Published : 08 Apr 2018 09:28 AM
Last Updated : 08 Apr 2018 09:28 AM

இணையம் எனும் அதிகாரம் மக்களின் கையில்தான் இருக்க வேண்டும்!

ல்லாவற்றுக்கும் காரணம் அவர்கள் அணியும் டீ-ஷர்ட்டுகள்தான். தொழில்நுட்பத் துறையில் சாதித்த இளம் சாதனையாளர்கள் பலரும் சகஜமான இந்த உடையை அணிந்துகொண்டுதான் நம்மை வசீகரித்திருக்கிறார்கள்; அதன் மூலம் ஒருவிதப் போலி நம்பகத்தன்மையை/நெருக்கத்தை நமக்குத் தந்திருக்கிறார்கள். மார்க் ஜக்கர்பெர்க் (ஃபேஸ்புக்), ஸ்டீவ் ஜாப்ஸ் (ஆப்பிள்), செர்கெய் பிரின், லாரி பேஜ் (கூகுள் நிறுவனர்கள்) போன்றவர்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

இணையம் ஒரு மழலைபோல தவழ ஆரம்பித்த காலத்தில் அதை சமத்துவத்தின், சுதந்திரத்தின் ரட்சகராக எல்லோரும் கொண்டாடினார்கள். “எல்லாரையும்போல தகவல் பகிர்தலும், தகவலைப் பெறுதலும் எல்லோருக்கும் உரிய உரிமையாக விடுதலை பெற விரும்புகிறது” என்பது புதுயுகத்தின் முழக்கம்; எதை, எப்படி மக்களுக்குத் தருவது என்ற தணிக்கையிலிருந்து விடுதலை, செய்திகளைப் பெறுவதற்கு அளிக்கும் கட்டணத்திலிருந்து விடுதலை சாத்தியம் ஆகிவிட்டதாக ஆரம்பத்தில் தோன்றியது. புதிய தொழில்நுட்பப் பொன்னுலகம் நம் கைகளில் எட்டிவிட்டதுபோல் தோன்றியது. ஜக்கர்பெர்க்கும்கூட தனது நிறுவனத்தின் நோக்கத்தைப் பற்றிச் சொல்லும்போது, “இந்த உலகை மேலும் வெளிப்படையாக ஆக்குவதற்கும் ஒருவரையொருவர் எளிதில் தொடர்புகொள்வதற்குமான அதிகாரத்தை ஃபேஸ்புக் மக்களுக்கு அளிக்கிறது” என்றார்.

அதிகாரம் மிக்கவர்களை ஒடுக்கி, பலவீனமானவர்களாக இருக்கும் சாதாரண மக்களை வலுப்படுத்தும் சக்திகளாக இணையமும், குறிப்பாக சமூக ஊடகங்களும் கொஞ்சநாளுக்கு முன்புவரை பார்க்கப்பட்டன. கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனத்துக்கு 50 கோடி பயனர்களின் தகவல்களை ஃபேஸ்புக் ஒப்படைத்ததை கேரல் காட்வாலட்ர் என்ற பெண் பத்திரிகையாளர் அம்பலப்படுத்திய பிறகுதான், ஃபேஸ்புக்கின் நோக்கமாக ஜக்கர்பர்க் கூறிய வார்த்தைகள் நமக்குக் கசக்க ஆரம்பித்திருக்கின்றன.

டேவிட் பேட்ரிக்கரகோஸ் ‘140 எழுத்துக்களில் போர் குறித்த சித்தரிப்பு...’ என்ற புத்தகம் எழுதி இருக்கிறார். ‘ஹோமோ டிஜிட்டலிஸ்’ என்று ஒரு தனி இனமே உருவாகி, எழுச்சி கொண்டிருப்பதாக அதில் அதிசயித்துப்போயிருக்கிறார். ‘ஹோமோ டிஜிட்டலிஸ்’ என்பது தனிநபரைக் குறிக்கும் புதுச்சொல்; ஸ்மார்ட் போன்தான் அவர்களின் ஆயுதம். பாலஸ்தீனத்தின் காசாவைச் சேர்ந்த 16 வயது இளம் பெண் ஃபாரா பேக்கரை இந்தப் புத்தகத்தில் உதாரணமாகக் காட்டுகிறார் டேவிட். 2014-ல் காசாமீது தினமும் குண்டுவீசப்பட்டதை நேரடிக் களச்செய்திகளாக தினமும் தனது ட்விட்டரில் வெளியிட்டு, சர்வதேசக் கவனத்தை ஈர்த்தார் ஃபாரா. அவரைப் ‘பின்தொடர்பவர்’களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்தது. இதன் மூலம் சர்வவல்லமை மிக்க இஸ்ரேல் கண்ணிலேயே ஃபாரா எப்படி விரலை விட்டு ஆட்டினார் என்பதைப் பற்றி டேவிட் எழுதியிருக்கிறார். இதேபோல், எகிப்தின் இளைஞர்கள் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தி முபாரக்கின் அரசையே அகற்றினார்கள். இப்படிப் பல உதாரணங்கள்!

சமூக ஊடகங்களின் வரவால் இணையத்தின் அதிகாரம் பரவலாக்கப்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் தகவல் என்பது மேலிருந்து வழங்கப்பட்டுக் கீழே மக்களை நோக்கி வரும்; அதாவது, தகவல் என்பது அரசாங்கம் வழங்குவதாகவோ செய்தி நிறுவனங்கள் வழங்குவதாகவோ இருக்கும். இப்போதோ, மக்கள் கூட்டமே தங்களுக்குள்ளேயே செய்திகளைப் பரிமாறிக்கொள்ள முடிகிறது. ‘தொழில்நுட்பப் பொன்னுலம்’ என்ற நம்பிக்கை அதன்மூலம்தான் உருவானது.

அந்த நம்பிக்கையைத்தான் தற்போது கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா சுக்குநூறாக ஆக்கியிருக்கிறது. சமூகத்தில் அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் அதிகாரத்தை மறுபடியும் மையத்தில் குவிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றுதான் இதைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. சமூக ஊடகங்கள் தனிநபர்களுக்கு அதிகாரம் அளிப்பதை அவர்கள் பார்த்தார்கள்; ஆகவே, அந்த ஆயுதங்களைத் திருடி தங்கள் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் வேலையில் இறங்கிவிட்டார்கள். “டிஜிட்டல்ரீதியாகச் சொல்வதென்றால் 21-ம் நூற்றாண்டு என்பது சுதந்திரச் சிந்தனை உள்ளவர்களுக்குக் கேடானது” என்கிறார் டேவிட் பேட்ரிக்கரகோஸ்.

இணையத்தில் நாம் விட்டுச்செல்லும் கால்தடங்கள் ஏராளமான விஷயங்களைச் சொல்லக்கூடியவை. ஃபேஸ்புக்கில் நீங்கள் போடும் ‘லைக்’குகளைப் பார்த்தே உங்களைப் பற்றித் துல்லியமாக மதிப்பிட முடியும். உங்களின் 10 ‘லைக்’குகளைப் பார்த்தால் போதும், உங்கள் சக ஊழியர்களுக்கு உங்களைப் பற்றி என்ன தெரியுமோ... அதைவிட அதிகமாக உங்களைப் பற்றி ஒரு கணினி அறிந்துகொண்டுவிடும். உங்கள் பெற்றோர் உங்களைப் பற்றி அறிந்துவைத்திருப்பதைவிட அதிகமாக ஒரு கணினி உங்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கு உங்களின் 150 ‘லைக்’குகள் போதும், இதுவே 300 லைக் என்றால் உங்கள் மனைவியைவிட அதிகமாக உங்களைப் பற்றி யாரோ, எங்கேயோ உட்கார்ந்து தெரிந்துகொண்டுவிட முடியும். கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்காவுக்கு ட்ரம்ப்பும், அவரைப் போல பலரும் பெருந்தொகையை ஏன் கொடுத்தார்கள், கொடுக்கிறார்கள் என்பது இப்போது புரிகிறதா?

‘ஈரானின் வலைப் பிதாமகன்’ என்று அழைக்கப்படுபவர் ஹொஸைன் தரக்‌ஷான்... அவரை சமீபத்தில் சந்தித்தேன். அவரது இணையச் செயல்பாடுகளால் ஆறு ஆண்டுகள் சிறையில் இருந்தார். “ஒருவரது செயல்பாடுகளையும் எதிர்வினைகளையும் பற்றி உங்களால் கணிக்க முடியும் என்றால் அவர்களை எளிதில் நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும்” என்று விளக்கமாகச் சொன்னார் அவர்.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா/ஃபேஸ்புக் செயல்பாடுகள் இன்னும் எதையெல்லாம் உணர்த்துகின்றன? இணையம் வருவதற்கு முன்பு செய்தி வழங்கும் முறை மேலிருந்து கீழாக என்று மட்டும் இருந்தது அல்லவா? அந்த நிலையை நோக்கி மறுபடியும் அழைத்துச்செல்லும் முயற்சி இது. இனி நடக்கப் போவதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால்... தகவலானது மேலிருந்து வழங்கப்பட்டாலும்... அது கீழிருந்து, அதாவது மக்களிடமிருந்தே உருவானதுபோல் ஒரு பிரமை இருக்கும். ஒரு தகவல், ஒரு கருத்து, ஒரு கோஷம் மக்களிடையே பரப்பப்பட்டு... அது மக்களின் குரல் என்றே தவறாகக் கருதப்பட்டு... காட்டுத்தீயாகப் பரவும். மேலிருந்து இந்தத் தகவலை உள்நோக்கத்துடன் பரப்பியவரின் தடமே எங்கும் இருக்காது.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்காவின் செயல் அதிகாரி ஒருவர் இப்படிக் கூறினார்: “இணையத்தின் ரத்த ஓட்டத்தில் நாங்கள் தகவலை சர்வசாதாரணமாகக் கலந்துவிடுவோம், அதற்குப் பிறகு அது பூதாகரமாக உருவெடுப்பதைப் பார்த்துக்கொண்டே இருப்போம்... அந்தத் தகவல் எங்கிருந்து புறப்பட்டது, யார் காரணம் என்பதையெல்லாம் கண்டுபிடிக்கவே முடியாது.”

இந்த விஷயம் ஒரு அதிபரின் வெற்றியோடு, அரசியல் லாபத்தோடு முடிந்துவிடாது; இணையத்தில் நாம் வெளிப்படுத்தும் நம்பிக்கைகள், அச்சங்கள் போன்ற உணர்வுகளைப் பல்வேறு பெருநிறுவனங்களும் தங்களுடைய பொருட்களை நம்மிடம் விற்பதற்காகப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன. இதையும் கூடிய சீக்கிரம் நாம் தெரிந்துகொள்ளப்போகிறோம்.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக வருவதற்கு முன்பு, நாம் செயலில் இறங்க வேண்டும். அரசு சிலக் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்; இணைய உலகில் ஏகாதிபத்தியம் செலுத்தும் தொழில்நுட்ப அரக்கர்களை முடக்குவதற்கு ‘நம்பிக்கை இழப்பு’ சட்டம் கொண்டுவரலாம். நான் சந்தித்த ஹொஸைன் தரக்‌ஷான் ஒரு யோசனையைச் சொல்கிறார்.

பல்வேறு வகையான அல்காரிதங்கள் கிடைக்கக் கூடிய ஒரு இணையச் சந்தையைத் திறக்க வேண்டும் என்று ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கு நாம் நெருக்கடி கொடுத்து இணங்கச்செய்யலாம். அதாவது, ஒரு சமூக ஊடகத்தில் ‘பிரபலம்’ (ரீட்வீட்ஸ் போன்ற அடிப்படையில்), புதியது (லேட்டஸ்ட்) போன்ற தெரிவுகளை நாம் விரும்பவில்லையென்றால், வேறு வகையான மதிப்பீடுகளைக் கொண்டு இயங்கும் விதமான அல்காரிதத்தை நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் நிலை வர வேண்டும்.

நடப்பவற்றைப் பார்த்துவிட்டு முழுவதுமாக நம்பிக்கை இழந்துபோகவும் தேவையில்லை. ஏராளமான வெற்றிக் கதைகளும் இணைய உலகில் நிறையவே இருக்கின்றன. கூட்டுப் பங்களிப்பாக நடத்தப்படும் விக்கிப்பீடியா இதற்குச் சிறந்த உதாரணம். அவற்றின் முதலாளிகள் தங்கள் அலுவலகத்துக்கு ‘ஸ்கேட்டிங்’ பலகையில் வந்து நம்மைக் கவர்ந்தாலும் சரி... ‘உங்களில் ஒருவன்’ என்று ஏமாற்றும் டீ-ஷர்ட்டை அணிந்திருந்தாலும் சரி! நாம் புரிந்துகொள்ள வேண்டியதெல்லாம் ஒன்றுதான்...

தொழில்நுட்ப நிறுவனங்கள் யாவும் பேராசை பிடித்தவை, அவற்றை நாம் கவனத்தோடு இருந்து அடக்கியே ஆக வேண்டும்.

© தி கார்டியன்,

சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x