Last Updated : 19 Apr, 2018 10:21 AM

 

Published : 19 Apr 2018 10:21 AM
Last Updated : 19 Apr 2018 10:21 AM

தென் மாநிலங்கள் ஏன் நிதிக் குழுவைக் கண்டிக்கின்றன?

ந்திய ஒன்றியத்தில் ஒன்றியத்துக்கும் மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளும் கடமைகளும் சம அளவில் இல்லை. ஒன்றியத்தின் உரிமைகள் கூடுதலாகவும் கடமைகள் குறைவாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சமமின்மை வரி வருவாயிலும் காணப்படுகிறது. இதை ஈடுகட்ட அரசியலமைப்புரீதியாக உருவாக்கப்பட்ட ஏற்பாடே நிதிக் குழு. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படும் நிதிக் குழுவானது, இரண்டு பகிர்வுகளைத் தீர்மானிக்கிறது. வரி வருவாயில் ஒன்றியத்துக்கும் மாநிலங்களுக்கும் எவ்வளவு பங்கு என்பது முதலாவது. மாநிலங்களின் பங்கில் ஒவ்வொரு மாநிலத்தின் பங்கும் எவ்வளவு என்பது இரண்டாவது பகிர்வு.

தற்போது அமைக்கப்பட்டிருப்பது 15-வது நிதிக் குழு. இக்குழு 2020-25 காலகட்டத்தில் மேற்கூறிய பகிர்வுகளைத் தீர்மானிக்க உருவாக்கப்பட்டுள்ளது. நிதிக் குழு உருவாக்கம் என்பது இந்தியா குடியரசு ஆன காலம் தொட்டு நடைபெறும் ஒன்றுதான். ஆனால், 15-வது நிதிக் குழு ஒரு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது ஏன்?

நிதிப் பகிர்வுக்கான நியாயங்கள்

நிதிக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள பணி வரன்முறைதான் தற்போதைய விவாதத்துக்கு வித்திட்டது. நிதிப் பகிர்வை எந்த அடிப்படையில் மேற்கொள்வது? ஒன்றியத்துக்கும் மாநிலங்களுக்கும் உள்ள கடமையைக் கருத்தில் கொண்டு, இந்தப் பகிர்வு நடக்க வேண்டும். அதன் பின்னர் மாநிலங்களுக்கிடையேயான பகிர்வு நியாயத்தின் அடிப்படையில் நடைபெற வேண்டும். இந்த இரண்டாவது பகிர்வு சமமாகப் பகிரப்படுவதில்லை. மாறாக நியாயமாகப் பகிரப்படுகிறது. எது நியாயம் என்பதுதான் தற்போதைய சச்சரவு.

ஒவ்வொரு மாநிலமும் தனது குடிமக்களுக்கு அடிப்படைத் தேவைகளைச் செய்துதரக் கடமைப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான நிதி ஆதாரம் அதற்கு இருக்க வேண்டும்; இல்லாத மாநிலங்கள் ஒன்றியத்திலிருந்து கூடுதல் நிதியைப் பெறும். நிதி ஆதாரம் உள்ள மாநிலங்கள் குறைவாகப் பெறும். இவ்வாறு மாநிலங்களின் பங்கு வேறுபடும். இது மட்டுமின்றி மாநிலங்களின் வளர்ச்சியும் சீராக இருப்பதில்லை. வளர்ச்சியால் பின்தங்கிய மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி வழங்கி அவற்றின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு அவற்றுக்குக் கூடுதல் நிதி வழங்கப்படும். இவை இரண்டும்தான் ‘நியாயம்’ என இதுவரை கருதப்பட்டு ஒதுக்கப்படும் பங்கில் ஏறத்தாழ 80% இந்த இரண்டு நியாயங்களுக்காகவும் வழங்கப்படுகிறது. மற்ற நியாயங்களுக்கெல்லாம் வழங்கப்படுவது மீதமுள்ள 20% மட்டுமே.

மாநிலங்களின் குடிமக்களுக்கான அடிப்படைத் தேவையை எவ்வாறு கணக்கிடுவது? அம்மாநிலத்தின் மக்கள்தொகையைப் பொறுத்து தேவையின் அளவு மாறுபடும். குறைவான மக்கள்தொகை கொண்ட மாநிலங்களின் நிதித் தேவை குறைவு. ஆகவே, மக்கள்தொகையின் எண்ணிக்கையைத் தேவையின் பதிலியாகக் கணக்கில் கொள்கின்றது நிதிக் குழு. வளர்ச்சியின் பதிலியாக தனிநபர் சராசரி வருமானம் கணக்கில் கொள்ளப்படுகிறது. எந்த ஒரு மாநிலத்தில் ஆகக் கூடுதலாக தனிநபர் சராசரி வருட வருமானம் உள்ளதோ அதிலிருந்து மற்ற மாநிலங்களின் தனிநபர் சராசரி வருமானம் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை வைத்து ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியும் கணக்கிடப்படுகிறது. எந்த மாநிலங்கள் தொலைவில் உள்ளனவோ அவையெல்லாம் கூடுதல் நிதியைப் பெறுகின்றன.

ஆக, ஒரு மாநிலத்தின் மக்கள்தொகையின் எண்ணிக்கை அம்மாநிலத்தின் பங்கைப் பெருமளவில் தீர்மானிக்கிறது. நேரடியாக ‘தேவையின்’ வழியாகவும் மறைமுகமாக வளர்ச்சியின் நிலை வழியாகவும் இது நடைபெறுகிறது. (தனிநபர் சராசரி வருவாயைக் கணக்கிட அந்த மாநிலத்தின் ஒரு ஆண்டின் நிகர உற்பத்தியை அம்மாநிலத்தின் மக்கள்தொகையால் வகுத்தால் கிடைப்பதே தனிநபர் சராசரி வருமானமாகும்). இந்தப் பகிர்ந்தளிக்கும் முறைதான் மிகப் பெரிய கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

சர்சைக்குரிய மக்கள்தொகைக் கணக்கு

நிதிப் பகிர்வில் முக்கியப் பங்காற்றும் மக்கள்தொகை எண்ணிக்கை சமீப காலங்களில் பெரும் மாற்றங்களைச் சந்திக்கிறது. குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள் சிறப்பாக செயல்பட்டதால் தென் மாநிலங்களில் மக்கள்தொகைப் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில் வடமாநிலங்களில் மக்கள்தொகைப் பெருக்கம் பெருமளவில் தொடர்கிறது. நாட்டின் மக்கள்தொகையில் ஓராண்டு காலத்தில் பிறப்பும் இறப்பும் நிகழும். பிறப்பு எண்ணிக்கையும் இறப்பு எண்ணிக்கையும் சமமாக இருந்தால் நாட்டின் மக்கள்தொகை மாற்றமில்லாது தொடரும். எந்தப் பிறப்பு விகிதத்தில் மக்கள்தொகை பெருகினால் ஒட்டுமொத்த மக்களின் எண்ணிக்கை நிலைத்திருக்குமோ அதுவே மக்கள்தொகை மாற்றீடு விகிதம் ( Replacement rate) ஆகும். தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள மக்கள்தொகை நிரப்பு விகிதம் 2.1 என்பதாகும். கேரளம் (1.6), தமிழகம் (1.7), ஆந்திரமும் கர்நாடகமும் (1.8) என்ற அளவில் பிறப்பு விகிதம் கொண்டுள்ளன. மாறாக உத்தரப் பிரதேசம் (2.7), பிஹார் (3.4), ராஜஸ்தான் (2.4), மத்தியப் பிரதேசம் (2.3) என்ற அளவில் பிறப்பு விகிதங்கள் கொண்டுள்ளன. இதனால் தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்களின் மக்கள்தொகை 50% வளரும் காலத்துக்குள் வட மாநிலங்களின் மக்கள்தொகை 150% வளர்ந்துவிடுகிறது.

இதனைக் கணக்கில் கொண்டுதான் குடும்பக் கட்டுப்பாடு தீவிரமாக அமல்படுத்தப்பட்ட 1970-களிலேயே இதனை உணர்ந்த நாடாளுமன்றம், ‘இனி வரும் காலங்களில் நிதிப் பகிர்வும் பிரதிநிதித்துவமும் 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே நடைபெறும்’ என்று முடிவெடுத்தனர். அந்த நிலையே 13-வது நிதிக் குழு வரை தொடர்ந்தது. கடந்த 14-வது நிதிக் குழு முதல் முறையாக 1971 மக்கள்தொகை கணக்கு மட்டுமல்லாது 2011 மக்கள்தொகை கணக்கையும் நிதிப் பகிர்வில் இணைத்துக்கொண்டது. விளைவாகத் தமிழகம் போன்ற மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்திய மாநிலங்களின் பங்கின் அளவு சுருங்கியது. அதாவது, 13-வது நிதிக் குழுவில் கிடைத்த பங்கு நிதியைவிட 14-வது நிதிக் குழுவில் பங்கு குறைந்தது.

தென் மாநிலங்களுக்குப் பாதிப்பு

இந்த நிலையில் 15ஆவது நிதிக் குழுவுக்கான பணி வரன்முறை 2011ஆம் ஆண்டு மக்கள்தொகையை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசு ஆணையிட்டுள்ளது. இதனால்தான் தமிழகத்தின் பங்கு பெரும் சரிவடையும் என நிதி நிபுணர்கள் கணக்கிடுகிறார்கள். எந்த மாநிலங்களெல்லாம் மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தினவோ அவையெல்லாம் இப்படியான இழப்பைச் சந்திக்கும். முக்கியமாக தென் மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்படும். ஆகவேதான், தென் மாநில முதல்வர்கள் இந்த நடைமுறைக்கு எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றனர். இது வட, தென் மாநிலங்களுக்கிடையேயான ஒரு பிரச்சினையாகத் தோன்றுவது தன்னிச்சையான ஒன்றே. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஒன்றிய நிதியமைச்சர் நிதிப் பகிர்வு நியாயமாக நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், நிதிக் குழுவின் பணி வரன்முறையில் மேற்கூறிய ‘நியாயங்கள்’ தவிர கூறப்பட்டுள்ள ‘நியாயங்கள்’ மாநில உரிமைகளை மேலும் பறிப்பவையாகவே உள்ளன. பிரதமரின் ‘அச்சம் கொள்ளாதீர்’ என்ற வேண்டுகோளுக்கும் வரன்முறையில் எந்த முகாந்திரமும் காணப்படவில்லை.

மாநிலங்களின் மாற்றீடு நிலை (replacement level) என்பதை நோக்கி நகர ஊக்கம் தரலாமா என்ற கேள்விதான் முன்வைக்கப்பட்டுள்ளது. அப்படியே ஊக்கம் கொடுக்க நிதிக் குழு பரிந்துரைத்ததாலும் ஏற்கெனவே மாற்றீடு நிலையை அடைந்த மாநிலங்கள் எங்கனம் பயன்பெறும்? மேலும், மக்கள்தொகை அடிப்படையிலும், வளர்ச்சியில் பின்தங்கிய அடிப்படையிலும் 80%-ஐ ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 20% நிதியில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு என்ன நியாயம் செய்துவிட முடியும்?

வளர்ந்த மாநிலங்களுக்கான கூடுதல் நிதிக்கு எத்தனையோ நியாயங்கள் உள்ளன. தமிழகம் விரைவாக நகரமயமாகிவருகிறது. அதற்கான உள்கட்டமைப்பை உருவாக்கும் பொறுப்பும் மாநில அரசுக்கு இல்லையா? துவக்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்களைத் தொடரவும், விரிவாக்கம் செய்யவும் நியாயம் இல்லையா? இவற்றையெல்லாம் நியாயம் என நிதிக் குழு கருதுமா? தற்போதைய வரன்முறையில் இந்த நியாயங்கள் காணப்படவில்லை என்பதே நிதர்சனம். மாநிலங்களின் வேறுபட்ட தேவைகளைக் கணக்கில் கொள்வது ஒன்றியத்தை வலுப்படுத்தும். புறக்கணிப்பது இந்திய ஒன்றியத்திற்கு வலு சேர்க்காது.

- ஜெ.ஜெயரஞ்சன், பொருளாதார அறிஞர், பொருளாதார ஆசிரியர் - ‘மின்னம்பலம்’ இணைய இதழ்.

தொடர்புக்கு:jeyaranjan@minnambalam.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x