நீதித் துறை

இந்தச் சூழலில் நீதித் துறை ஒட்டுமொத்தமாக அரசியல்மயமாகும் நிலை உருவாகியிருக்கிறது. சமீபத்தில், நீதிபதிகள் பொதுவெளியில் சர்ச்சையில் ஈடுபட்ட சம்பவமும், நீதிபதிகளின் உத்தரவைச் செயல்படுத்த காவல் துறை அதிகாரிகள் மறுத்த சம்பவமும் நடந்திருக்கின்றன. லூலாவின் ஆட்கொணர்வு மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக சில மாகாணங்களின் ஆளுநர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதேபோல், நீதித் துறை ஊழல்மயமாகிவிட்டதாகச் சில வழக்கறிஞர்கள் அறிக்கை வெளியிட்டனர்.

பிரேசிலின் நீதித் துறையில் ஏற்பட்டிருக்கும் இந்தப் பிரச்சினை தொடர்பாக அந்நாட்டின் தேசிய நீதி கவுன்சில் விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. எனினும், இந்த விசாரணை அறிக்கையால், நீதித் துறைப் புரையோடிப்போயிருக்கும் நிலைக்குத் தீர்வு காண வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஜூலை மாத இறுதியில், பிரேசிலின் பிரபலமான அரசியல் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் 11 பேர், லூலாவை விடுவிக்கக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருக்கிறார்கள். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட் 10-ல் வர்த்தக சங்கங்கள் பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. சுமார் நான்கு லட்சம் விவசாயிகள், பிரேசிலின் பல்வேறு பகுதிகளிலிருந்து தலைநகரை நோக்கிப் பேரணி நடத்தவிருக்கிறார்கள். இசைக் கலைஞர்களும் இசை நிகழ்ச்சிகள் நடத்தவிருக்கிறார்கள். மக்களின் மனநிலை தெளிவாக உணர்த்துவது இதைத்தான்: ‘திரும்பி வாருங்கள் லூலா, நெருக்கடி முற்றிவிட்டது, ஆபத்தான நிலைமை ஏற்பட்டிருக்கிறது!’

பெருகும் ஆதரவு

தேர்தலில் லூலா போட்டியிடுவதற்கு நீதிமன்றங்கள் அனுமதிக்காது என்றே தெரிகிறது என சுட்டிக்காட்டுகிறார் பேராசிரியர் போமார். எனினும், இது வலதுசாரிகளுக்கு சாதகமாக அமையும் என்றும் சொல்ல முடியாது. சமீபகாலமாக, ‘சதி முகாம்’ என்று அழைக்கப்படும் வலதுசாரித் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் பிளவுகள், போல்சோனாரோ மீதான அவர்களின் அவநம்பிக்கை ஆகியவை வேறு சில சமிக்ஞைகளை உணர்த்துகின்றன. லூலா, தனக்குப் பதிலாக, தொழிலாளர் கட்சியின் தலைவர் க்ளெய்சி ஹாஃப்மேனைத் தேர்தலில் போட்டியிட வைக்கலாம் அல்லது தேர்தலைப் புறக்கணிக்கக் கோரலாம் என்கிறார் போமார். அக்டோபரில் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் அதுவரை இந்தக் குழப்பம் நீடிக்கும் என்கிறார் அவர்.

சிறையில், பத்திரிகையாளர்களைச் சந்திப்பதற்கு லூலாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும் ட்விட்டர் பதிவுகள் எழுதுவதற்கும், பார்வையாளர்களைச் சந்திக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரம், “பிரேசிலின் ஏழை மக்கள் படும் துயரம் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது” என்று ட்வீட் செய்திருந்தார் லூலா. #‘ரெகாடோடூலூலா’ (லூலாவின் செய்தி) எனும் ஹேஷ்டேக் சமீபகாலமாகப் பிரபலம். இன்னொரு ஹேஷ்டேக் இன்னும் பிரபலம். அது ‘மஸாவோ’ (நான் உங்களை நேசிக்கிறேன்). அது குறிப்பது லூலாவைத்தான்!

விஜய் பிரசாத், தி இந்து ஆங்கிலம்.

தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x