Published : 31 Dec 2017 11:03 AM
Last Updated : 31 Dec 2017 11:03 AM

தமிழகம் பேசியது...

2017-ம் ஆண்டு இன்றுடன் நிறைகிறது. கடந்து செல்லும் ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அந்த ஆண்டு முழுவதும் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை ‘தி இந்து’வில் வழங்கிவருகிறோம். நிகழ்வுகளை வெறுமனே பதிவுசெய்யாமல், அவற்றின் பின்னணியை அலசியிருக்கிறோம். விளைவுகள் பற்றி யோசித்திருக்கிறோம். இந்த ஆண்டில் தமிழகத்தை உலுக்கிய, வருடிக்கொடுத்த, பதைபதைக்கவைத்த, நெகிழவைத்த, நம்பிக்கை கொள்ளச் செய்த எத்தனையோ சம்பவங்களைக் கடந்தோம். அவற்றில் முக்கியமானவற்றைத் தொகுத்து உங்கள் பார்வைக்குத் தருகிறோம். சில சம்பவங்களின் தாக்கம் புத்தாண்டிலும் தொடரலாம். சில பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கலாம். மாற்றங்கள் வரலாம். நம்பிக்கையுடன் காத்திருப்போம்!

ஒரு புதிய தலைமை - செயல் தலைவர் ஸ்டாலின்

திமுகவின் செயல் தலைவரானதன் மூலம், தனது அரசியல் வாழ்வின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்துவைத்தார் மு.க.ஸ்டாலின். பள்ளி நாட்களிலேயே அரசியல் ஆர்வத்துடன் திரிந்து, நெருக்கடிநிலைக் கொடுமைகளின் வழி தீவிர அரசியலுக்குள் உந்தித் தள்ளப்பட்ட ஸ்டாலின், அரசியலில் ஐம்பது ஆண்டுகளை நெருங்கிக்கொண்டிருப்பவர். மாநில இளைஞரணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் என்று ஒவ்வொரு கட்டமாய் கட்சியில் உயர்ந்தவர். நெடிய அனுபவம் உண்டு என்றாலும், கருணாநிதியின் நேரடித் துணையின்றி தானே முன்னின்று செயல்படும் சூழலை உருவாக்கியது செயல் தலைவரானதற்குப் பிந்தைய இந்த ஓராண்டு. கட்சியைத் தாண்டி தமிழக மக்களுக்கும் அடுத்த நம்பிக்கையாக ஸ்டாலின் உருவெடுத்த ஆண்டு இது.

ஒரு பெரும் குழப்பம் - ஜெயலலிதாவுக்குப் பிந்தைய ஓராண்டு

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து, ஆளும் அதிமுகவுக்குள் உருவான அதிகார யுத்தங்கள் அக்கட்சியைத் தாண்டி ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் பீடித்தது. கட்சியின் புதிய பொதுச்செயலராகப் பதவியேற்ற சசிகலா, முதல்வர் நாற்காலியை நோக்கி நகர்ந்தபோது, கட்சி இரண்டாகப் பிளந்தது. அடுத்து, முதல்வரான பன்னீர்செல்வம் பதவியை ராஜினாமா செய்ததோடு, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானத்தில் உட்கார்ந்து தன்னுடைய யுத்தத்தைத் தொடங்கினார். புதிய அணி உருவானது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் சசிகலாவும் குற்றவாளிகள் என்று அறிவித்த உச்ச நீதிமன்றம், சசிகலாவை சிறைக்கு அனுப்பியதோடு அவருடைய முதல்வர் கனவுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.

பழனிசாமியை முதல்வராக்கினார் சசிகலா. வெகுவிரைவில் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இணைந்து சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினரைக் கட்சிப் பொறுப்புகளிலிருந்து வெளியேற்றி, கட்சியைத் தம் வசப்படுத்தினர். ஆட்சியையும் தங்கள் வசம் உறுதிப்படுத்திக்கொண்டாலும், பழனிசாமி - பன்னீர்செல்வம் இடையிலான பனிப்போர் அப்பட்டமாக வெளியில் தெரிந்தது. ஜெயலலிதாவுக்குப் பின் டெல்லியிடம் சரணடைந்துவிட்ட அதிமுகவினர், தமிழகத்தின் உரிமைகளையும் டெல்லிக்குத் தாரை வார்த்ததுதான் உச்ச இழப்பு. போராடிப் பெற்ற மாநிலத்தின் பல உரிமைகள் காணாமல் போயின.

ஒரு கொடுந்தாக்குதல்நீட் தேர்வும் அனிதா தற்கொலையும்

தமிழகத்தையே உலுக்கிய விவகாரம் நீட் தேர்வு. மருத்துவப் படிப்புக்கு இதுநாள் வரை தமிழகக் கல்வித் துறையே மாணவர்களைத் தேர்ந்தெடுத்துவந்த நிலையில், மத்திய அரசு நாடு முழுக்கக் கொண்டுவந்த ‘நீட்’ தேர்வு பெரும் பிரச்சினையாக தமிழகத்தில் உருவெடுத்தது. பெரும்பான்மை மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் தமிழ்நாட்டில், கணிசமான கேள்விகள் மத்தியப் பாடத்திட்டத்திலிருந்து அமைந்த இத்தேர்வு, பெரும் அநீதியாக அமைந்தது. மாநில உரிமைகள் மீதான தாக்குதலாக அமைந்த இத்தேர்வு, பெரும் போராட்டங்களைத் தமிழகத்தில் உருவாக்கியது. இத்தேர்வு காரணமாக மருத்துவக் கனவை இழந்த அரியலூர் மாணவி அனிதா, தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தைக் கொந்தளிக்கவைத்தது. ஒரே ஆறுதல், உதயச்சந்திரன் போன்ற ஒரு அதிகாரியின் அக்கறையில் உருவாகிவரும் புதிய பாடத்திட்டம் இத்தகு சவால்களைக் கணக்கில் கொண்டு வருகிறது!

ஒரு அதிகார மையம் - ஆளுநரின் நகர்வுகள்

ரோசய்யாவுக்குப் பின் தமிழகத்துக்கென்று தனி ஆளுநர் நியமிக்கப்படாத நிலையில், அக்டோபர் 6-ல் ஆளுநராகப் பதவியேற்றார் பன்வாரிலால் புரோஹித். எடுத்த எடுப்பில் அவர் மாவட்டங்களுக்குச் சென்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியது பரபரப்பைக் கிளப்பியது. “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரும் அரசும் இருக்கும்போது இது தேவையற்றது” என்றன எதிர்க்கட்சிகள். “அரசியல் சட்டப்படி இது தவறில்லை; தொடரும்” என்றது ஆளுநர் மாளிகை. ஆளுங்கட்சியும் முதல்வரும் வாய் மூடி மௌனம் காத்தனர்!

ஒரு சர்ச்சை - ஆதியோகி சிலை

வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் யோகா குரு ஜக்கி வாசுதேவ் நிறுவிய 112 அடி ஆதியோகி சிலை சர்ச்சைகளுக்கு வித்திட்டது. ஏற்கெனவே, விதிகளுக்கு முரணாகக் கட்டிடங்கள் கட்டப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுகள், விளக்கம் கேட்டு அரசு அனுப்பிய நோட்டீஸ் என்று ஈஷா யோகா மையத்தின் கட்டுமானங்கள் தொடர்பாகச் சூழல் நலன் சார்ந்து ஏகப்பட்ட விமர்சனங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி என்று ஆட்சியாளர்கள் பங்கேற்கும் நிகழ்வாக இது அரங்கேறியது பெரும் விவாதங்களை உருவாக்கியது.

ஒரு கனவு நாயகி - ‘பிக் பாஸ்’ ஓவியா

குறுகுறுப்பும் வெட்கமும் நிறைந்த பள்ளி மாணவியாக ‘களவாணி’ திரைப்படத்தில் அறிமுகமான ஓவியா, அதற்குப் பின் பல படங்களில் நடித்தார். ஆனால், நடிக்காமல் அவர் இயல்புக்கு நடந்துகொண்ட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி புகழின் உச்சிக்கு அவரைக் கொண்டுசென்றது. அவர் பயன்படுத்திய வார்த்தைகள் ‘வைரல்’ ஆகின. குறிப்பாக, கண்ணைச் சுருக்கிக்கொண்டு ‘ஷட் அப் பண்ணுங்க’ என்று அவர் உதிர்த்த வார்த்தைகள் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஒரு பாடலாகவே உருவாக்கப்பட்டது (படம்: ‘பலூன்’). ‘ஓவியா ஆர்மி’ உருவானதெல்லாம் சமூக வலைதளங்கள் பதிவுசெய்த சமகால வரலாறு!

ஒரு ஆசை - மூன்று நடிகர்கள் - ஒரே சினிமா

ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் ஒய்வுக்குப் பின் தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடம் அரசியல் கட்சிகளைவிடவும் நம்முடைய நடிகர்களைப் பாடாய்ப் படுத்தியது. ரசிகர்கள் சந்திப்பின் வழி ரஜினியும் ‘ட்விட்டர்’ விமர்சனங்கள் வழி கமலும் தங்கள் அரசியல் அலைகளைக் காற்றில் மிதக்க விட நேரடியாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல்செய்தார் விஷால். ‘வருவார்களா, மாட்டார்களா; இந்தப் படங்களின் பின்னிருக்கும் இயக்குநர் யார்?’ என்று பரபர விவாதங்களை நடத்தின ஊடகங்கள். விவாதங்கள் தொடர்கின்றன.

ஒரு தொடர் வதை - விவசாயிகளின் போராட்டங்கள்

முதலில் வெள்ளம், அடுத்து வறட்சி என்று தொடர் அடிகளால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளைப் போராட்டத்தில் தள்ளியது அரசின் அலட்சியம். விவசாயிகள் தற்கொலை விவகாரத்தை முன்னிறுத்தி விவசாயக் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளோடு டெல்லி ஜந்தர்மந்தரில் அய்யாசாமி தலைமை யில் உட்கார்ந்த விவசாயிகளின் போராட்டம் 100 நாட்களைக் கடந்தது. பொதுச் சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக எலிகளை வாயில் ஏந்துவதில் தொடங்கி, நிர்வாணம் வரை எல்லா உத்திகளையும் விவசாயிகள் கையாண்டது தேசிய ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க உதவியது. ஆனால், பிரதமரைச் சந்திக்கும் வாய்ப்பு இறுதி வரை கிடைக்கவில்லை. பகாசுர எரிவாயுத் திட்டங்கள் சூழ்ந்ததும் தமிழக விவசாயிகளைக் கோபத்தில் தள்ளின. கதிராமங்கலம், நெடுவாசல் இரு கிராமங்களும் தொடர் போராட்டக் களங்கள் ஆகின. மாநில அரசின் வாக்குறுதிகளால் தீ அடங்கியிருக்கிறது. அதேசமயம் கனன்றுகொண்டிருக்கிறது.

ஒரு அடக்குமுறை - குண்டர் தடுப்புச் சட்டம்

தொழில்முறைக் குற்றவாளிகளை ஒடுக்குவதற்காக இயற்றப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டம், மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்கான ஆயுதமாக உபயோகிக்கப்படுவது மாநில அரசின் ஒரு உத்தியானது. விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகத் துண்டுப் பிரசுரம் விநியோகித்த மாணவி வளர்மதி, இலங்கை இறுதிப் போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த முற்பட்ட ‘மே 17 இயக்க’ ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் கைது, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியது. சட்டப் போராட்டங்கள் அவர்களை விடுவித்தாலும், அரசின் ஒடுக்குமுறை நிழல்கள் அவர்களைப் பின்தொடர்ந்தன. போராளிகளும் ஓயவில்லை.

ஒரு நம்பிக்கை - கௌசல்யா சங்கர்

சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டதால், உடுமலைப்பேட்டை வீதியில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட சங்கர் வழக்கில், பிரதான குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை விதித்து நாட்டையே அதிரவைத்தது திருப்பூர் நீதிமன்றம். ஆணவக் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறை. தன்னுடைய காதல் கணவனைப் பறிகொடுத்ததோடு வீட்டில் முடங்காமல் நீதிமன்றம் ஏறிய கௌசல்யா, சாதிய வெறிக்கு எதிரான போராளியாகப் பொதுவெளியில் முன்னேறுகிறார்!

ஒரு தடாலடி வருகை - தினகரனின் எழுச்சி

அரசியலில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இருக்கிறார் என்றாலும், ‘சசிகலாவின் அக்கா மகன்’ என்ற அடையாளத்தைத் தாண்டி வெளியே அறியப்பட்டவர் அல்ல தினகரன். ஜெயலலிதாவால் அதிமுகவின் டெல்லி முகமாகத் திட்டமிடப்பட்டு, மிக விரைவிலேயே பின்னுக்கும் இழுக்கப்பட்டவர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கட்சிக்குள் நிகழ்ந்த அதிகார யுத்தத்தின் இடையில், இப்போது திமிறி எழுந்திருக்கிறார் தினகரன். கவர்ச்சிகரமான தலைமை அரசியலுக்குப் பழகிய அதிமுக தொண்டர்களுக்கு பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரும் ஈடுகொடுக்கத் திணறும் சூழலில், ஊடகங்களை சிரித்த முகத்துடன் அநாயாசமாகக் கையாளும் தினகரன் மேல் நோக்கி நகர்கிறார். ஜெயலலிதா சட்ட மன்ற உறுப்பினராக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் அத்தனை அஸ்திரங்களையும் பணபலத்தால் எதிர்கொண்டு தினகரன் பெற்ற வெற்றி விவாதத்துக்குரியது என்றாலும், அவருடைய செல்வாக்கை உயர்த்தியிருக்கிறது!

ஒரு தமிழ்ப் பாய்ச்சல் - பா.வெங்கடேசனின் பாகீரதி

சர்வதேசத்துக்கு எல்லா வகையிலும் சவால் விடும் ஆற்றலைத் தமிழ் எல்லாக் காலங்களிலும் தன்வசம் கொண்டிருக்கிறது என்பதற்கான சமகால நிரூபணம், பா.வெங்கடேசனின் ‘பாகீரதியின் மதியம்’. சமகாலத் தமிழ் இலக்கியத்தின் ‘பாகுபலி தருணம்’ இந்நாவல். சமகாலத் தமிழ் எழுத்தின் விஸ்வரூப பாய்ச்சல்! முந்தைய ஆண்டில் வெளியான இந்நாவலின் வீச்சை இந்த ஆண்டில்தான் தமிழகம் உணர்ந்தது. பாகீரதியின் மொழியில் கரைந்தது. சர்ச்சைகளால் அல்லாமல் படைப்புகளால் கவனம் ஈர்க்கும் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான பா.வெங்கடேசன் எழுதிய ‘உயிர்கள், நிலங்கள், பிரதிகள் மற்றும் பெண்கள்’ கட்டுரைத் தொகுப்பும் இந்த ஆண்டில் வெளியானது. கவிதைகளை, புனைவை அணுகுவதில் தனக்கே உரிய மாறுபட்ட பார்வையோடு கட்டுரை எழுத்துக்கான புதுவித நடையையும் இதன் வழி முனைந்தார் வெங்கடேசன். நிராகரிக்கவே முடியாத மொழி வித்தகன்!

ஒரு பெருங்கொடுமை - கந்துவட்டியின் சூறை

தமிழகத்தையே நிலைகுலையவைத்த காட்சி. கந்துவட்டிக் கொடுமை தாளாமல் மனைவி, இரு குழந்தைகளுடன் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்தார் கூலித் தொழிலாளி இசக்கிமுத்து. அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்வைச் சுருக்குக் கயிறுபோல் பிணைத்திருக்கும் பொருளாதாரப் பிரச்சினையைப் பொதுவெளிக்கு மிகத் தீவிரமாகக் கொண்டுவந்தது இச்சம்பவம் என்றாலும், ஆட்சியாளர்களின் இதயம் அசையவில்லை. கந்துவட்டிக்குப் பலியானவர் மீதே குற்றஞ்சாட்டிய காவல் துறையின் அறிக்கைகள் கொந்தளிக்கவைத்தன. கொடுமையைக் கேலிச்சித்திரமாக்கிய ஓவியர் பாலா கைதுசெய்யப்பட்டதும் கடும் கண்டனத்தை உண்டாக்கியது. இதற்கு அடுத்து, நடிகர் சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக் குமார் கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டது இன்னொரு அதிர்ச்சி. ஆனால், தீர்வை யாரும் யோசித்ததாகத் தெரியவில்லை.

ஒரு மனிதப் பேரிடர் - ஒக்கி புயல் அலட்சியங்கள்

ன்னியாகுமரி மாவட்டத்தையே புரட்டிப்போட்டது ஒக்கி புயல். சூறைக்காற்றுசூறையாடிக்கொண்டிருக்கும்போதும்கூட ‘புயல்’ என்ற வார்த்தையைத் தவிர்க்க முற்படும் லட்சணத்தில்தான் இருந்தது மாவட்ட நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்! உரிய எச்சரிக்கைகள் வழங்கப்படாத நிலையில் கடலுக்குச் சென்ற நூற்றுக்கணக்கான கடலோடிகள் கடலில் காணாமல்போயினர். பசுமைக்குப் பேர் போன குமரியின் தோட்டங்கள் சீரழிந்து சின்னாபின்னமாயின. மீட்பு நடவடிக்கைகளும் மெச்சும் வகையில் இல்லை. கடலுக்குச் சென்றவர்களில் இன்னும் நூற்றுக்கணக்கானோர் பற்றி எந்தத் தகவலும் இல்லை. உருக்குலைந்த நிலையில் கடலில் கிடைத்த கடலோடிகளின் சடலங்கள் ‘இன்னும் எவ்வளவு அழிவுக்குப் பின்னர் பேரிடர் மேலாண்மையைக் கற்றுக்கொள்வீர்கள்’ என்று நம் மனசாட்சியைக் கேட்பதுபோல இருந்தது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x