Last Updated : 18 Oct, 2023 05:33 AM

1  

Published : 18 Oct 2023 05:33 AM
Last Updated : 18 Oct 2023 05:33 AM

கணை ஏவு காலம் 8 | பேசிப் பேசி ஏமாற்று @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

கோப்புப்படம்

ஏரியல் ஷரோன், அல் அக்ஸாவுக்குச் சென்றார். இரண்டாவது இண்டிஃபாதா தொடங்கியது. இப்படிச் சொல்வது தகவல் அளவில் சரியென்றாலும் இதன் பின்னணியில் ஒரு ஐந்தாண்டுக் கால அக்கிரம சரித்திரம் உள்ளது. அதனோடு அறிமுகமாவது செய்துகொண்டுவிடுவது அவசியம். அப்போதுதான் அந்த வரலாறு காணாத கலவரங்களின் அடிப்படை புரியும்.

1993-ம் ஆண்டு இஸ்ரேலிய அரசுக்கும் பாலஸ்தீன ஆணையத்தின் தலைவர்யாசிர் அர்ஃபாத்துக்கும் இடையில் ஏற்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தம் குறித்துப் பார்த்தோம் அல்லவா? ஐந்தாண்டு காலத்துக்குள் படிப்படியாக நிலைமையைச் சரி செய்து, மே 4, 1999-க்குள் ஒரு சுதந்திர பாலஸ்தீனம் செயல்படத் தயாராகியிருக்க வேண்டும் என்பது அந்த ஒப்பந்தத்தின் அடிப்படை. அந்த ஐந்தாண்டுக் காலமும் நாம் ஏற்கெனவே கண்டபடி சில குறைந்தபட்ச சலுகைகளுடன் பாலஸ்தீனம் தன்னாட்சிஅதிகாரப் பிராந்தியமாகச் செயல்பட்டுக் கொள்ளலாம்.

ஆனால் அதற்குள் இஸ்ரேலிய அரசு செய்ய வேண்டிய மிக முக்கியமானதொரு காரியம் குறித்தும் பேசியிருந்தார்கள். அது, மேற்குக் கரையிலும் காசாவிலும் அவர்கள் உருவாக்கியிருந்த யூதக்குடியேற்றங்களைத் திரும்பப் பெறுவது.அதாவது, பாலஸ்தீனர்களின் நிலம் என்றுஒப்புக்கொள்ளப்பட்ட பகுதிகளில் குடியமர்த்தப்பட்டிருந்த யூதர்களை மீண்டும் இஸ்ரேலுக்குள் அழைத்துக்கொள்ள வேண்டும். நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.

1993-ம் ஆண்டு நிலவரப்படி மேற்குக் கரையில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் யூதக் குடியேற்றங்கள் இருந்தன. ஒப்பந்தப்படி நடந்துகொள்வதென்றால் என்ன செய்திருக்க வேண்டும்? ஐந்தாண்டுகளில் படிப்படியாக அவர்களைத் திரும்பப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் நடந்தது வேறு.1999-ம் ஆண்டு மே மாத நிலவரப்படி மேற்குகரையில் இருந்த யூதக் குடியேற்றங்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்துக்குச் சற்று அதிகம். அதாவது மிகச் சரியாக இரு மடங்காக்கி இருந்தார்கள்.

பாலஸ்தீனர்கள் இவ்விஷயத்தில்தான் கொதித்துப் போயிருந்தார்கள். திரும்பத் திரும்ப அவர்கள் அர்ஃபாத்திடம் நியாயம் கேட்டு, அவர் இஸ்ரேலிய அரசுடன் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் நயா பைசாவுக்குப் பயனில்லாமல் போனது. அமைதி ஒப்பந்தம், நோபல் பரிசு எல்லாம் சரி. ஆனால் விடிந்துஎழுந்தால் கலவரம் என்ற நிலைமையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை.

ஜூலை 2000 -ல் கேம்ப் டேவிட் என்ற இடத்தில் இன்னொரு பேச்சுவார்த்தை நடந்தது. ஷரோனுக்கு முன்பு இஸ்ரேலின் பிரதமராக இருந்த இஹூத் பராக் (Ehud Barak) மற்றும் யாசிர் அர்ஃபாத் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை. வழக்கம்போல அமெரிக்க மத்தியஸ்தம். நிர்ணயிக்கப்பட்ட ஐந்தாண்டுக் காலத்தில்இஸ்ரேல் தரப்பில் அமைதிக்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை அர்ஃபாத் தரப்பு சுட்டிக்காட்டியதை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக, ஜெருசலேம் பிரச்சினை, இரு தரப்பு எல்லைக் குளறுபடிகள், அகதிகளாக வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த பாலஸ்தீனர்கள் தாய்மண்ணுக்குத் திரும்ப அனுமதி தருவது போன்ற விஷயங்களில் சற்றும் இறங்கிவர இஸ்ரேல் தயாராக இல்லை என்பது தெளிவானது. விளைவு, பேச்சுவார்த்தை தோல்வி.

உண்மையில் அன்றைக்கு இஸ்ரேலியப் பிரதமர் விரும்பியதெல்லாம் ஒன்றுதான். அவர்கள் சொல்வதைப் பாலஸ்தீனர்கள் கேட்க வேண்டும்.பிரச்சினைக்குரிய விஷயங் கள் குறித்துப் பேசக் கூடாது. தன்னாட்சி அதிகாரத்தைத் தொடர்ந்து கொள்ளலாம். மற்றபடி புதிதாகஎதையும் எதிர்பார்க்கா தீர்கள். கதை நன்றாக இருக்கிற தல்லவா?

இதனால் மிக நிச்சயமாகப்பாலஸ்தீனர்கள் கொதித்தெழு வார்கள் என்பது இஸ்ரேலுக்குத் தெரியும். கலவரம் வெடிக்கும் என்பது அதைவிட நன்றாகவே தெரியும். பிரச்சினை பெரிதாகும்போது ராணுவத்தைக் களமிறக்கிவிட்டுவிடுவது. ஒரு முழு நீள ஆட்டம் ஆடிப் பார்த்துவிடவே அவர்கள் முடிவு செய்திருந்தார்கள்.

இந்தச் சூழ்நிலையில்தான் செப்டம்பர்28-ம்தேதி ஏரியல் ஷரோன் ஜெருசலேத்துக்கு வந்தார். புரட்சிகர யூத அரசியல்வாதி. அடுத்த பிரதமராகும் உத்தேசமுடன் காய் நகர்த்திக்கொண்டிருந்தவர். அந்த ஊரின் அஞ்சாநெஞ்சன் என்று பெயர் பெற்றவர். அப்படிப்பட்ட மனிதர் ஜெருசலேமுக்கு வருகிறார் என்றால், ஏற்கெனவே அங்கு குடியேறியிருக்கும் யூதர்கள் அச்சம் பவத்தை வெறும் சம்பவமாக விட்டு வைப்பார்களா?

ஏரியல் ஷரோனின் ஜெருசலேம் வருகை ஒரு திருவிழாவாக மாற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான யூதர்கள் அணி திரண்டார்கள். எனவே நூற்றுக் கணக்கான பாதுகாப்புப்படை வீரர்களும் அணிவகுத்தார்கள். யாசிர் அர்ஃபாத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் வந்தார். அழுகைச் சுவர் அருகே நின்று வேண்டிக்கொண்டார். ஆண்டவா, அடுத்தத் தேர்தலில் எப்படியாவது என்னை வெல்ல வைத்துப் பிரதமராக்கிவிடு. அவ்வளவுதான். கிளம்பிப் போய்விட்டார்.

பாலஸ்தீனர்கள் கொதித்துப் போனார்கள். அவர்களது புனிதத் தலம் அருகிலேயே இருந்தும் அவர்களால் உள்ளே போக முடியாது. பிரார்த்தனை செய்ய முடியாது. போனால் பிரச்சினை ஆகும். துப்பாக்கிச் சூடு நடக்கும். ஒரு சில உயிர்களாவது போகும். ஆனால்டெல் அவிவ்வில் இருந்து ஏரியல்ஷரோன் படை திரட்டிக்கொண்டுவந்து செல்வார் என்பது என்னநியாயம்? பிறகு எதற்குஅமைதி ஒப்பந்தமும் எல்லை வகுத்தல்களும்?

என்ன ஆனாலும் ஜெருசலேமை யூதர்கள் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பதுதான் அச்சம்பவத்தின் ஒரு வரிச் செய்தியாக இருந்தது. இப்போதிருக்கும் இஹூத் பராக்காக இருந்தால் என்ன, நாளை வரப் போகும் ஏரியல் ஷரோனாகஇருந்தால் என்ன? பெயர்கள்தாம் வேறுவேறு. பாலஸ்தீனர் விஷயத்தில் அனைத்து இஸ்ரேலிய அரசியல்வாதிகளின் நிலையும் ஒன்றே. எதையும் விட்டுத் தராதே. முடிந்தால் மொத்தமாக மூட்டை கட்டி வெளியேற்ற வழியைப் பார்.

இது தெள்ளத் தெளிவாக மீண்டும் ஒருமுறை புரிந்தபோதுதான் அவர்கள் பொறுமை இழந்து போனார்கள். இரண்டாவது இண்டிஃபாதா இதன் தொடர்ச்சியாகத்தான் ஆரம்பமானது. இரண்டாயிரமாவது ஆண்டில் உலகம் சந்தித்த முதல் பெரும் பேரழிவுக் கலவரம் அது.

(தொடரும்)

முந்தைய அத்தியாயம்: கணை ஏவு காலம் 7 | பிரதமரையே கொலை செய்த கதை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x