Published : 21 Nov 2017 09:42 am

Updated : 21 Nov 2017 12:45 pm

 

Published : 21 Nov 2017 09:42 AM
Last Updated : 21 Nov 2017 12:45 PM

என்னவாகும் ஜிம்பாப்வேயின் எதிர்காலம்?

ஜி


ம்பாப்வேயில் சமீபத்தில் நடந்திருக்கும் நிகழ்வுகள் ராபர்ட் முகாபே ஆட்சியின் முடிவுக்கான ஒரு தொடக்கத்தைக் குறிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. சர்வாதிகாரியான முகாபேயின் 37 ஆண்டுகால ஆட்சியானது சொல்லப்படாத துயரங்களுக்கும் உயர் பணவீக்க விகிதத்துக்கும் குடிநீர், மின்சாரம், நிதி ஆகியவற்றின் பற்றாக்குறைக்கும் புகழ்பெற்றது. நல்ல வாய்ப்புகளைத் தேடி லட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். மிச்சம் இருந்தவர்களில் பெரும்பாலானோர் ஏழ்மையிலும் நோய்மையிலும் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

நவம்பர் 14, 15-ல் நடந்த குழப்பமான நிகழ்வுகளின்போது, அரசுத் தொலைக்காட்சி நிறுவனமான ‘இஸட்.பி.சி.’யை ராணுவம் கைப்பற்றியது. மேலும், பிரச்சினை யின் தீவிரத்தைக் குறைத்துக்காட்டும் முயற்சியாக, அங்கு நடப்பது ராணுவப் புரட்சி அல்ல, அதிபரைச் சுற்றியுள்ள குற்றவாளிகளைக் குறிவைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் விளக்கம் சொன்னது. ராணுவம் என்ன சொன்னாலும்சரி, நிச்சயம் இது ராணுவப் புரட்சிதான்! ராணுவத்தின் இந்தக் குறுக்கீடு, தேச நலனை விடவும் தங்கள் சுயலாபத்தைக் கருத்தில் கொண்டு ராணுவத் தளபதிகள் எடுத்த நடவடிக்கை என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

முகாபேயும் அவரது, ‘ஜிம்பாப்வே ஆப்பிரிக்கன் நேஷனல் யூனியன் – பேட்ரியாட்டிக் ஃப்ரண்ட்‘ (இஸட்.ஏ.என்.யூ. – பி.எஃப்.) கட்சியும் வெறுக்கப்படுகின்றனர் என்பதில் எந்த ரகசியமும் இல்லை. ஆனால், ராணுவம் சந்தேகமேயில்லாமல் அந்தக் கட்சியின் ஆட்சியைத்தான் தொடரவிருக்கிறது. 2000 முதல் நடந்த அடுத்தடுத்த தேர்தல்களின்போது, ஜிம்பாப்வே ராணுவம் தேர்தல் முறைகேடுகளில் முக்கியப் பங்கேற்றதுடன், தேசநலன் எனும் பெயரில் வன்முறைக்கும் வழிவகுத்தது.

மக்களிடம் பரவலான அபிமானம் பெற்ற முன்னாள் துணை அதிபர் ஜோய்ஸ் முஜுரு, 2014 தேர்தலில் அதிபர் பதவிக்குப் போட்டியிட விரும்பியபோது, பதவி நீக்கம் செய்யப்பட்டு, கட்சியிலிருந்தே வெளியேற்றப்பட்டபோது ராணுவம் மெளனமாக இருந்தது. விடுதலைப் போராட்டக் காலத்திலிருந்தே முகாபேயின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த துணை அதிபர் எம்மர்சன் நங்காக்வா, சமீபத்தில் முகாபேயால் பதவிநீக்கம் செய்யப்பட்டதையடுத்தே ராணுவம் இப்படி ஒரு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. 1980 முதல் 1988 வரை உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பு வகித்த நங்காக்வா, 2009 முதல் 2013 வரை ராணுவ அமைச்சராக இருந்தவர். 2014-ல் துணை அதிபர் ஆனார்.

புரட்சிக்குக் காரணம் என்ன?

இந்த ராணுவப் புரட்சியே கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் மோதலின் விளைவுதான். முகாபேவுக்குப் பிறகு நங்காக்வா அல்லாமல் முகாபேயின் மனைவி கிரேஸ் அதிபராகலாம் எனும் சூழல் உருவானதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே பதற்றம் நிலவிவந்தது. இவ்விவகாரத்தில் ராணுவத்தின் தலையீடு, நங்காக்வாவுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான பிரத்யேக உறவை வெளிக்காட்டுகிறது. இப்படியான ஒரு சூழலில் அதிகாரத்துக்கு வரும் எந்தத் தலைவரும் ஜனநாயகச் சீர்திருத்தத்துக்காக உழைப்பார் என்று நம்புவது அப்பாவித்தனம்!

ஆட்சியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் ராணுவம் வெற்றிகரமாகக் கொண்டுவந்துவிட்டால், இன்னும் சில வாரங்களில் அல்லது மாதங்களில் முகாபேயின் அரசியலுக்கு முடிவுக்காலம் தொடங்கும் என்று நம்பலாம். ஜிம்பாப்வேயின் குடிமைச் சமூகமும் எதிர்க்கட்சிகளும் மிகவும் பலவீனமாக இருக்கும் சூழலில், அதிகாரத்தை ராணுவம் முழுமையாகத் தன்வசப்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் அதிகம். முகாபே உருவாக்கிய வெற்றிடத்தின் காரணமாக ஜிம்பாப்வேயில் அரசியல்சாசன ரீதியிலான சட்டபூர்வத்தன்மை இல்லாத நிலையில், கொஞ்சமேனும் நல்ல வாழ்க்கைக்கு வழிவகுக்கும் எந்த ஒரு தலைவரை யும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஊடகங்களைப் பயன்படுத்தித் தங்களுக்குச் சாதகமான நிலையை ராணுவம் உருவாக்கிக்கொள்ளும். ஜிம்பாப்வே மக்கள் ஒரு மீட்பரின் வருகைக்காக ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள்; மேலும் முகாபே அரசியலிலிருந்து மாற்றம் பெற இது ஒரு வாய்ப்பு!

என்னென்ன நடக்கலாம்?

ராணுவப் புரட்சி நிகழ்ந்து 48 மணி நேரத்தில் நிகழ்ந்த சம்பவங்களைப் பார்த்தபோது, மரணம் அடையும் வரை அதிபராகவே இருப்பார் என்று கருதப்பட்ட முகாபே, ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்படுவார் என்று தோன்றியது. அவரைப் பதவி விலகச் செய்வதில் அல்லது ஆட்சியிலிருந்து அகற்றுவதில் ராணுவம் எப்படி வெற்றிபெறும் என்பது இனிதான் தெரியும். முகாபே பதவி விலக மறுத்துவருவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், இவ்விவகாரத்தில் தென்னாப்பிரிக்கா தலையிடுவது தொடர்பாக அதிபர் ஜேக்கப் ஜுமா அனுப்பிய தூதுவரை ராணுவம் திருப்பி அனுப்பியிருப்பதால், மோதலுக்கான சூழல் உருவாகியிருக்கிறது. நாடு திரும்பியிருக்கும் நங்காக்வா, விசுவாசமான ராணுவத்தினரின் துணையுடன் அதிபராவதற்கான சட்டபூர்வ வாய்ப்புகளைப் பயன்படுத்துவார் என்று தெரிகிறது.

விடுதலைப் போரில் பங்கேற்ற புகழ்பெற்ற தலைவரான நங்காக்வா சரியான தேர்வுதான் என்றே பலரும் கருதுகிறார்கள். ஆனால், அது சரியாக அமையுமா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும். சூழலை வைத்துப் பார்க்கும்போது, நங்காக்வா அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தல் வரை நாட்டை அமைதியாக வழிநடத்துவார் என்று சொல்லலாம்.

ஆனால், நிலவரம் ராணுவத்தின் கைகளிலேயே தொடர்ந்து இருக்குமானால், அப்படி ஒரு தேர்தல் நடக்கும் என்று நான் நம்பவில்லை. தான் எதிர்பார்க்கும் தருணம் உருவாகும் வரை ராணுவத்துக்கு மேலும் காலம் தேவைப்படும். முகாபே ஒரு வேளை இடைக்கால அரசிடம் அதிகாரத்தை வழங்கினாலும் இதே நிலைதான். ஸ்திரத்தன்மையை உருவாக்கி, தேர்தலுக்காகத் தயாராவதற்கு இடைக்கால அரசுக் கும் போதுமான அவகாசம் தேவை. ‘தேசநல’னைக் காப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ராணுவம்தான் இனி நடக்கப்போகும் நிகழ்வுகளின் வடிவத்தையோ வேகத்தையோ தீர்மானிக்கும்.

ராணுவத்திடம் அதிகாரத்தை ஒப்படைப்பது என்பது இதுவரை மக்களுக்காகச் செயல்படாத, என்ன செய்வார்கள் என்று கணிக்கவே முடியாதவர்களின் தயவில் ஜிம்பாப்வே மக்களின் வாழ்க்கையை ஒப்படைப்பதைப் போன்றது. கணிக்க முடியாத எதிர்காலத்துக்குத்தான் ஜிம்பாப்வே மக்களை ராணுவத் தலைமை இட்டுச் செல்லும் என்பது உறுதி. ‘ஜிம்பாப்வே ஆப்பிரிக்கன் நேஷனல் யூனியன் – பேட்ரியாட்டிக் ஃப்ரண்ட்’ கட்சியை அங்கீகரிப்பதற்கும், தேர்தல் நடத்துவதற்கும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள ராணுவம் விரும்புகிறது; எனில், அது அந்தக் கட்சியின் பிரச்சினைதானே தவிர மக்களின் பிரச்சினை அல்ல.

மதிப்பளிக்குமா ராணுவம்?

நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்றால் பல கட்சிகளின் பிரதிநிதித்துவத்துடன் ஒரு இடைக்கால ஏற்பாட்டை உருவாக்குவதுதான் ஜிம்பாப்வேக்கு இருக்கும் சரியான வழி. தேர்தலுக்கு உத்தரவாதம் அளிப்பதாக ‘தெற்கு ஆப்பிரிக்க மேம்பாட்டு அமைப்’பும்(எஸ்.ஏ.டி.சி.) தெரிவித்திருக்கிறது. ஜோய்ஸ் முஜுரு, நங்காக்வா, எதிர்க்கட்சித் தலைவர் மோர்கன் ஸ்வங்கிராய், முன்னாள் உள்துறை அமைச்சர் டுமிசோ தாபேங்வா ஆகியோருக்கு இடையே கூட்டணியை ஏற்படுத்துவதும் அவசியம்.

உலகமெங்கும் உள்ள ஜிம்பாப்வே மக்கள் இதை ஒரு நிம்மதித் தருணமாகக் கொண்டாடிவரும் நிலையில், ஜிம்பாப்வேயின் எதிர்காலம் இருண்டதாகவே தெரிகிறது. ராணுவப் புரட்சிகள் என்பவை ஜனநாய கத் தீர்வுகளை அடையும் பாதையில் பின்னடைவை ஏற்படுத்துபவை. ராணுவம் தனது நிலையை உறுதி செய்துகொண்ட பிறகு, அது தன் தன் விருப்பங்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கும்; மக்களின் விருப்பங்களுக்கு அல்ல. அதிகாரத்தை மக்களுக் குத் திருப்பித் தருவதில்தான் ஜிம்பாப்வேயின் சீர்திருத்தத்துக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அத்துடன், பொதுமக்கள் ஆதரவுடன் கூடிய ஜனநாயகத்துக்கு ராணுவம் மதிப்பளிக்க வேண்டும்!

- கிளென் எம்பானி,

ஜனநாயக, அரசு நிர்வாக நிபுணர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ‘கென்னடி ஸ்கூல் ஆஃப் கவர்ன்மென்ட்’ ஆய்வாளர்

©: ‘தி நியூயார்க் டைம்ஸ்’

தமிழில்: வெ.சந்திரமோகன்


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author