Published : 05 Aug 2014 12:00 AM
Last Updated : 05 Aug 2014 12:00 AM

மார்க்ஸியத்துக்கும் இந்துத்துவாவுக்கும் அப்பால்

புராணங்களை வரலாறு என்று நம்புபவர்தான் வரலாற்று ஆய்வாளரா?

இந்தியாவின் சிறந்த வரலாற்று ஆய்வுக் கல்வி நிலையங்கள் அனைத்திலும் 1980-களில் மார்க்ஸியவாதிகளின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. இதற்கு மூன்று காரணங்கள் இருந்தன. முதலாவது அறிவுபூர்வமானது. ராஜாக்கள், சக்ரவர்த்திகள், போர்கள்குறித்து பாரம்பரியமாகக் கொண்டிருந்த சிந்தனைகளை மார்க்ஸியம் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் கேள்விகள் கேட்டது. அதே சமயம், விவசாயிகள், தொழிலாளர்கள் நிலை தொடர்பான வரலாற்றை ஆராய்ந்து தக்க ஆதாரங்களுடன் வெளியிட்டது.

இந்திய வரலாற்றை எழுதுவதற்கு ஊக்கசக்தியாக இருந்தவர்கள் பிரிட்டனைச் சேர்ந்த இ.பி. தாம்சன், எரிக் ஹாப்ஸ்பாம் போன்ற மார்க்ஸிய வாதிகள்தான். அடித்தட்டு மக்களிடமிருந்து தரவுகளைப் பெற்று வரலாற்றை வடித்தவர்கள்.

இரண்டாவது காரணம், மார்க்ஸிய சிந்தனையின் தத்து வார்த்தச் சிறப்பு. 1960-களிலும் 1970-களிலும் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் காலனி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள்தான் தலைமை தாங்கின. ஹோசிமின், சமோரா மசேல் போன்றவர்கள் இந்தியாவிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் வரலாற்று நாயகர்களாகவே பாவிக்கப்பட்டனர். விடுதலைக்காகப் போராடிய இவர்களுக்கு சோவியத் ரஷ்யாவும் கம்யூனிஸ்ட் சீனாவும் ஆதரவு அளித்தன; அதே வேளையில், அமெரிக்காவும் முதலாளித்துவ நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்தன.

மூன்றாவது காரணம், அரசின் அரவணைப்பு அவர் களுக்கு இருந்தது. 1969-ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. மக்களவையில் அந்தக் கட்சிக்குப் பெரும்பான்மை வலு குறைந்தது. இந்திரா காந்தி பிரதமர் பதவியில் நீடிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தந்தது. அதே வேளையில், முன்னாள் கம்யூனிஸ்ட்கள் பலர் காங்கிரஸ் கட்சியில் நேரடியாகச் சேர்ந்து மத்திய அமைச்சரவையிலேயே இடம்பெற்றனர். பொருளாதார, வெளியுறவு முடிவுகளிலும் இடதுசாரிக் கொள்கைகளையே அரசு கடைபிடித்தது.

ஐ.சி.எஸ்.எஸ்.ஆரும் ஐ.சி.எச்.ஆரும்

இந்திரா காந்தி இடதுசாரிகளிடம் ஆதரவு கோரிப் பெறுவதற்கு முன்னால் 1969-ல் ‘சமூக அறிவியல் ஆய்வுக்கான இந்திய கவுன்சில்' (ஐ.சி.எஸ்.எஸ்.ஆர்.) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. நாட்டில் ஏற்பட்டு

வரும் சமூக, பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப ஆராய்ச்சிகள் அமைய வேண்டும் என்பதற்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த கவுன்சில் சில முதல்தரமான கல்விக் கழகங்களுக்கு நிதியுதவி அளித்தது.

வரலாறு என்பது சமூக அறிவியல் மட்டுமல்ல, இலக்கியத்தின் ஒரு கிளையுமாகும். கொள்கைப்படி பார்த்தால், வரலாற்று ஆய்வும் ஐ.சி.எஸ்.எஸ்.ஆர். அமைப்பால் மேற்கொள்ளப்பட வேண்டியதே. ஆனால், 1972-ல் ‘வரலாற்று ஆய்வுக்கான இந்திய கவுன்சில்' (ஐ.சி.எச்.ஆர்.) என்ற தனி அமைப்பை அரசு ஏற்படுத்தியது. அப்போது கல்வியமைச்சராக இருந்த பேராசிரியர் நூருல் ஹாசனே மிகச் சிறந்த வரலாற்றாசிரியர். ஐ.சி.எச்.ஆர். அமைப்புக்குத் தலைமை வகித்தவர்களும் இடம்பெற்றவர்களும் நூருல் ஹாசனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். சித்தாந்தரீதியாக அனைவரும் மார்க்ஸியவாதிகள்.

ஐ.சி.எஸ்.எஸ்.ஆர். என்ற அமைப்பை ஏற்படுத்த முக்கியக் காரணமாக இருந்தவர்கள் பொருளாதார அறிஞர் டி.ஆர். காட்கில், கல்வியாளர் ஜே.பி. நாயக் ஆகியோர். இருவரும் மிகச் சிறந்த கல்வியாளர்கள். ஆனால், இருவருமே மார்க்ஸியவாதிகள் அல்ல. சுதந்திரமான சிந்தனை கொண்டவர்கள். ஆனால், ஐ.சி.எச்.ஆர்., ஆரம்ப காலம் முதலே இடதுசாரி வரலாற்றாசிரியர்களின் ஆதிக்கத்திலேயே இருந்தது. அவர்கள் ஆய்வு, சுற்றுப்பயணம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றுக்கான நிதியைத் தங்களுக்கும் தங்களைச் சேர்ந்தவர்களுக்குமே அதிகம் ஒதுக்கிக்கொண்டனர்.

1980-களில்தான் ஐ.சி.எச்.ஆர். மீதான இடதுசாரிகளின் பிடி சற்றே தளர்ந்தது. ஆனால், 1991-ல் அர்ஜுன் சிங் மத்திய மனிதவளத் துறை அமைச்சரானதும் மீண்டும் செல்வாக்கு ஏற்பட்டது. ராமஜன்மபூமி இயக்கத்துக்கு மாற்றாக மதச்சார்பற்ற, அறிவியல்பூர்வமான வரலாற்று இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்று அவரிடம் கூறப்பட்டது. இதை அவர் செயல்படுத்த முற்பட்டார். அவருடைய அழைப்பை ஏற்று மார்க்ஸிய வரலாற்றாசிரியர்கள் அவரை அணுகினர், புதிய ஆய்வுத் திட்டங்களைப் பெற்றனர்.

1998-ல் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தது. புதிய கல்வியமைச்சரான முரளி மனோகர் ஜோஷி, வலதுசாரி சிந்தனை உடையவர். சுதந்திரப் போராட்டத்தில் பொதுவுடமைவாதிகளின் பங்களிப்பைக் குறைத்துக்காட்டி வரலாற்றை எழுதும் பொறுப்பை ஐ.சி.எச்.ஆர். அமைப்பிடம் ஒப்படைத்தார். அத்துடன், காணாமல் போன சரஸ்வதி ஆற்றைத் தேடிக் கண்டு பிடிக்கும் பணியும் தரப்பட்டது.

ஒய். சுதர்சன் ராவ்

நூருல் ஹாசனைப் பின்பற்றி, மார்க்ஸிய வரலாற்றா சிரியர்களை ஊக்குவித்தவர் அர்ஜுன் சிங். இப்போது மோடி தலைமையிலான புதிய அரசில் மனிதவளத் துறை அமைச்சராக இருப்பவரோ முரளி மனோகர் ஜோஷியின் அடியொற்றி, இந்துத்துவா சித்தாந்தத்தைக் கொண்டவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். ஐ.சி.எச்.ஆர். தலைவராகப் பேராசிரியர் ஒய். சுதர்சன் ராவ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரைப் பற்றி நான் மட்டுமல்ல, பெரும்பாலான வரலாற்றுப் பேராசிரியர்களும் கேள்விப்பட்டதேயில்லை. ஆந்திரத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்த மாநிலத்தைச் சேர்ந்த சில பேராசிரியர் களிடம் அவரைப் பற்றி விசாரித்தேன். அவர் ஏதும் பெரிய ஆராய்ச்சியில் ஈடுபட்டதாகவோ, அற்புதமான புத்தகம் எழுதியதாகவோ தெரியவில்லை. “ரொம்பவும் அடக்கமானவர், அவ்வளவாக அறியப்படாதவர்,

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு மிக நெருக்கமானவர், மிகப் பெரிய கல்வியாளரோ சிந்தனாவாதியோ அல்ல” என்றனர்.

தனிப்பட்ட முறையில் எப்படி இருந்தாலும், பேராசிரியர் என்ற வகையில் பெரிய புத்தகம் எதையும் எழுதியதில்லை. வரலாற்று ஆய்வுக்கான இதழ்கள் எதிலும் கட்டுரைகள்கூட எழுதியதாகத் தெரியவில்லை. சாதி அமைப்பில் நன்மைகள் இருப்பதாக நம்புகிறவர், ராமாயணம், மகாபாரதமே வரலாறு என்ற சிந்தனை கொண்டவர். ஒருவேளை இந்தத் தகுதிகளுக்காக அவருக்கு இந்தத் தலைமைப் பதவி தரப்பட்டிருக்கலாம்.

தரமான வலதுசாரி வரலாற்றாய்வாளர் எங்கே?

மார்க்ஸியவாதிகளும் ஐ.சி.எச்.ஆரைத் தங்களுடைய சித்தாந்தத்துக்கு ஏற்ப ஒருதலைப்பட்சமாக ஒருகாலத்தில் வழிநடத்தியுள்ளனர். ஆனால், படிப்பிலும் ஆய்விலும் மிகுந்த திறமைசாலிகள். மார்க்ஸிய வரலாற்றாய்வானது உலகாயத விளக்கங்களோடு பொருந்திவருவது. அதே சமயம், கலாச்சாரம், கலாச்சாரச் சிந்தனைகள், இயற்கை, இயற்கையோடு இசைந்த வழிமுறைகள், அதிகாரம், அரசமைப்பு முறை ஆகியவை தொடர்பான விளக்கங்களைத் தருவதில் தீர்மானமில்லாதது.

நுண்ணிய அறிவார்ந்த கலாச்சாரம் என்றால், அங்கே வலதுசாரி சிந்தனையுள்ள கல்வியாளர்களுக்கும் இடமிருக்க வேண்டும். அமெரிக்காவில் நியால் பெர்குசன் போன்ற பழமைவாத வரலாற்றாசிரியர்கள் நம்பிக் கைக்குரியவர்கள், உலக அளவில் அறியப்பட்டவர்கள் என்பதை இங்கே நினைவுகூர வேண்டும். குடும்பமும் சமூகமும் எப்படி நிலைப்படுத்தும் ஆற்றலைப் பெற்றவை என்று அவர் ஆய்வு செய்துள்ளார்.

நியால் பெர்குசனுக்கு இணையான வலதுசாரி சிந்தனையாளர் ஏன் இந்தியாவில் இல்லை? காரணம், வலதுசாரிகள் இங்கே இந்துத்துவாவுடன் அடையாளப்படுத்தப்படுகின்றனர். புனைகதைகளையும் நம்பிக்கைகளையும் மட்டுமே நம்பி, கருத்துகளை வளர்க்க முற்படுகின்றனரே தவிர, ஆய்வையும் பகுப்பாய்வையும் கைக்கொள்வதே இல்லை. ராமர் என்பவர் யார் என்ற பார்வையில் தொடங்கி இந்துக்கள்தான் இந்தியாவில் ஆரம்பம் முதற்கொண்டு வாழும் மூல இனத்தவர், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் வெளிநாட்டவர்கள், பிரிட்டிஷ்காரர்கள் இந்த நாட்டுக்குச் செய்ததெல்லாம் தீமைகளே என்று கருதுபவரும் வாதிடுபவரும் உண்மை யான வரலாற்றாய்வாளராக இருக்க முடியாது.

இடதுக்கும் வலதுக்கும் அப்பால்…

இந்தியாவில் உண்மையிலேயே தலைசிறந்த வரலாற்றாசிரியர்கள் இப்போதும் வாழ்கின்றனர். சாதாரண வாசகர்களுக்கும் பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கும் அவர்களை அடையாளம் காட்ட முடியும். பண்டைய இந்தியா குறித்து உபீந்தர் சிங், கட்டிடக் கலை வரலாறுகுறித்து நயன்ஜோத் லகிரி, ஐரோப்பிய விரிவாக்கம் தொடர்பான தொடக்க வரலாறுகுறித்து சஞ்சய் சுப்ரமணியம், முகலாயர் ஆட்சியின் வீழ்ச்சிகுறித்து சேடன் சிங், மருத்துவத்தின் சமூக வரலாறுகுறித்து சீமா அலாவி, காலனியாதிக்கத்தின் பொருளாதார விளைவு கள்குறித்து தீர்த்தங்கர் ராய், வனங்கள் - வன உயிரிகள் வரலாறுகுறித்து மகேஷ் ரங்கராஜன், தென்னிந்தியக் கலாச்சார வரலாறுகுறித்து ஆ.இரா. வேங்கடாசலபதி போன்றோர் எழுதிய நூல்களைப் படியுங்கள்.

மேலே கூறிய வரலாற்றாசிரியர்கள் அனைவரும் கார்ல் மார்க்ஸின் நூல்களைப் படித்துத் தேறியவர்கள். அதே சமயம், அவருடைய சித்தாந்தத்தாலோ அணுகு

முறையாலோ கவரப்பட்டு, தங்களுடைய சொந்த சிந்தனைகளையும் அணுகுமுறைகளையும் கைவிட்டவர் கள் அல்லர். மனித வாழ்வையும் சமூகத்தின் போக்கையும் வரலாறாகப் படிப்பதற்கான புத்தகங்களை எழுதியிருக்கின்றனர். மானுடவியல், அரசியல் கொள்கை, மொழியியல் ஆகிய கூறுகளைத் தங்களுடைய நூல்களில் அற்புதமாகக் கையாண்டிருக்கின்றனர். தங்களுடைய சொந்த சித்தாந்தங்களையும் அரசியல் ஈடுபாடுகளையும் தூர ஒதுக்கிவைத்துவிட்டு, ஆய்வு செய்து நூல் எழுதியவர்கள்.

ஐ.சி.எச்.ஆர். தொடங்கி 40 ஆண்டுகளாக வரலாற்றை ஆயும் பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தத் துறைக்குத் தலைமை தாங்க, தொழில்முறையான வரலாற்றாசிரியரை, சித்தாந்தத் தளைகள் ஏதுமற்றவரை நியமிக்க விரும்பினால், அதற்கும் தகுதியுள்ள பேராசிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர். திறமையான, மரியாதைக்குரிய வரலாற்றாசிரியர் தேவையில்லை, தங்களுடைய சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட, சொன்ன படி கேட்கும் பேராசிரியர் இருந்தால் போதும் என்று நினைத்திருக்கிறார் கல்வியமைச்சர்; அவருடைய நினைப் புக்கு ஏற்ப ஒருவர் கிடைத்திருக்கிறார்.

- ராமச்சந்திர குஹா, ‘இந்தியா ஆஃப்டர் காந்தி' உள்ளிட்ட வரலாற்று நூல்களின் ஆசிரியர்

தமிழில்: சாரி

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x