Last Updated : 25 Feb, 2018 10:14 AM

 

Published : 25 Feb 2018 10:14 AM
Last Updated : 25 Feb 2018 10:14 AM

சுஜாதாவுடன் சில சந்திப்புகள்

து 1971 ஜூலை 4, ஞாயிற்றுக்கிழமை. ‘குமுதம்’, ‘தினமணி கதிர்’, ‘ஆனந்த விகடன்’ போன்ற பத்திரிகைகள் மூலமாகக் குறுகிய காலத்தில் பிரபலமடைந்த சுஜாதாவுக்குப் பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தார் சாவி. ஓவியர் ஜெயராஜுக்கும் சேர்த்துத்தான். ஏறக்குறைய கேள்வி-பதில் நிகழ்ச்சிபோலவே அது இருந்தது. ஒரு பதில் நன்றாக மனதில் பதிந்திருக்கிறது. “பத்திரிகை ஆபீசுக்குத் தினமும் பல கதைகள் வருகின்றன; உங்களுடைய கதை முதல் பக்கத்திலேயே படிக்கத் தூண்டுவதாக அமைய வேண்டும்" என்றார் சுஜாதா. விழா முடிந்ததும் சுஜாதாவைச் சூழ்ந்துகொண்டு கையெழுத்து வாங்கிய வாசகர்களுள் நானும் ஒருவன்.

1972-ல் வங்கி அதிகாரி பயிற்சிக்காக பெங்களூர் சென்றேன். பயிற்சி நேரம் கெடுபிடியான பள்ளிக்கூடம் போலத்தான். ஒரு ஞாயிற்றுக்கிழமை எப்படியோ பெல் குவார்ட்டர்ஸில் அவருடைய வீட்டைக் கண்டுபிடித்து, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். சிற்றுண்டியும் காபியும் தந்து உபசரித்துவிட்டு அன்றைய பத்திரிகைக் கதைகளையும் பழைய எழுத்தாளர்களையும் பற்றிப் பேசினார்.

1977-ல் குக்கிராமமான ராயப்பன்பட்டிக்கு வங்கி மேலாளராகச் சென்றேன். பூர்வீக ஊரான இறச்சகுளம் தவிர வேறு கிராமத்தை அறியாத, சென்னையிலேயே படித்து வளர்ந்த எனக்கு ராயப்பன்பட்டி புது அனுபவம். அப்போது 'கரையெல்லாம் செண்பகப்பூ' கதையில் வரும் டிராக்டர், வயல் வரப்பையெல்லாம் சுஜாதா வர்ணித்தபோது பிரமிப்புடன் மகிழ்ச்சியும் கூடியது. 'கனவுத் தொழிற்சாலை' கதையில் கவிஞர் அருமை ராசன் பாத்திரம், அந்த ஞானஸ்நானம், கிறிஸ்தவ உபதேசங்கள் என்று எல்லாவற்றையும் ரசிக்க முடிந்தது. ராயப்பன்பட்டியில் 95% கிறிஸ்தவர்கள்.

மீண்டும் சென்னைவாசம். சுஜாதா அப்போது மயிலையில் தன் மாமனார் இல்லத்தில் தங்கியிருந்தார். அந்தக் காலகட்டத்தில்தான் திரைத் துறையுடன் அவருக்கு நெருக்கம் தொடங்கியது. “அது ஒரு தனி உலகம், என்னுடைய கனவுத் தொழிற்சாலை அதில் ஒரு ஸ்லைஸ்தான்” என்றார். ‘கணையாழி’ ஆசிரியர் பொறுப்பிலிருந்த அசோகமித்திரனும் அவரைப் பார்க்க வந்தார். உரையாடல் எங்கெல்லாமோ தாவியது.

நான் எங்கு மாற்றலாகிச் சென்றாலும் கடிதப் போக்குவரத்து தொடர்ந்தது. 1994-ல் கோவைக்கு அவர் வந்திருந்தபோது என் மகனை அழைத்துச் சென்று மேல் படிப்புக்கு ஆலோசனை கேட்டேன். "வெறும் பி.எஸ்சி. வேஸ்ட், மேற்கொண்டு படிக்கச் சொல்லுங்கள்” என்றார். 1999 இறுதியில் ஓய்வுபெற்று சென்னை வந்தேன். கல்கி ராஜேந்திரன் 'தேவன் அறக்கட்டளை' - 'கல்கி' இணைந்து நடத்திய நகைச்சுவைப் பயிலரங்கின் ஒலிப்பேழைத் தொகுப்பை அளித்தார். சுஜாதா தலைமையில் நடந்த அதில் ரா.கி.ர, துக்ளக் சத்யா, கிரேஸி மோகன், ஜே.என். ராகவன் போன்றோர் பேசியிருக்கிறார்கள். இதை எழுத்து வடிவமாகக் கொண்டு வாருங்கள். இதிலுள்ள நகைச்சுவையை ஒப்பிட்டு, கல்கி எங்கெங்கு அந்தப் பாணியையைக் கையாண்டிருக்கிறார் என்று எழுதுங்கள் என்று பணித்தார். புத்தகத்தை 'வானதி' வெளியிடுவார்கள், கல்கி பிறந்த நாளன்று வரும் என்றார். அந்தப் புத்தகம்தான் 'கல்கி வளர்த்த சிரிப்பலைகள்’. புத்தகத்தில் சுஜாதா உரை சரியாக வந்திருக்கிறதா என்று அறிய ஒரு குறுகுறுப்பு. அவரிடம் இரண்டு நாள் கழித்துப் பேசினேன். ஒரு எழுத்துப் பிழையையும், ஓவியர் ஒருவரை எழுத்தாளர் என்று எழுதியிருப்பதையும் சுட்டிக்காட்டிவிட்டு, 'மற்றபடி ஓ.கே.’ என்றார்.

சென்னைக்கு வந்துவிட்டதால் அவரை அடிக்கடி சந்திக்கலாம் என்று நினைத்தது நடக்கவில்லை. 2005-ல் மயிலை இல்லத்தில் கடைசியாக அவரைச் சந்தித்தேன். கம்ப ராமாயணம், பாசுரங்கள் பக்கமாக பேச்சு திரும்பியது. சில அருமையான தமிழ்ச் சொற்களை இழந்துவிட்டோம். 'ஓர்’, 'செப்புவது' என்று உதாரணம் காட்டினார். அவர் முகத்தில் வேதனை தெரிந்தது. 'தேடாதே' என்ற நவீனத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.

2008 பிப்ரவரியில் மறைவுச் செய்தி கேட்டு ஏற்பட்ட அதிர்ச்சி சொல்ல முடியாது. தமிழ் உரைநடையில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தவர். அனாயாசமாகச் சில வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தியவர். 'அதிகாலைப் புயல்' (பணிப்பெண்), 'ஆணவப் பறவை' (விமானம்). சிதைந்துபோன காரை ஒரு நாவலில் வர்ணித்தபோது, உருக்கு அந்தரங்கங்கள் தெரிந்தன என எழுதினார்.

இறுதிவரை பத்திரிகை ஆசிரியர்கள் அவரை 'எடிட்டர்ஸ் டிலைட்' என்றும் வாசகர்கள் அவரை 'ரீடர்ஸ் டிலைட்' என்றும் கொண்டாடினார்கள். இரண்டுக்கும் பொருத்தமானவர் அவர்!

பிப். 27, சுஜாதா

பத்தாம் ஆண்டு நினைவு நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x