Published : 05 Jul 2018 09:05 AM
Last Updated : 05 Jul 2018 09:05 AM

இந்தியாவில் ஏன் பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க முடியவில்லை?

நு

கர்வோரின் பயன்பாட்டில் இருக்கும் பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களுக்குக் கடந்த மாதம் மகாராஷ்டிர அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் விஷயத்தில் ஆர்வம் கொண்ட எனது மும்பைத் தோழி, தனது அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் இருந்த சிறிதும் பெரிதுமான எல்லா பிளாஸ்டிக் பொருட்களையும் சேகரித்து அகற்றினார். எல்லா பொருட்களையும் கொட்டிவைக்க, இரண்டு பெரிய பைகள் (அவையும் பாலிதீன் பைகள்தான் என்பது வேறு விஷயம்!) தேவைப்பட்டன. யோசித்துப் பாருங்கள், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒரு நபருடைய வீட்டில் மட்டும் இத்தனை பிளாஸ்டிக் பொருட்கள் இருந்திருக்கின்றன.

நமது வாழிடம், சுற்றுப்புறங்களில் நிறைந்திருக்கும் பிளாஸ்டிக் பொருட்களைப் பார்க்கிறோம். ஆனால், கிட்டத்தட்ட 18 மாநிலங்களில் ஏற்கெனவே பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் தடை இருக் கிறது. மகாராஷ்டிர அரசின் மக்காத குப்பைகள் (தடுப்பு) சட்டம் 2006-ன்கீழ் வெளியிடப்பட்டிருக்கும் மகாராஷ்டிரா பிளாஸ்டிக் மற்றும் தெர்மோகோல் பொருட்கள் (உற்பத்தி, பயன்பாடு, விற்பனை, எடுத்துச்செல்லப்படுதல், கையாளுதல், சேமித்துவைத்தல்) அறிவிப்பு, நமது பூமியைத் திணறடித்துக்கொண்டிருக்கும் அழிக்க முடியாத பிளாஸ்டிக் குப்பைகள் தொடர்பான பிரச்சினையை எதிர்கொள்வதில், பல்வேறு மாநில அரசுகள் எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதிதான்.

தளர்த்தப்படும் விதிகள்

இந்தியாவில் பிளாஸ்டிக்குக்கு எதிரான இந்தப் போர், 1999-லிருந்து தொடங்குகிறது எனலாம். பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகளை மத்திய அரசு கொண்டுவந்தது அப்போதுதான். அன்றிலிருந்து அந்த விதி முறைகள் தொடர்ந்து திருத்தப்பட்டுவருகின்றன. 2016-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நல்ல அணுகுமுறை கொண்டது. அதன்படி, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள் வரை பொறுப்பு நீட்டிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களைப் பிரித்தெடுத்தல், கையாளுதல், மறுசுழற்சி, பயன்பாட்டைக் குறைத்தல் என்று பல பொறுப்புகள், நுகர்வோர், குடிமைச் சமூகக் குழுக்கள் (கிராம அளவி லான குழுக்கள் உட்பட) பல்வேறு தரப்பினருக்கும் விதிக்கப்பட்டன.

சரி, இந்த விதிமுறைகள் ஏன் பயனளிக்கவில்லை? இதுபோன்ற தடைகளை அரசு கொண்டுவரும் போதெல்லாம், பிளாஸ்டிக் தொழிலைச் சேர்ந்தவர்கள் உடனடியாகப் பெரிய அளவில் ‘லாபி’ செய்கிறார்கள். பெரும்பாலும் இதுபோன்ற சமயங்களில் அரசும் பின்வாங்கிவிடுகிறது. மகாராஷ்டிரத்தில் இதுபோன்ற தடைகள், அறிவிக்கப்பட்ட ஒரே வாரத்தில் நீர்த்துப்போன சம் பவங்கள் பல. இப்போதுகூட, ஒரேமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாநிலம் முழுவதும் தடை விதித்திருக்கும் அரசு, அந்தப் பொருட்களைச் சிறு வணிகர்கள் முழுமையாகக் கைவிடுவதற்கான அவகாசத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டித்திருக்கிறது.

விநாயகர் சதுர்த்தி நெருங்கிவரும் நிலையில், விநாயகர் சிலைகள் செய்யப் பயன்படுத்தப்படும் தெர்மோகோலுக்கு இந்தத் தடையிலிருந்து அவசர அவசரமாக விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மீன்களைச் சேகரித்துவைக்கும் தெர்மோகோல் பெட்டிகளை மீனவர்கள் பயன்படுத்தும் வகையிலும் இந்த விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவப் பொருட்களை அடைத்துவைக்கும் பிளாஸ்டிக் பெட்டிகள், உணவுப் பொருட்களை வைக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், திடக் கழிவை அகற்றப் பயன்படுத்தப்படும் பொருட்கள், ஏற்றுமதியில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், உற்பத் தித் துறையில் இன்றியமையாத பிளாஸ்டிக் பொருட்கள், வேளாண் துறையில் பயன்படுத்தப்படும் பைகள் (இவை மக்கும் தன்மை கொண்டவை என்று சொல்லப்படுகிறது) என்று விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் பட்டியல் நீள்கிறது. அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இணையவழி வர்த்தக நிறுவனங்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தொடர அந்நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது பற்றி அம்மாநில அரசு பரிசீலித்துவருகிறது, கழிவுகளைச் சேகரிக்கும் வழிமுறை ஒன்றை அந்நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்!

நடைமுறைச் சிக்கல்கள்

பிளாஸ்டிக் பொருட்களுக்குச் சட்டரீதியான கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் விஷயத்தில் இந்தியா முழுவதும் இருக்கும் நிலைமை இதுதான். 2016-ல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை அறிவித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், அவை அமல்படுத்தப்படுவது என்பது இன்னமும் தொடங்கவே இல்லை. அதற்குள் அந்த விதி முறைகள் நீர்த்துப்போகத் தொடங்கியிருக்கின்றன.

2016-ல் கொண்டுவரப்பட்ட விதிமுறைகளின்படி, சில்லறை வணிக மையங்கள் பிளாஸ்டிக் பைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கத் தொடங்கின. இதுதொடர்பாக, உள்ளாட்சி அமைப்பில் பதிவுசெய்துகொண்டு, மாதம் ரூ.4,000 கட்டணமாகவும் செலுத்திவந்தன. அது தற்போது திரும்பப் பெறப்பட்டுவிட்டது. இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம். இந்தியர்கள் பிளாஸ்டிக்கை நேசிக்கிறார்கள் என்பது தான் பிரச்சினை. இந்தியாவில் ஒரு தனிநபர், ஓராண்டில் 11 கிலோ பிளாஸ்டிக் பயன்படுத்துகிறார். ஒரு அமெரிக்கர் சராசரியாக 100 கிலோ பிளாஸ்டிக் பயன்படுத்துகிறார். ஆனால், விஷயம் இத்துடன் முடிந்துவிடவில்லை. உலகிலேயே அதிக அளவில் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும், பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, ஒவ்வொரு நாளும் 26,000 டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்திசெய்கிறது இந்தியா.

மாற்றுவழிகள் அவசியம்

எனினும், கிடைக்கும் தரவுகள் தெளிவில்லாதவை. மேலும், இந்தத் தரவு, இந்தியாவின் வருடாந்திர பிளாஸ்டிக் உற்பத்தியுடன் பொருந்திவரவில்லை. 2020-ம் ஆண்டுவாக்கில் இந்தியாவின் வருடாந்திர பிளாஸ்டிக் உற்பத்தி, 2 கோடி டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2017-ல் வெளியான ‘எஃப்.ஐ.சி.சி.ஐ’ அறிக்கையின்படி, பிளாஸ்டிக் தொழில் துறை ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் கோடி உற்பத்தி செய் கிறது. 30,000-க்கும் அதிகமான ஆலைகள் உள்ளன. 11 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. பொருளாதாரரீதியாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத் தும் எனும் நிலையில், பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளுக்கு உடனடியான எதிர்ப்பு உருவாகிவிடுகிறது.

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதிலும், உற்பத்தியாளர்களும் பயன்பாட்டாளர்களும் பொறுப்புடன் செயல்படும் நிலையை உருவாக்குவதிலும், மாற்று வழிகளைத் தேடுவதில் கவனம் செலுத்துவதிலும் உறுதியான நிலைப்பாடு அவசியம். பேக்கேஜிங் பொருட்கள் தயாரிப்பில் உலகின் மிகச் சிறந்த இயற்கைப் பொருளான சணல் உற்பத்திக்குப் பெயர்போனது இந்தியா. ஆனால், மலிவு விலை பிளாஸ்டிக் அதிகரித்ததாலும் இது தொடர்பான கொள்கையில் ஏற்பட்ட தேக்க நிலையாலும் சணல் உற்பத்தி முற்றிலும் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக, சமூக அளவிலான மாற்றம்தான் மிக அவசியம். சின்னஞ்சிறு மாநிலமான சிக்கிம் இதற்கு வழிகாட்டியிருக்கிறது. பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பான கொள்கை மாற்றங்களுடன் பெரிய அளவிலான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் அம்மாநிலத்தில் பிளாஸ்டிக் குறைப்பைக் கணிசமான அளவில் சாத்தியமாக்கியிருக்கின்றன. பிளாஸ்டிக் விஷயத்தில் சிக்கிமைப் போல் நாடு முழுவதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், ‘வால்-ஈ’ அனிமேஷன் திரைப்படத்தில் வருவதுபோல், மனிதர்கள் வாழத் தகுதியில்லாத ‘டிஸ்டோப்பியன்’ பூமியைத்தான் வருங்காலச் சந்ததியினருக்கு விட்டுச்செல்வோம்!

‘தி இந்து’ ஆங்கிலம்

தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x