Last Updated : 27 Feb, 2018 09:20 AM

 

Published : 27 Feb 2018 09:20 AM
Last Updated : 27 Feb 2018 09:20 AM

தேசப் பிரிவினைக்கு காங்கிரஸ்தான் காரணமா?

வ்வொரு ஆண்டும் குடியரசுத் தலைவர் உரைக்குப் பிறகு, நாடாளுமன்றத்தில் பிரதமர் அளிக்கும் உரையைக் கேட்க நாடு காத்திருக்கிறது. இந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி அரசின் கொள்கைகளால் ஏற்படக்கூடிய நிதி விளைவுகளைப் பற்றிக் குறைவாகவே பேசினார். 1947 முதல் நாட்டுக்கு ஏற்பட்ட தீமைகளுக்கெல்லாம் காங்கிரஸ்தான் காரணம் என்று குறைசொல்வதில்தான் தனது உரையில் அவர் அதிகமாகக் கவனம் செலுத்தினார். நாட்டு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய கடமையிலிருந்து இவ்விதம் நழுவிவிட்டார் பிரதமர்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கும், ஜம்மு-காஷ்மீர் பிளவுக்கும் காங்கிரஸ்தான் காரணம் என்று அவர் குற்றம்சாட்டியது நிதானமில்லாதது. வரலாறு என்று கருதிப் பேசப்படும் சில தகவல்கள், உண்மைக் குப் புறம்பாக இருக்கும். ஏன், சில மாற்று உண்மைகள்கூடத் திரித்துக் கூறப்படும். தேசப் பிரிவினை தொடர்பாக மோடி கூறியவை உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய நிலப்பரப்பும், அதிக மக்கள்தொகையும் பிரிக்கப்பட்ட பெருந்துயரத்தைப் பற்றியதாகும். அதற்கு காங்கிரஸ் மட்டுமல்ல பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சர்தார் படேல் பிரதமராகியிருந்தால் காஷ்மீர் பிளவுபட்டிருக்காது என்பது, நடக்காத ஒன்றைக் கற்பித்துப் பேசுவதாகும்.

ஆட்சியாளர்களின் சூழ்ச்சி

உலக வரலாற்றிலேயே லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்த இந்திய-பாகிஸ்தான் பிரிவினை, இரு தரப்பிலும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களைப் பலி வாங்கியது. பிரிவினைக்குக் காரணகர்த்தாக்கள் யார் அல்லது பிரிவினைக்கான சம்பவங்கள் எவை, யார் தீவிரமாகச் செயல்பட்டனர், யார் ஆதரித்தனர், யார் எதிர்த்தனர், அவர்களுடைய நோக்கம் என்ன என்பதெல்லாம் இன்றுவரை விவாதிக்கப்படுகின்றன. 1940-களின் மத்தி யப் பகுதி வரை பிரிவினை என்பது சுதந்திரத்துக்கான தீர்வுகளில் ஒன்றாகத்தான் இருந்தது. இந்தியாவில் முஸ்லிம்கள் வெவ்வேறு பிரதேசங்களில் பிரிந்து கிடப்பதால், முகம்மது அலி ஜின்னாவும் முதலில் கூட்டாட்சியைத்தான் விரும்பினார். நேருவோ, மையப்படுத்தப்பட்ட ஐக்கிய அரசை விரும்பினார். இந்தக் கருத்து வேறுபாடுகள் எப்படி மிகப் பெரிய ரத்தக் களரியை ஏற்படுத்தும் பிரிவினையாக உருவெடுத்தன? இதை வரலாற்று ஆய்வாளர்கள் வெவ்வேறு தரவுகளைக் கொண்டு ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள்.

19-வது நூற்றாண்டில் ஏற்பட்ட திருப்பங்கள்தான் பிரிவினைக்குக் காரணம் என்று பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இந்தியர்களை அறிவார்த்த மாக அடிமைப்படுத்த பிரிட்டிஷ் அரசு பல ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அதனால் நெகிழ்வான, பன்மைத்தன்மையுள்ள, மையப்படாத இந்து மதத்தை கிறித்தவ, இஸ்லாமிய மதங்களைப் போல மையப் படுத்தப்பட்ட ஒன்றாக ஆக்க முனைந்தார்கள். பிறகு, இந்து மதத்திலும் இஸ்லாத்திலும் சில தலைவர்கள் தலையெடுத்து, ‘மத அடிப்படையில் நாம் நமக்குள் ஒரே அலகாக இருக்க வேண்டும்’ என்று மத அடையாளத்தைப் புகுத்தினர். இவையே போட்டி வகுப்புவாத அமைப்புகளாக உருவெடுக்கத் தொடங்கின. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சூழ்ச்சித் திறத்தால் இரு தரப்பாரும் தனித்தனியாகத் திரண்டு, தங்களுக்குரிய பிரதிநிதித்துவத்தைக் குழுவாகக் கேட்டுப் பெற முற்பட்டனர். 20-வது நூற்றாண்டின் தொடக்கத்தில் மத அடிப்படையிலான அடையாளமே வகுப்புக் கலவரங்களுக்கு வித்திட்டது.

சுய அடையாள இழப்பு

சுதந்திரமான தேசிய அரசுகளை உருவாக்க விரும்பிய பல மேல்தட்டுத் தலைவர்கள், இந்த மத அடையாளங்களைத் தங்களுக்குச் சாதகமாகத் திருப்பினர். சுதந்திரத்துக்காக மட்டுமல்ல, தனி நாட்டுக்காகவும் மக்களைப் போராட வைத்தனர். பிரிவினை ஏன் என்ற விவாதம், பிரிவினையால் விளைந்த தீமைகளைப் பற்றி விவாதிப்பதாக மாறியிருக்கிறது. நாட்டின் பிரிவினையால் கொலைகள், பாலியல் வன்செயல்கள், புதிய இடத்துக்கு அகதியாகப் போக நேர்ந்தது, கல்வி, தொழில், உறவு என்று எல்லாவற்றிலும் இழப்புகளைச் சந்தித்து, சுய அடையாளத்தையே இழந்தது என்று லட்சக்கணக்கானவர்களுக்கு இழப்புகள் ஏற்பட்டன. புதிய நாடுகள் தங்களுக்கிடையே நில எல்லைகளை வரைந்தன, பாஸ்போர்ட்டுகளைக் கட்டாயமாக்கின, கடத்தப்பட்ட பெண்களைத் திரும்ப ஒப்படைக்க ஏற்பாடுகளைச் செய்தன, எல்லைகளைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டின.

தேசப் பிரிவினைக்கு இது மட்டும்தான் காரணம் என்று நம்மால் இப்போதும் எதையும் அடையாளப் படுத்த முடியாது. பழியைக் காங்கிரஸ் மீது தூக்கிப் போடுவது பலதரப்பட்ட, சிக்கலான, அடிக்கடி முரண்பட்ட நிகழ்வுகளையே திரித்துக் கூறுவதாகும். நாடு பிளவுபட்டதற்குத் தான் சார்ந்துள்ள அமைப்பும், அது வலியுறுத்தும் இந்துத்துவா என்ற சித்தாந்தமும் காரணம் என்பதையே புறக்கணித்துவிட்டுப் பேசியிருக்கிறார் பிரதமர்.

அமைதியின்மைக்குக் காரணம்

வரலாறு நமக்குக் கசப்பான பாடத்தைப் புகட்டியிருக்கிறது. அரசியல் இயக்கத்தால் மக்களுடைய ஆழ்ந்த உள்ளுணர்வுகளைத் தனக்கு ஆதரவாகத் திருப்ப முடிகிறது என்றால், அந்த உணர்வுகள் அச்சமூகத்தில் ஏற்கெனவே இருந்திருந்தால்தான் முடியும். மதச்சார்பற்ற காலத்தில், நவீனத்துவம் பேசும் பலருடைய மேல்தோலுக்கடியில் ஆழ்ந்த மத உணர்வுகள் இருந்தால் தான் ஆதரவு பெருகும். மக்களுடைய உளவியல் மீதும் மனங்கள் மீதும் செல்வாக்கு இல்லாமல் மக்களை ஒரு மதத்துக்கு ஆதரவாக அணிதிரள வைக்க முடியாது. இப்படி வகுப்புணர்வைத் தொடர்ந்து ஊட்டிவருவதால்தான், தேவைப்படும் வேளையில் அது கொலை வெறியாக மாற்று மதத்தவர் மீது பாய்கிறது. இதுவே அமைதியின்மைக்குக் காரணம்.

மதரீதியாக அடையாளப் படுத்தப்படுவதை மக்கள் விரும்பலாம் அல்லது விரும்பாமலும் இருக்கலாம்; பிற சமுதாய மக்களுடன் கலந்து பழகவும் உணவருந்தவும் தயங்கலாம். இதனாலேயே அவர்கள் பிற மதத்தவர் களுக்குத் தீங்கு விளைவித்துவிட மாட்டார்கள். மற்றவர்களுடைய நம்பிக்கைகளுக்கும் வழிமுறைகளுக்கும் ஏதாவது காரணம் இருக்கும். நம்முடைய நம்பிக்கைக்கும் வழிமுறைக்கும் நாம் நினைப்பதுதான் காரணம் என்றே மக்கள் அவரவர் வழியில் வாழத்தான் விரும்புகிறார்கள். பல காரணங்களுக்காக மக்கள் தங்களுக்கென்று தனி அடையாளத்தையும் பிறரிடமிருந்து விலகியிருக்கும் இடைவெளியையும் ஏற்படுத்திக்கொள்கிறார்கள். இது ஒரு சமூகச் செயல்பாடு.

இப்படியிருந்தும் தொழில்செய்யும் இடங்களில் மக்களிடையே கூட்டுறவும் ஒற்றுமையும் இயல்பாகிவிடு கிறது. இது சமூக, அரசியல் இயக்கங்களிலும் அமைப்புகளிலும் சேர்ந்து செயல்படும்போது வெளிப்படுகிறது. இந்த அடையாளங்கள் ஒரு குறியீடாக பொருளாதார ஆதாயத்துக்காகவோ, தனியுரிமைக்காக அரசியல் இயக்கமாகவோ உருவெடுக்கும்போது, இந்த அடையாளங்களே ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படு கின்றன. இது அரசியல்மயமாகும்போது அதிகாரத் தைக் கைப்பற்ற வெளிப்படையாகவும் இரக்கமில்லாமலும் கையாளப்பட்டு, மனித உயிர்களைக்கூடப் பலிவாங்கிவிடுகிறது.

அழிக்க முடியாத வடுக்கள்

பிற சமுதாயங்களுக்கு எதிராக வெறுப்புணர்வை வளர்ப்போர், சாதாரணமாக அலட்சியப்படுத்தப்படக் கூடிய சிறிய சம்பவங்களைக்கூட ஊதிப் பெரிதாக்கி மோதல்களைத் தூண்டிவிடுகின்றனர். இந்தத் தூண்டு தல் கலவரத் தீயையும் வெறுப்பையும் விசிறிவிட்டு நிரந்தர சேதத்தை ஏற்படுத்திவிடுகிறது. மத அடையாளங்கள் அரசியல்மயப்படுத்தப்படும்போது அழிக்க முடியாத வடுக்களை ஏற்படுத்திவிடுகின்றன.

மதிகெட்ட மத வன்முறை மூளும் ஒவ்வொரு நாள் காலையும், அதுநாள் வரையில் அண்டை அயலார்களாக இருந்தவர்கள் பகைவர்களாகிவிடுகிறார்கள். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் மீது செலுத்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள் ஆறாத புண்களையும் அழிக்க முடியாத வடுக்களையும் அனைவரது மனங் களிலும் ஏற்படுத்தி, நாகரிக சமுதாயத்தையே நச்சுப் படுத்துகிறது. வகுப்புவாத அமைப்புகள் மக்களிடையே நிலவும் சமூக, பொருளாதார அடையாளங்களை மறைத்து, ரத்தவெறி கொள்ளச் செய்கின்றன. ஒருமுறை தூபம்போட்டு விசிறிவிடப்படும் மதவெறி, வெகுசீக்கிரத்தில் அடங்குவதில்லை. இந்த எச்சரிக்கைகளை நாம் இன்னும் சரியாக உள்வாங்கவில்லை. உள்வாங்கியிருந்தால் தேசப் பிரிவினைக்கு முன்பிருந்த வன்முறைச் சூழல் இப்போது மீண்டிருக்காது.

- நீரா சந்தோக்,

டெல்லி பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறையின் முன்னாள் பேராசிரியர்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி,

© ‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x