Last Updated : 26 Feb, 2024 06:16 AM

 

Published : 26 Feb 2024 06:16 AM
Last Updated : 26 Feb 2024 06:16 AM

புரியாத மொழியில் கற்றுக்கொள்வது எப்படி?

உங்களுக்குப் புரியவில்லை என்றால்,“நீங்கள் எப்படிக் கற்றுக்கொள்வீர்கள்?” என்கிற கொள்கை அறிக்கையை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) சமீபத்தில் வெளியிட்டுள்ளது. கல்வி தாய்மொழியிலேயே வழங்கப்பட வேண்டும்.

சிந்திப்பது, புரிந்துகொள்வது, கற்ற விஷயங்களை விளக்குவது ஆகியவைதாய்மொழியிலே நிகழும்போதுதான் திறம்படவும், வெற்றிகரமாகவும் அமைகின்றன என்று அறிவியல் பூர்வமாகப் பல்வேறு நாடுகளில் நிகழ்த்தப்பட்ட கள ஆய்வுகள் மெய்ப்பித்து வருகின்றன.

மொழிப் போர்கள்: கிழக்கு பாகிஸ்தானில் வங்க மொழியே தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்கிற நோக்கில் 1952 பிப்ரவரி 21 அன்று, ‘வங்க மொழி இயக்கம்’ உருவாகிப் பெரும் போராட்டம் நடைபெற்று, நான்கு பேர் உயிரிழந்தனர். இதன் தாக்கமாக 1999 பிப்ரவரி 21 அன்று ‘உலகத் தாய்மொழி நாளாக’ அறிவிக்கப்பட்டு, ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 1938, 1965ஆம் ஆண்டுகளில் இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான போராட்டங்களும் பெரும் கிளர்ச்சியும் நடைபெற்று நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் உயிர்த் தியாகங்களும், 1939இல் நடராசன், தாளமுத்து இருவரின் உயிர்ப் பலியும் ஏற்பட்டது. அது உலகத்தின் கவனத்தை ஏனோ எட்டவில்லை. தமிழ்நாட்டில் ஜனவரி 25 ‘மொழிப்போர் தியாகிகள்’ நாள் கடைப்பிடிக்கப்பட்டு, மொழி உணர்வும், தாய்மொழிவழிக் கல்வியின் அவசியமும் வலியுறுத்தப்பட்டுவருகின்றன.

2024-க்கான உலகத் தாய்மொழி நாளின் கருப்பொருளாக ‘பன்மொழிக் கல்வி என்பது தலைமுறைகளுக்கு இடையேயான கற்றலின் ஒரு தூணாகும்’ என்பதனை யுனெஸ்கோ அறிவித்து, உலகளாவிய நிலையில், அது தொடர்பான சிந்தனையை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது.

‘யுனெஸ்கோ’வின் உலகளாவிய கல்விக் கண்காணிப்பு ஆய்வு அறிக்கையின்படி, உலக மக்கள்தொகையில் 40% பேருக்கு அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால், பள்ளிக்குச் செல்ல வேண்டிய 25 கோடிக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கின்றனர். வயது வந்தவர்களில் (Adult) 76 கோடிப் பேர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக உள்ளனர். இதனால்சமூக, பொருளாதார வளர்ச்சி அதிகம் பாதிக்கப்படுவதுடன் வறுமையும் அதிகரிக்கிறது!

தாய்மொழிக் கல்வியின் அவசியம்: மொழி என்பது தொடர்புகொள்வதற்கான கருவி மட்டுமல்ல, அது நீண்ட நெடிய பண்பாடு, பழக்கவழக்கங்கள், பாரம்பரியம்,மரபுவழியாகப் பெற்ற அறிவு வளங்கள் எனப் பல்வேறு நுட்பமான கூறுகளை உள்ளடக்கியது. தாய்மொழி வழி கற்கின்றபோதுதான் ஒருவர் நிலையான, உறுதியான, நீடித்த அடித்தளத்தைப் பெற முடியும். உலகளாவிய நிலையில் புகழ்பெற்ற ஓவியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களைப் பள்ளிச்சூழல் வெளியே துரத்தி அனுப்பியதற்குக் காரணமே மொழிதான். புழுக்கமும் இறுக்கமும் கொண்ட புரியாத மொழிகளால் வேறு என்ன செய்ய முடியும்?

அறிவு வேறு; தகவல் வேறு. தகவல் பெறுவது கல்வியல்ல. அறிவு பெறுவதன் கருவியாகத் தாய்மொழிக்கல்வி திகழ்கிறது. பன்முகப் பார்வை, தலைமுறைகளுக்கு இடையேயான மரபு வாழ்க்கை நெறிகள், கலாச்சாரச் சிந்தனை இவற்றின் தொடர்ச்சியாகத் தற்கால நவீன நுட்பங்களை இணைத்து முழுமையான தெளிவை, பார்வையைப் பெற தாய்மொழிக் கல்வியே நமக்குத் தூணாக, துணையாக நிற்கிறது. அதுமட்டுமல்ல கற்றுக்கொடுப்பவருடன் மனம் ஒன்றி இணைப்பதற்குத் தாய்மொழிக் கல்விதான் சிறந்தது.

கல்வியில் கீழ் நிலையிலிருந்து, முற்றிலும் தாய்மொழிக்கு மாறிய பின்பு சில நாடுகள் கல்வியில் வியக்கத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளன. நேபாளத்தில் 123க்கும் மேற்பட்ட மொழிகள் இருப்பினும் கல்வி நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் முதன்மை மொழி நேபாளி. 2015இல் புதிய நேபாளஅரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு நேபாள சமூகத்துக்கும்தாய்மொழிக் கல்விக்கான உரிமையை வழங்கிய பின்னர், அங்கு வளர்ச்சியைக் காண முடிகிறது.

முன்னோடி நாடுகள்: 2010ஆம் ஆண்டு பொலிவியா தேசியக் கல்விச் சட்டத்தை நிறைவேற்றியது. இதன்படி ஒவ்வொரு குழந்தையும் ஸ்பானிய மொழி தவிர, ஒரு பழங்குடி மொழியையும் பண்பாட்டையும் கற்றுக்கொள்ள வேண்டும். அங்கு கல்வியின் முன்னேற்றத்துக்கு அடித்தளமாக இது அமைந்ததுடன் கற்போரிடம் ஊக்க உணர்வையும் ஏற்படுத்தியது.

இதே போன்று ஆப்ரிக்கக் கண்டத்தின்தென் பகுதியில் உள்ள ஜிம்பாப்வே நாட்டில் பழங்குடி மொழியிலேயே கல்வி கற்க வகை செய்யப்பட்டுள்ளது. மடகாஸ்கரில் ஒரு சிறு பகுதியில் மட்டும் பேசப்படும் சிறுபான்மை மொழியில் பள்ளி நிலையில், 54 அறிவுத் துறைகளில் பாடப்புத்தகங்களை உருவாக்கி வழங்கியுள்ளனர்.

ஆப்ரிக்காவின் நடுப்பகுதியில் உள்ள குடியரசு நாடான ருவாண்டாவின் புரேரா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் பள்ளி மாணாக்கர்கள் வாசித்தல், எழுதுதல் ஆகியவற்றில் பின்தங்க, இடைநிற்றல் அதிகரித்துக்கொண்டே சென்றபோது, அவர்களின் தாய்மொழியான கின்யர் வாண்டாவில் கல்வி வழங்கியது அரசு. இதன் பலனாக, பள்ளியில் இடைநிற்றல் முற்றிலும் குறைந்துவிட்டது. இதேபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு பின்லாந்து, கென்யா போன்ற நாடுகள் கல்வியில் புதிய பாய்ச்சலைக் கண்டுள்ளன.

தாய்மொழியில் கல்வி வழங்குகின்றபோதுதான் வாசிப்புத் திறனையும் புரிந்துகொள்ளும் ஆற்றலையும் பெற முடியும். இவ்விரு திறன்களுடன் மாணாக்கர்கள் வெளிவரும் நிலை ஏற்பட்டால், வளரும் நாடுகளில் 17.1 கோடி மக்களை வறுமையில் இருந்து காப்பாற்ற முடியும் என்கிறார் கல்வியாளர் ரேச்சர் கூப்பர்.

இன்று உலகம் முழுவதும் ஏழாயிரம் மொழிகள் பேசப்படுகின்றன என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. இது சிறுபான்மை மொழிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டதா எனத் தெரியவில்லை. இந்தியாவில் உள்துறை அமைச்சகம் 2011இல் மொழிக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி, 2018இல் அதை வெளியிட்டது.

இதன்படி இந்தியாவில் 19,500 மொழிகள் தாய்மொழியாகப் பேசப்படுகின்றன. இவை 121 மொழிக் குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. பன்முகப் பண்பாட்டுத்தன்மை கொண்ட இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியையும் அதன் அழிவில் இருந்து காத்து உயிர்ப்புடன் வைத்திருக்க நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே, இந்தியாவின் மரபையும் பண்பாட்டுச் செழுமையையும் தக்கவைக்க முடியும்.

மனம் வைக்க வேண்டும்: பள்ளிக் கல்வியில் இருந்து உயர் கல்வி வரை குறிப்பாகக் கலை-அறிவியல், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், சட்டம், வேளாண்மை, மேலாண்மை உள்ளிட்ட அனைத்துப் புலங்களிலும் தாய்மொழியிலே கற்றுக்கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும்.

இதற்குப் பெரும் சவாலாகவும் தடையாகவும் இருப்பது ஆசிரியர்களின் மனத்தடையும் மக்களின் மனப்பாங்கும்தான் என்றாலும், நிகழும் மொழியரசியல், அரசுகளின் ஒத்துழைப்பு மாற்றத்துக்கான எதிர்வினை, தற்போது உள்ள கல்வித்திட்டக் கட்டமைப்புகளைச் சீரமைத்துப் புதிய அலகுகளை உருவாக்குவதில் உள்ள சுமை, குறிப்பாகத் தரப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் வகுப்பது, தாய்மொழிகளில் பாடநூல்களைத் தயாரிப்பது, ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது என்கிற பல்வேறு படிநிலைகளைச் செயல்படுத்துவதில் உள்ள மலைப்பே காரணம்.

ஆனால், முறையாகத் திட்டமிட்டு, ஈடுபாட்டுடன் செயல்படுத்தத் தொடங்கினால் இதை நாம் சாதிக்க முடியும். இதற்கு இன்றைய நவீனத் தொழில்நுட்பம், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, மொழிபெயர்ப்புக் கருவிகள்,மொழி தொடர்பான மென்பொருள்கள் என எத்தனையோ உதவிக்கரங்கள் நம் முன்னே உள்ளன.

இந்த முயற்சியை இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் வங்க மொழியிலும் கேரளத்தில் மலையாளத்திலும் தொடங்கிவிட்டனர். தாய்மொழியில் ஆழ்ந்த அறிவு பெற்ற ஒருவரால் எத்தனை மொழிகளையும் எளிதில் கற்றுக்கொள்ள முடியும். தாய்மொழி கொண்டே நமது உலகத்தை நாம் காண முடியும்; அதற்கு மனம்தான் வேண்டும்.

- தொடர்புக்கு: drbharathibalan@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x