Last Updated : 24 Nov, 2017 10:49 AM

 

Published : 24 Nov 2017 10:49 AM
Last Updated : 24 Nov 2017 10:49 AM

ஒரு நிமிடக் கட்டுரை: தமிழ் சினிமாவைக் கொல்லும் நாயகர்கள் திருந்த வேண்டும்!

மிழ் சினிமாவில் கந்துவட்டி ஒழிய வேண்டுமானால், முதலில் ‘கதாநாயக /அதி நாயக / தடிநாயக சினிமாக்கள்’ ஒழிய வேண்டும்!

சினிமாவைச் சூதாட்டம் ஆக்கிக்கொண்டிருப்பதில் அவர்களுக்குப் பங்கிருக்கிறது இல்லையா? இரண்டு படம் ஜெயித்துவிட்டால், சம்பளத்தை 100%, 200% ஆக நாயகர்கள் உயர்த்திக்கொள்கிறார்களே, அந்த மாயாஜாலத்தை நிறுத்த வேண்டும். தமிழ் சினிமாவின் அதிநாயகர்கள் சம்பளத்தை வியாபாரத்தின் சதவீதமாக வாங்குவது ஒழிய வேண்டும். தோராயமாக 70% வாங்குகிறார்களாமே!

நிறுத்துவார்களா?

தயாரிப்பாளர் பதவியையும் மறைமுகமாக அதிநாயக நடிகர்கள் தமதாக்கிக்கொண்டது ஒழிய வேண்டும். தங்களுடைய மேலாளர்களைத் தயாரிப்பாளர்களாக உருமாற்றும் மந்திரஜாலத்தை நிறுத்த வேண்டும். ‘ஃபர்ஸ்ட் காப்பி புரொடக்ஷன்’ என்ற பெயரில் உண்மையான தயாரிப்பு நிறுவனங்களின் பெயரை மட்டும் பயன்படுத்திக்கொண்டு, உண்மையான தயாரிப்பாளர்கள் காணாமல் அடிக்கப்படும் அயோக்கியத்தனம் நிறுத்தப்பட வேண்டும்.

நிறுத்துவார்களா?

தயாரிப்பாளர் கொஞ்சம் நயமானவராகச் சிக்கிவிட்டால், தன் மனம் போன போக்கில், படத்தின் திரைக்கதையை வளைத்து, ஷூட்டிங் ஸ்பாட்டில் உட்கார்ந்துகொண்டு படத்தைத் தன் போக்குக்கு ஏற்ப இழுத்து, தயாரிப்புச் செலவை ஒன்றுக்கு இரண்டாக்கி அந்தத் தயாரிப்பு நிறுவனத்தையே போண்டி ஆக்கும் இயக்குநர்கள், நடிக - இயக்குநர் கள் திருந்த வேண்டும்.

நிறுத்துவார்களா?

உண்மையான தயாரிப்பாளர்களை இல்லாமல் ஆக்கி, விநியோகஸ்தர் என்ற வலைப்பின்னலையும் அழியவிட்டு, நேரடி யாக எக்ஸிபிட்டர்களோடு இண்டஸ்ட்ரி கொண்ட உறவின் வெளிப்பாடுகளில் ஓங்கி வளர்ந்ததுதானே அன்புச்செழியன் வகையறா? திரைத்துறைக் கந்துவட்டிக்காரர்கள் ஒழிய வேண்டுமானால், நீங்கள் உங்கள் திரைத் துறையை முதலில் சரிசெய்யுங்கள்.

சினிமாவை நடிகன் எனும் ஒற்றை மையத்தை இட்டு இயங்கும்படிக்கு மற்ற எல்லா அங்கங்களையும் ஊனப்படுத்தி ‘கந்துவட்டிக்காரர்கள்’ கையில் பிடித்துக் கொடுத்தது யார்? அதற்கான முதல் பொறுப்பாளிகள் அதிநாயக நடிகர்கள்! தமிழ் சினிமாவை முதலில் நாயகர்களிடமிருந்து தான் மீட்டுக் காக்க வேண்டும்!

- வி.எம்.எஸ். சுபகுணராஜன்,

காட்சிப்பிழை இதழின் ஆசிரியர்

தொடர்புக்கு: subagunarajan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x