Published : 24 Nov 2017 10:47 AM
Last Updated : 24 Nov 2017 10:47 AM

இலக்குவனார்: ஓய்வறியாத தமிழ்ப் பணியாளர்!

நெ

ல்லை இந்துக் கல்லூரி, 1940-களில் தனித் மிழ் மணம் கமழும் பூஞ்சோலையாக விளங்கியது. காரணம், அங்கு தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய சி.இலக்குவனார் (1910-1973). அப்போது அவரிடம் பயின்ற, பொதுவுடைமை இயக்கத் தலைவர் இரா.நல்லகண்ணுவும் கல்வியாளர் வேங்கடசுப்பிரமணியமும் அந்தக் காலகட்டத்தைப் பற்றிய நினைவுகளை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.

‘எஸ் சார்’ என்றும் ‘பிரசென்ட் சார்’ என்றும் கல்லூரி மாணவர்கள் ஆங்கிலத்தில் வருகைப்பதிவு கூறிவந்த நாட்கள் அவை. அவர்களை ‘உளன் ஐயா’ என்று தனித் மிழில் வருகைப்பதிவு அளிக்கச்செய்தார் சி.இலக்குவனார். ‘உள்ளேன் ஐயா’ என அது மருவி தமிழ்நாடெங்கும் பரவியது. சி.இலக்குவனார் பள்ளிப் பருவத்திலேயே தனது பெயரைத் தமிழ்ப்படுத்திக்கொண்டவர். சுயமரியாதை இயக்கத் தைச் சேர்ந்த சாமி.சிதம்பரனார் இலக்குவனாரின் பள்ளி ஆசிரியராக வாய்த்ததே காரணம். அவரது தமிழ்ப் பணிகள் அப்போதே தொடங்கிவிட்டன.

1933-ல் திருவையாறு அரசர் கல்லூரி யில் புலவர் பட்டப் படிப்புக்குப் படித்துக்கொண்டிருந்தபோது, ‘எழிலரசி’ என்ற குறுங்காவியத்தை எழுதினார். தஞ்சை யில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபோது, தொல்காப்பியர் விழா, இளங்கோவடிகள் விழா, திருவள்ளுவர் விழா, ஔவையார் விழா என்று பல்வேறு விழாக்களை நடத்தி,தமிழின் சிறப்பை மாணவர்களிடம் மட்டுமின்றி அவர்களது பெற்றோர்களிடம் எடுத்துரைத்தார்.

தான் செல்லும் இடமெங்கும் தமிழ்க் கழகம் நிறுவியும் இதழ்கள் நடத்தியும் தனித் தமிழ், திருக்குறள், தொல்காப்பியம் ஆகியவற்றின் சிறப்புகளைப் பரப்புவதுமே அவரது வாழ்நாள் பணியாக இருந்தது. நெல்லையில் ‘சங்க இலக்கியம்’, விருதுநகரில் ‘இலக்கியம்’, தஞ்சை யில் ‘திராவிடக் கூட்டரசு’, புதுக்கோட்டையிலும் மதுரையிலும் ‘குறள்நெறி’ என்று சோர்வின்றி இதழ்களை நடத்திவந்தார்.

1959-ல் தமிழ்த் துறையில் பழைய பி.ஏ. ஹானர்ஸ் பட்டப் படிப்புக்குப் பதிலாக எம்.ஏ. பட்டப் படிப்பு அறிமுகமானது. அதன்படி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் தமிழில் முதுகலைப் பட்டப் படிப்பு தொடங்கப்பட வேண்டும் என்று அண்ணாமலை அரசர் முத்தையா செட்டியாரிடம் வேண்டுகோள் வைத்து வெற்றியும் பெற்றவர் சி.இலக்குவனார்.

ஆய்வரங்குகளில், மக்கள் மன்றங்களில், கல்விக் கூடங்களில் என வாய்ப்புக் கிட்டும் இடங்களில் எல்லாம் தமிழின் சிறப்புகளை எடுத்துரைக்கவும் தமிழுக்கு இழைக்கப்படும் தீங்குகளைக் கண்டிக்கவும் செய்தவர் சி.இலக்குவனார். அவருடைய இந்தப் பண்புகளே எந்த இடத்திலும் நிலையாகப் பணிபுரிய இயலாத சூழலை ஏற்படுத்தின. காலமெல்லாம் ஊர்விட்டு ஊர் பெயர்வதே அவர் வாழ்வாகிப்போனது.

1968-ல் அவர் விரும்பிய, அவரையும் விரும்பிய திராவிட இயக்கம் தமிழகத் தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்துக்குத் தனது 55-வது வயதில் பணிபுரியச் செல்ல வேண்டியிருந்தது என்பது வரலாற்றின் நகைமுரண். முதுமையின் காரணமாக அந்தப் பணியிலும் அவர் தொடரவில்லை. இரண்டாண்டுகளுக்குப் பிறகு தமிழகம் திரும்பிவந்துவிட்டார்.

1970-வரை, நாகர்கோவில் தெ.தி.இந்துக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். ஆசிரியப் பணிக்கு ஓய்வுண்டு. தமிழ்ப் பணிக்கு? மீண்டும் ‘குறள்நெறி’ இதழை நடத்த ஆரம்பித்தார்.

- மறைமலை இலக்குவனார், ஓய்வுபெற்ற பேராசிரியர், இலக்குவனாரின் மகன்.

தொடர்புக்கு: ilakkuvanarm6@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x