Published : 06 Jun 2018 11:04 AM
Last Updated : 06 Jun 2018 11:04 AM

சிறைகளில் வாடும் தளிர்கள்!

டிஷா மாநிலச் சிறைகளில் 21 ஆண் குழந்தைகளும் 25 பெண் குழந்தைகளும் சிறைவாசம் அனுபவிக்கும் தங்களுடைய தாயார்களுடன் வாழ்கின்றனர். இம்மாதிரியான குழந்தைகளுக்கு உச்ச நீதிமன்றமே உத்தரவிட்ட குறைந்தபட்ச உதவிகள்கூட இல்லாமல், சிறைக் கைதிகளைப் போலவே குழந்தைகளும் நடத்தப்படுகின்றனர். ‘தாயைவிட்டுக் குழந்தையைப் பிரிக்கக் கூடாது’ என்கிற நியதியை ஒடிஷா மாநில சிறைக்கூடங்கள் வேறு காரணத்துக்காகக் கடைபிடிப்பது நகைமுரண்.

இந்தக் குழந்தைகளுக்கு வயது, ஒரு மாதம் முதல் ஆறு வயது வரை. 46 குழந்தைகளில் பல குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லும் வயதை எட்டிவிட்டபோதும் படிப்பு ஏதும் இல்லாமல் சிறைக் கொட்டடியே கதியாக இருக்கின்றன.

மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான விஸ்வபிரியா கனுங்கோவின் கேள்விகளுக்குப் பிறகுதான் சிறையில் வாடும் குழந்தைகள் குறித்த தகவல்கள் ஓரளவுக்கேனும் கிடைத்திருக்கின்றன. சிறையில் இருக்கும் பெண்களில் 9 பேர்தான் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள். 36 பேர் வெறும் விசாரணைக் கைதிகள்தான். இந்த 45 பேரில் 30 பேர் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள். குழந்தைகள் உள்ள பெண்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை அளித்திருந்தாலும் அது பின்பற்றப்படுவதில்லை. பெரும்பாலானவர்கள் சாதாரண குற்றச்சாட்டுகளில்தான் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளைப் பார்க்கும்போது, அவர்களுக்கு எப்போதோ ஜாமீன் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ‘கிரீச்’ என்ற மழலையர் பகல் காப்பகத்திலும், இரண்டு முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகள் ‘நர்சரி’ என்ற குழந்தைகள் வளர்ப்பகத்திலும் தங்க வைக்கப்பட உரிமை பெற்றவர்கள். சிறை வளாகத்துக்கு வெளியே இவ்விரண்டையும் சிறை நிர்வாகம் நடத்த வேண்டும். வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றியிருந்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கமலலோசன சேத்தி, அவருடைய மனைவி சுஜாதா ஆகியோர் தொல்லைகளுக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள். மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவ்விருவரும் 2008 மே 18-ல் கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டபோது சுஜாதா ஏழு மாதக் கர்ப்பிணி. மூன்று மாதங்களுக்குப் பிறகு சுஜாதாவுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அடுத்த ஒன்பது ஆண்டுகளில் கணவன், மனைவி இருவரும் நான்கு சிறைகளில் மாற்றி மாற்றி அடைக்கப்பட்டனர். ‘சிறைத் துறை செய்த ஒரே நல்ல காரியம், பிரசவத்துக்கு பெர்ஹாம்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்ததுதான். சிறைக்குத் திரும்பிய பிறகு குழந்தைக்கும் தாய்க்கும் புரதம் (பருப்பு) சேர்ந்த உணவும், குளிக்க எண்ணெயும் தர வேண்டும் என்பது வழிகாட்டு நெறியில் உள்ளது. ஆனால், அதிகாரிகள் அதையெல்லாம் கடைப்பிடிக்கவில்லை. சுஜாதா போராடப்போவதாக எச்சரித்த பிறகே தந்தார்கள்’ என்கிறார் சேத்தி.

குழந்தை பிறந்த சில நாட்களில் புவனேஸ்வரத்தில் உள்ள சிறைக்கு சுஜாதாவையும் குழந்தையையும் கொண்டுசென்றார்கள். ‘அந்த முதல் நாளை இப்போது நினைத்தாலும் அச்சமாக இருக்கிறது; ஆறு அடி நீளம், ஆறு அடி அகலம் மட்டுமே உள்ள அந்தச் சிறு அறையில் இருவரையும் 24 மணி நேரமும் அடைத்துவைத்தனர். குழந்தை, அந்த இருட்டறையில் விடாமல் வீறிட்டு அழுதது. ஆனால், யாரும் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அடுத்த நாள் அழுதுபுரண்டு கெஞ்சிக் கேட்ட பிறகே அந்த அறையிலிருந்து மாற்றினார்கள்” என்கிறார் சுஜாதா. துயரம் என்னவென்றால், இவ்விருவர் மீதான குற்றச்சாட்டில் ஒன்றுகூட உண்மையில்லை என்று கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். சிறையில் தாய் அல்லது தந்தையுடன் இருக்கும் குழந்தைக்கு ஆறு வயதாகிவிட்டால் அவர்களைத் தாய் அல்லது தந்தையின் விருப்பப்படி இன்னொரு பொறுப்பான பாதுகாவலரின் பாதுகாப்பில் வளர அனுமதிக்க வேண்டும். அல்லது சமூகநலத் துறை நடத்தும் பள்ளிக்கூடங்களில் சேர்த்துப் படிக்கவைக்க வேண்டும். இதனாலேயே குழந்தைகளின் வயதில்கூட சிறை ஊழியர்கள் தில்லுமுல்லு செய்துவிடுகின்றனர் என்றும் தெரியவருகிறது.

தமிழில்: சாரி, ‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x