Published : 08 Nov 2017 08:44 AM
Last Updated : 08 Nov 2017 08:44 AM

பணமதிப்பு நீக்கம்: எண்ணங்கள்!

தேசத்தின் கறுப்பு நாள்!

பணமதிப்பு நீக்கமும் சரக்கு மற்றும் சேவை வரியும் மோசமாகத் திட்டமிடப்பட்டு அவசரகதியில் நடைமுறைப்படுத்தப்பட்டவை. பணமதிப்பு நீக்கம் ஒருங்கிணைந்த வடிவத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டபூர்வமான கொள்ளை. இந்தியாவின் பொருளாதாரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் இது ஒரு கறுப்பு நாள். உலகின் எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் இப்படியொரு வலுக்கட்டாய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில்லை.

பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என்ற பெயரால் மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள் சீனாவுக்கு மட்டும்தான் உதவியிருக்கின்றன. அந்நாட்டின் ஏற்றுமதி மிகப்பெரிய அளவை எட்டியிருக்கிறது. பணமதிப்பு நீக்கத்தோடு சரக்கு மற்றும் சேவை வரியும் சேர்ந்துகொண்டு நாட்டிலுள்ள வணிகர்களிடையே மிக ஆழமான ‘வரி பயங்கரவாத’த் தாக்குதலை நிகழ்த்தியுள்ளன.

- மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர்.

 

சர்வாதிகாரத்தின் வெளிப்பாடு!

பணமதிப்பு நீக்கத்தால் நாட்டின் 132 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு தனிமனிதர் நாட்டின் மீது இதைத் திணித்துள்ளார். இந்த முடிவை மோடிதான் எடுத்தார் என்பது அனை வருக்கும் தெரியும். ஆனால் அரசியல் சட்டத்தின்படி அவருக்கு இந்த அதிகாரம் கிடையாது. இது முழுவதும் சர்வாதிகாரப் போக்கு. பணமதிப்பு நீக்கத்தால் கறுப்புப் பணமும் ஒழிக்கப்படவில்லை. ஊழலும் ஒழியவில்லை. மாறாக, பல கோடி மக்கள் துன்பப்பட்டனர். இன்றும் துயரத்தை எதிர்கொள்கின்றனர்!

- ப.சிதம்பரம், முன்னாள் நிதியமைச்சர்.

 

வளர்ச்சியின் வீழ்ச்சி!

பணமதிப்பு நீக்கத்தால் பொருளாதாரம் வளர்ச்சி பெறவில்லை. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 1% முதல் 2% வரை சரிந்திருக்கிறது. பணமதிப்பு நீக்கத்துக்கான யோசனையை முன்வைத்தவர்கள், இந்த நடவடிக்கை வெற்றிபெறவில்லை என்றால் என்ன செய்வது என்பது குறித்து யோசித்திருக்க வேண்டும். 99% பணம் திரும்ப வந்திருப்பதிலிருந்து, நோக்கம் நிறைவேறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது!

- ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்.

 

முதலைகள் அல்ல; சிறு மீன்கள் சாகின்றன!

மிகப்பெரிய அளவில் கறுப்புப் பணத்தைப் பதுக்குபவர்கள் அதைத் தங்களது படுக்கை களின்கீழ் வைத்திருக்கவில்லை. ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றில் முதலீடு செய்து கறுப்புப் பணத்தை மேலும் மேலும் பெருக்கிக்கொண்டிருக் கிறார்கள். அந்தப் பெரிய முதலைகள் எல்லாம் தாக்குப் பிடிக்கின்றன. ஆனால், சின்னஞ்சிறு மீன்கள் இறந்துகொண்டிருக்கின்றன. நீங்கள் சொல்லும் பிளாஸ்டிக் பணம் எத்தனை பேரிடம் இருக்கிறது?

- சீதாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்.

 

தகர்க்கப்பட்ட நம்பிக்கை

பணமதிப்பு நீக்கமானது காகிதப் பணத்தை மதிப்பிழக்கச் செய்து விட்டது, வங்கிக் கணக்குகளை மதிப்பிழக்கச் செய்துவிட்டது, நம்பிக்கையின் அடிப்படையிலான பொருளாதார அமைப்பின் அடிப்படையையே அது ஆட்டம் காண வைத்துவிட்டது. இது ஒரு எதேச்சதிகாரமான நடவடிக்கை. ஒவ்வொருவரும் மற்றவர்களின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டதுதான் கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா அடைந்த வளர்ச்சிக்கான அடிப்படை. ஆனால், இந்த எதேச்சதிகார நடவடிக்கையால், நாம் கொடுத்த உறுதிமொழிகளைப் பூர்த்திசெய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். நம்பிக்கையின் அடிப்படை தகர்க்கப்பட்டிருக்கிறது.

- அமர்த்திய சென், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x