Published : 08 Jul 2014 00:00 am

Updated : 08 Jul 2014 11:02 am

 

Published : 08 Jul 2014 12:00 AM
Last Updated : 08 Jul 2014 11:02 AM

பாலியல் கல்வி வேண்டுமா, வேண்டாமா?

பள்ளிகளில் பாலியல் கல்வி தொடர்பாக விவாதங்கள் எழுந்திருக்கின்றன. இரண்டு அனுமானங்களின் அடிப்படையில் இந்த விவாதங்கள் நடக்கின்றன: 1. ஏற்கெனவே பள்ளிகளில் பாலியல் கல்வி போதிக்கப்பட்டுவருகிறது - இது தடைசெய்யப்பட வேண்டும் அல்லது தொடரப்பட வேண்டும். 2. பாலியல் கல்வி இருக்கிறதா, இல்லையா என்பது தெரியாது - ஆனால், அது தேவை (அல்லது) தேவையில்லை என்ற விவாதம்.

உண்மை என்னவென்றால், பள்ளிகளில் ஒருபோதும் பாலியல் கல்வித்திட்டம் இருந்ததில்லை.

உலகமெங்கும் எச்.ஜ.வி/எய்ட்ஸ் தொடர்பான பிரச்சினைகள் வெளிச்சத்துக்கு வந்தபோது, பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை, கவனம் என்று ஒருபுறம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டபோது, மறுபுறம் இனி புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படாமல் இருக்க என்ன செய்வது என்பது விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, இளைஞர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் தடுக்க அவர் களுக்குத் தற்காப்புக் கல்வியறிவு அவசியம் என்ற அணுகுமுறையில் பள்ளிகளில் அறிமுகப் படுத்தப்பட்டதுதான் ‘எய்ட்ஸ் கல்வித் திட்டம்.’

ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியிலுமிருந்து இரு ஆசிரியர்கள், இரு முன்மாதிரி கல்வியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்கள் பள்ளிகளில் சென்று இந்தக் கல்வியை 9-ம் வகுப்புக்கு மேற்பட்டவர்களுக்குக் கொண்டுசெல்ல உதவும்படியான பயிலரங்கக் கையேடுகளும் வடிவமைக்கப்பட்டன.

தன் சுத்தத்தில் தொடங்கி, ஆண்கள், பெண்களின் உடல் வளர்ச்சி, மாதவிடாய் சுகாதாரம் வளரிளம் பருவத்தில் மனதில் எழக்கூடிய எண்ண அலைகள், அவற்றைக் கையாளத் தெரியாவிட்டால் வரக்கூடிய உடல்நலப் பாதிப்புகள் (பால்வினை நோய்கள், எச்.ஜ.வி./எய்ட்ஸ்), உணர்வுகளைக் கையாள் வதற்குத் தேவையான வாழ்க்கைத் திறன்கள் (உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ள 10 திறன்கள்) - இதுதான் இத்திட்டத்தின் சாராம்சம்.

பிறகு, ஆசிரியர்கள் மத்தியில் “ ‘எய்ட்ஸ் டீச்சர்’ என்று சொல்கிறார்கள்”, “ ‘எய்ட்ஸ் பற்றி ஏன் சொல்ல வேண்டும்?’ என்று சில பெற்றோர்கள் கேட்கிறார்கள்” என்ற விதமான கருத்துகள் வந்தவுடன், இத்திட்டம் ‘பள்ளிகளில் வளரிளம் பருவத்தினருக்கான கல்வியறிவுத் திட்டம்’ எனப் பெயர் மாற்றப்பட்டது. இன்று ‘வாழ்வியல் திறன் பயிற்சித் திட்டம்’ என்ற அணுகுமுறையில் செயல்படுகிறது.

செக்ஸைச் சொல்லிக்கொடுப்பதில்லை. ஆக, பள்ளிகளில் பாலியல் கல்வி, செக்ஸ் கல்வி என்ற வார்த்தைப் பிரயோகங்களெல்லாம் திட்டத்தில் சம்பந்தப்படாதவர்களாலும், திட்டம் பற்றித் தெரியாதவர்களாலும் மட்டுமே பயன்படுத்தப் படுகின்றன. ஏனென்றால், திட்டத்தை நன்கு அறிந்த நாங்கள் ‘செக்ஸ் கல்வி’ என்ற வார்த்தையைத் தூக்கத்திலும்கூடச் சொல்லவே மாட்டோம். ஏனென் றால், எங்களின் நோக்கம் பள்ளிகளில் ‘செக்ஸை’ சொல்லிக்கொடுப்பது அல்ல.

வளரிளம் பருவத்தில் மனதில் ஏராளமான சந்தேகங்கள் வருகின்றன. இவற்றைச் சரியாகக் கையாளத் தெரியாதபோதுதான் அவர்கள் பல சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறார்கள். இளம் பருவத்தினருக்கு இவற்றைப் பற்றியெல்லாம் சொல்லித்தர வேண்டிய சமூகச் சூழலில்தான் நாம் இன்று இருக்கிறோம்.

இன்றைக்கு இளம் பருவத்தினர் வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது? இரண்டு வயதுக் குழந்தைக்குச் சோறூட்ட தொலைக்காட்சி தேவைப் படுகிறது. ஆனால், அதே குழந்தை வளர்ந்து 15, 16 வயதில் இருக்கும்போது, ‘தொலைக்காட்சி பார்த்தால் படிப்பு கெட்டுப்போகிறது; கெட்ட விஷயங்களில் மனம் போகிறது’ என்று தடை விதிக்கப்படுகிறது. அவர்களுக்குத் தொலைக்காட்சி பார்க்கும் பழக்கத்தை உருவாக்கியது யார்? குழந்தைகளோடு கதை பேசி, ஆடிப் பாடிச் சோறூட்ட நமக்கு நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை.

உணர்வுகளைக் கையாளுதல்

எத்தனையோ பயிலரங்குகளில் தலைமை ஆசிரியர்கள் உட்பட ஆசிரியர்கள், மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்கள் போன்றோரிடம் நான் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறேன்: “உங்களுடன் யாரும் இல்லாமல், நீங்கள் மட்டுமே தனியாகத் தொலைக்

காட்சி பார்க்கும்போது, ஒரு நெருக்கமான காதல் காட்சி வருகிறது என்று வைத்துக்கொள்வோம். உங்களில் எத்தனை பேர் அந்தக் காட்சியைத் தொடர்ந்து பார்ப்பீர்கள், எத்தனை பேர் அலை வரிசையை மாற்றுவீர்கள்?” 90 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள், யாரும் இல்லை என்றால் தொடர்ந்து பார்ப்போம் என்றிருக்கிறார்கள். ஆக, திருமணமாகி, ஆண், பெண் உறவு என்றால் என்ன என்று தெரிந்த நமக்கே ஆர்வம் இருக்கும் என்றால், இளைஞர்களின் நிலையும், வளரிளம் பருவத்தினரின் நிலையும் என்னவாக இருக்கும்?

இளைஞர்கள் தங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நாம் நினைக்கிறோம்; சொல்கிறோம். உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் போது, ஒரு கட்டத்தில் காற்றடைக்கப்படும் பலூன் அழுத்தம் தாங்காமல் வெடிப்பதுபோல், வெடிக் கக்கூடிய ஆபத்து இருக்கிறது. உணர்வுகளைக் கையாளத் தெரிய வேண்டும். துக்கம், வருத்தம், மகிழ்ச்சி, பாலியல் உணர்வுகள் போன்ற எந்த உணர்வையும் எப்போது கையாள முடியும்? அவற்றைப் பற்றிய அடிப்படைத் தெளிவு இருக்கும் போதுதான் கையாள முடியும்.

இன்றைக்கும் நம்மில் பலர் இவையெல்லாம் பேசக் கூடாத விஷயங்கள் என்று இறுக்கமாக வாயை மூடிக்கொள்கிறார்கள். கேட்டால் கலாச்சாரம் என்கிறார்கள். அப்படியென்றால், எச்.ஜ.வி./ எய்ட்ஸ் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் உலகிலேயே 3-ம் இடத்தில் இந்தியா இருப்பது ஏன்?

- மா. பத்மாவதி, சமூகச் செயற்பாட்டாளர்


பள்ளிகள்பாலியல் கல்விபள்ளிக் கல்விஎச்.ஜ.வி/எய்ட்ஸ்இளைஞர்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author