Last Updated : 27 Jul, 2014 12:00 AM

 

Published : 27 Jul 2014 12:00 AM
Last Updated : 27 Jul 2014 12:00 AM

துயரத்தின் 50 ஆண்டுகள்: மறக்கப்பட்ட மதுரை பள்ளிச் சம்பவம்

வரலாற்றை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடக் கூடாது. அப்படி மறந்தவர்களுக்கு, அதே சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்து வரலாற்றை நினைவுபடுத்திச் செல்லும். 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி கும்பகோணம் சரஸ்வதி பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 தளிர்கள் கருகிப்போயின. 1964-ல் மதுரை மணிநகரம் மேலத்தெருவில் இருந்த சரஸ்வதி (மகளிர்) நடுநிலைப்பள்ளி இடிந்து விழுந்து, 36 குழந்தைகள் பலியானார்கள். இந்தச் சம்பவத்தை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில்தான் கும்பகோணம் விபத்து நிகழ்ந்திருக்கிறது என்றுகூட சொல்லலாம்.

மதுரை ஸ்காட் ரோடு வழியாக ராஜா மில் சாலைக்குச் செல்லும் வழியில் இடதுபுறம் இருக்கிறது சரஸ்வதி பள்ளி இருந்த இடம். அந்தப் பள்ளியைத் தாங்கி நின்ற 12 அடி உயரக் கல்சுவர் இப்போதும் இருக்கிறது. காலியிடத்தின் மையத்தில் கற்கோயில் ஒன்றும் உள்ளது. இதைச் சுற்றி இருந்த பள்ளிக் கட்டிடம்தான் இடிந்து விழுந்துள்ளது. அங்கு பள்ளிக்கூடம் இருந்ததற்கான வேறு எந்த அடையாளமும் இப்போது இல்லை.

ஆனால், இறந்த குழந்தைகளின் பெயர் களைத் தாங்கிய 18 கல்லறைகள் தத்தனேரி சுடுகாட்டில் இருக்கின்றன. ஜி. சாரதா, 5-ம் வகுப்பு, ஜி. சுசீலா 5-ம் வகுப்பு, எம். கலாவதி, 5-ம் வகுப்பு, ஏ. சரோஜா, 8-ம் வகுப்பு என்று தனித்தனி கல்வெட்டுகளைத் தாங்கி நிற்கின்றன அந்தக் கல்லறைகள். அதில் ஒரு கல்வெட்டு வாசகம், “எங்கள் குலவிளக்கே மறுபடியும் கலைவிளக்காய் உதிப்பாயாக...”

மதுரை சரஸ்வதி பள்ளி விபத்துபற்றி அறிய அங்கு படித்தவர்கள், விபத்தை நேரில் கண்டவர்களைத் தேடிச் சென்றேன். பாதிக்கப் பட்டவர்கள் முதல் பள்ளி நிர்வாகி வரை எல்லோருமே, இடிந்து விழுந்த பள்ளியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள்ளேயே வசிப்பது ஆச்சரியமளித்தது.

பிள்ளைகளைப் பிணமாகப் பார்த்த சாபம்!

மணிநகரம் பள்ளிக்கூடம் இடிந்து விழுந்ததில் தன் வீட்டின் ஒரு பகுதியை இழந்தவர், தற்போதும் அதே இடத்தில் வசிக்கிறார். இப்போது கொஞ்சம் பெரிய வீடாகக் கட்டியிருக்கிறார். அவரது பெயர் வி. நடராஜன், வயது 76. “இந்தப் பகுதியில் தீவிர ஆன்மீகவாதியாக இருந்த செட்டியார் ஒருவர், கோயில்களுக்கும் தர்ம காரியங்களுக்கும் நிறைய இடங்களைக் கொடுத்திருந்தார். அவரின் அனுமதி பெற்று, பிச்சையா பிள்ளை என்பவர் இந்த இடத்தில் பள்ளிக்கூடம் கட்டினார். சரஸ்வதி உயர்நிலைப்பள்ளி என்பது அதன் பெயர். அது 2 மாடி கட்டிடம். கிழக்கு மேற்காக 72 அடி நீளம் இருந்தது.

4.4.1964-ம் தேதி பகல் 11.30 இருக்கும். மதுரையிலிருந்து பெங்களூரு போகிற ரெயில் வேகமாப் போச்சு; அந்தச் சத்தம் அடங் குறதுக்குள்ள, திடீர்னு பள்ளிக்கூடக் கட்டிடம் இடிந்து விழுந்துடுச்சி. அதுல ஒரு பகுதி பக்கத்துல இருக்கிற என் வீட்டு மேலயும், மாட்டுக் கொட்டகையிலேயும் விழுந்துச்சி. உள்ளே இருந்து குழந்தைங்க எல்லாம் வீறிட்டு அழுதாங்க. அக்கம்பக்கம் இருந்தவங்க, பிள்ளையப் பெத்தவங்க எல்லாம் வாயிலையும் வயித்துலேயும் அடிச்சிக்கிட்டு ஓடிவந்தோம். கொஞ்ச நேரத்துல போலீஸ்காரங்களும், தீயணைப்பு வீரர்களும் வந்துட்டாங்க. டி.வி.எஸ்., மதுரா கோட்ஸ் கம்பெனிகாரங்களும் வாகனங்களையும் இயந்திரங்களையும் கொடுத்து மீட்புப்பணிக்கு உதவுனாங்க. மொத்தம் 32 குழந்தைகளோட உடல்களை மீட்டாங்க. ஒத்தப் பிள்ளைக்கு அடிபட்டாலே காணச் சகிக்காது. 32 பிள்ளைகளைப் பிணமாப் பார்க்கிற சாபத்தை ஆண்டவன் எனக்குக் கொடுத்தான்.

இந்தச் சம்பவத்தால, பள்ளிக்கூடத்தை மூடிட் டாங்க. கோர்ட்ல கேஸ் நடந்து, விபத்துதான்னு முடிச்சிட்டாங்க. இதுக்கு இடையில, பள்ளி நிர்வாகி பிச்சையா பிள்ளை, தன் உறவினரான அன்றைய மதுரை மேயரும், திமுகவில் செல்வாக்கு மிக்கவருமான மதுரை முத்து மூலம் புதிய பள்ளி தொடங்கும் அனுமதி வாங்கினார். 3-வது வருஷம், விபத்து நடந்த தெருவுக்கு அடுத்த தெருவுலேயே மங்கையர்க் கரசி என்ற பெயரில் பள்ளிக்கூடம் கட்டப்பட்டது. இன்னைக்கு அது ஆல்போல் தழைத்து, அருகு போல் வேரூன்றிருச்சி. ஸ்கூல், காலேஜ்னு அஞ்சாறு நிறுவனங்களாயிடுச்சி” என்றார்.

ஏசப்பா காப்பாத்துங்க!

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருடன் மீண்ட காந்திமதிக்கு இப்போது 63 வயது. அன்று நடந்த சம்பவம்பற்றிப் பேசும்போது கண்கள் கலங்குகின்றன. “இப்பத்தான் அந்தக் கட்டிடம் இடிஞ்சி விழுந்த மாதிரி, இருக்குது. அன்னைக்கு சனிக்கிழமை என்பதால், பள்ளிக்கூடம் லீவு. ஆனா, 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்புப் பிள்ளைகளை மட்டும் பரீட்சைக்குப் படிக்கிறதுக்காக ஸ்பெஷல் கிளாஸ்னு வரச்சொல்லியிருந்தாங்க. ஒன்றிரண்டு டீச்சர்தான் வந்திருந்தாங்க. பிள்ளைங்க எல்லாம் தனித்தனியா உட்கார்ந்து சத்தம் போட்டு படிச்சிக்கிட்டு இருந்தாங்க.

8-ம் வகுப்பு முதல் மாடியில இருந்துச்சி. என் பிரெண்ட் ஆலீஸ் வசந்தகுமாரி, ‘கூந்தல் கருப்பு, குங்குமம் சிவப்பு’னு சினிமாப் பாட்டை பாடிக்கிட்டு இருந்தா. திடீர்னு சரசரன்னு சத்தம். அப்படியே தரை பிளந்து பூமிக்குள்ள புகுந்தது மாதிரி இருந்துச்சி. மொத மாடியில இருந்து தரைத்தளத்துக்குப் போயிட்டோம். கட்டிடமும் புழுதியும் மூடிட்டதால என்னால கை காலை அசைக்க முடியலை. திமிறிப்பார்த்தேன், முடியலை. என் பக்கத்துல கிடந்த ஆலீஸ் வசந்தகுமாரி பாட்டை நிறுத்திட்டு அவளை அறியாமலேயே, ‘ஏசப்பா காப்பாத்துங்க ஏசப்பா. காப்பாத்துங்க’ என்று கத்த ஆரம்பிச்சிட்டா.

எல்லாம் முடிஞ்சுபோச்சுன்னு நினைச்சப்ப, எங்க பக்கத்துல யாரோ இடிபாடுகளைக் கிளறுற சத்தம் கேட்டுச்சி. கொஞ்ச நேரத்துல மதுரை பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டுபோயிட்டாங்க. என் பக்கத்து பெட்டுல இருந்த அஞ்சாப்பு பொண்ணு, ‘அக்கா என்னைய உங்க அப்பாதான் காப்பாத்துனாக. என் மக எங்க இருக்கான்னு அவுக கேட்டாக. பதட்டத்துல எனக்குச் சொல்லத் தெரியலைக்கா’ என்றது பாவமாக.

அந்த விபத்துல செத்துப்போன பார்வதிங்கற 8-ம் வகுப்பு மாணவிக்குத் திருமண நிச்சய தார்த்தம் முடிஞ்சிருந்துச்சி. முழுப் பரீட்சை லீவுல கல்யாணம்னு பேசியிருந்தாங்க. அதுக் குள்ள இப்படி நடந்திடுச்சி. அவளைப் பெத்த வங்க அழுததை இப்ப நினைச்சாலும் எனக்கு அழுகை வந்திடும். ஏன்னா, இன்னைக்கு எனக்கும் ஒரு பொண்ணு இருக்கிறா” என்றார்.

மறுபடியும் ஒரு கொடுமையா?

தன் தங்கை சரோஜாவைப் பறிகொடுத்த முருகன் (65) கூறும்போது, “வீட்ல விளையாடிக் கிட்டு இருந்த பிள்ளையை அடிச்சிப் பள்ளிக் கூடத்துக்குத் துரத்துனேனேன்னு என் அம்மா அழுதது இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்குது. அன்னைக்கு நிவாரணமா கொடுத்தது தலைக்கு ஆயிரம்தான். செத்துப்போன பிள்ளைகள்ல பலரை எரிச்சிட்டாங்க. என் தங்கச்சி சரோஜா உள்பட 18 பேரை தத்தனேரி சுடுகாட்டுல வரிசைக்கா புதைச்சாங்க. ஒவ்வொரு கல்வெட்டுலேயும் அவங்க பேரு, படிச்ச வகுப்பு எல்லாம் எழுதியிருக்கு. பிள்ளையைப் பறிகொடுத்த எல்லாரும் வருஷம் வருஷம் குருபூஜை விழா நடத்திக்கிட்டுவர்றோம். கும்ப கோணம் சம்பவம் நடந்தப்ப அய்யய்யோ மறுபடியும் ஒரு கொடுமையான்னு அதிகம் துடிச்சது நாங்கதான்” என்றார்.

அன்றைய சரஸ்வதி பள்ளி நிர்வாகி பிச்சையா பிள்ளையின் மகனும், இன்று மங்கையர்க்கரசி கல்வி நிறுவனங்களின் நிர்வாகியுமான பி. அசோக்குமார் இந்தச் சம்பவத்தைப் பற்றி பேசவே விரும்பவில்லை. “ஏன் சார், எல்லாரும் மறந்துபோன ஒரு விஷயத்தை ஞாபகப் படுத்தனும்னு நெனைக்கிறீங்க?” என்றார்.

ஒரு வரலாறு மறக்கடிக்கப்படுவதன் பின் னுள்ள அரசியலும், வரலாறு தரும் பாடத்தை மறக்கும்போது அது கொடுக்கும் தண்டனையும், வலி சுமந்த மக்களுக்குத்தானே தெரியும்? 1964 மதுரைப் பள்ளிச் சம்பவத்தில் பாடம் படிக்க மறந்ததன் விளைவுதானே 2004 கும்பகோணம் பள்ளிச் சம்பவம்? மறக்க முடியுமா?

- கே.கே. மகேஷ்,

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி, ‘தி இந்து’ ஆவணக் காப்பகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x