Published : 02 Oct 2017 06:55 am

Updated : 02 Oct 2017 06:55 am

 

Published : 02 Oct 2017 06:55 AM
Last Updated : 02 Oct 2017 06:55 AM

மத அடிப்படைவாதக் காலத்தில் காந்தி

அப்போது விடுதலைத் திருநாளாகக் கொண்டாடப்பட்ட 1946-ம் ஆண்டு ஜனவரி 26 அன்று காங்கிரஸ் சார்பாக காந்தி ஓர் உறுதிமொழியை முன்மொழிந்தார். காந்தியுடன் நெருக்கமாக இருந்த தீவிர நாத்திகரான கோரா எனும் கோபராஜூ ராமச்சந்திர ராவ் அதிலுள்ள கடவுளைப் பற்றிய குறிப்பை அகற்ற வேண்டும் என்று கோரினார். கோரா விரும்பினால் ஏதோ ஒரு சக்தி என்று அதை மாற்றிகொள்ளலாம் என்று காந்தி செய்தி அனுப்புகிறார். கோரா தனது நூலில் இது குறித்து எழுதுகிறார்: “உறுதிமொழியை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக-கடவுள் எனும் நிலையிலிருந்து ஏதோ ஒரு சக்தி, அதைக் கடவுள் என்றும் அழைக்கலாம் இல்லையென்றும் சொல்லலாம் எனும் புள்ளியை நோக்கி அவர் நகர்ந்துள்ளார். என்னைப் பொறுத்தவரை -கடவுள் கோட்பாடு அவருக்கு முக்கியமில்லை, மாறாக எத்தனை தூரம் கடவுள் நம்பிக்கையோ நாத்திகமோ பொதுநலனில் பங்காற்றுகிறது என்பதே அவருக்கு முக்கியமாகும்.” (காந்தியுடன் ஒரு நாத்திகன் – கோரா)

அமெரிக்க மெய்யியலாளர் க்வாமி அந்தோணி அப்பையா சென்ற ஆண்டு ‘பிழையான அடையாளங்கள்’ எனும் தலைப்பில் ஆற்றிய ரெய்த் உரைத்தொடரில் முதல் உரையின் பேசுபொருள் மதம். மதம் நம்பிக்கைகளின் பாற்பட்டது என்பதே நமது பொதுப்புரிதல். அப்பையா இந்தப் புரிதலைக் கேள்விக்குட்படுத்துகிறார். “ஒவ்வொரு மதத்திலும் மூன்று பரிமாணங்கள் உள்ளன. நாம் செய்வது, அதாவது சடங்கு-செயல்கள்-நடைமுறை போன்றவை; அடுத்து, யாருடன் செய்கிறோம் – சமூகம் அல்லது குழு, மூன்றாவதாக நம்பிக்கைகள். இம்முன்றிலும் நமக்கு மிக முக்கியமான சிக்கல் என்பது செயல்பாடுகளுக்கும் குழுவுக்கும் அளிக்காத முக்கியத்துவத்தை அதீதமாக நம்பிக்கைக்கு நாமளிப்பதே” என்கிறார் அப்பையா. மதம் அளிக்கும் ஆன்மிக அனுபவத்துக்கு நாம் இணைந்து நிகழ்த்தும் சடங்குகள் முக்கியமான காரணம் என்கிறார்.

நம்பிக்கைகள் அன்றாட வாழ்வை வழிநடத்துகின்றன என்பது நமது பொதுப் பார்வை. அப்பையாவோ நமது நடத்தை மாற்றமும் நம்பிக்கைகளின்மீது தாக்கம் செலுத்துகின்றன என்கிறார். விளைவாக “மறைநூல்களின் வரிகளுக்கு நவீன விளக்கங்கள் உதிக்கின்றன. ஒருவேளை அவை காலத்துக்கேற்பத் தகவமைத்துக்கொள்ளவில்லையெனில் வழக்கொழிந்துபோகின்றன... மறைநூல்கள் காலந்தோறும் புதிய முறையில் விளக்கமும் மறு விளக்கமும் அளிக்கப்படவில்லையென்றால் இத்தனை நூற்றாண்டுகளாக அவற்றால் மக்களை வழிநடத்தியிருக்க இயலாது. அவற்றின் திறந்த தன்மை என்பது இடையில் தொற்றிக்கொண்ட ஒரு கோளாறு அல்ல, மாறாக அதன் முக்கியமான அம்சம்” என்கிறார் அப்பையா.

மறைவிளக்கத்தைவிட பகுத்தறிவே…

காந்தி தீண்டாமையை எதிர்கொண்ட விதத்தை எடுத்துகொண்டால், முதலில் அதற்கு மத நூல்களில் சான்று இருக்கிறதா என்று கேட்கிறார். சனாதனிகளின் எதிர்ப்பைச் சந்திக்கிறார். காந்தி ஒரு எல்லையில் மத நூல்களில் சொல்லப்பட்டவை அனைத்தையும் அப்படியே ஏற்றுகொள்ள வேண்டியதில்லை என்கிறார். அவற்றைத் தனது அனுபவ வட்டத்துக்குள் கொண்டுவந்து , பகுத்தறிவைப் பிரயோகித்து உள்வாங்கிக்கொள்வதாகவே அவருடைய வழிமுறை எப்போதும் இருந்தது. பழமையானது என்பதற்காகத் தவறான எதையும் கடைப்பிடிக்க கூடாது என்பதில் அவர் திட்டவட்டமாக இருந்தார். “கீதை உட்பட எந்த ஒரு திருமறையையும்விட உயர்வானதாக எனது மதிப்பீட்டைப் பயன்படுத்துகிறேன். எனது பகுத்தறிவைவிட எந்தவொரு மறை விளக்கமும் மேலோங்கியிருக்க நான் அனுமதிக்க மாட்டேன்” என்று டிசம்பர் 1936-ல் எழுதினார் காந்தி. கடந்த நூற்றாண்டின் வெவ்வேறு சீர்திருத்தவாதிகளைப் போல் காந்தியும் தன் பங்குக்கு மறுவரையறை செய்ய முயன்றிருக்கிறார்.

போருக்குச் சுணங்கும் அர்ஜுனனை ஊக்குவிக்கும் பகவத் கீதையைச் செயலின்மைக்கும் செயலுக்குமான முரணாக, தனது அகிம்சைக் கோட்பாட்டுக்கான அடித்தளமாக அவரால் மாற்ற முடிந்தது. பிறப்பின் அடிப்படையில் நால் வருணப் பகுப்பை வலியுறுத்தும் இதே மதத்தில்தான் வசுதைவ குடும்பகம் (உலகமே ஓர் குடும்பம்) எனும் அறைகூவலும் இருக்கிறது. ஆகவே, நாம் எதைத் தேர்வு செய்கிறோம் என்பதே முக்கியமாகிறது. இஸ்லாமிய தேசமாக அறிவித்துக்கொண்ட பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் பெண் பிரதமர்கள் உண்டு. தாராளவாத மக்களாட்சி அளிக்கும் தேசமாகத் தன்னைப் பறைசாற்றிக்கொள்ளும் அமெரிக்காவில் இதுவரை ஒரு பெண் அதிபர்கூட இல்லை எனும் முரண்பாட்டைச் சுட்டிக் காட்டுகிறார் அப்பையா.

நவீன உலகுக்கான எதிர்வினை

“புனித மறைநூல்களை மையமாகக் கருதுபவர்களில் முக்கியமான தரப்பினர் அடிப்படைவாதிகள், அவர்கள் பரந்துபட்ட மத மரபுகளை அவர்களுக்கு உகந்த ஒற்றைப்படைத்தன்மையை நோக்கி அனைவரையும் வலுக்கட்டாயமாக இழுத்து வருகிறார்கள். கிறித்தவம், பவுத்தம், இந்து, யூதம், இஸ்லாம் என எந்த மதமாக இருந்தாலும் ‘ஓர் உண்மைப் பாதையை’ பாதுகாப்பதிலும் பிரச்சாரம் செய்வதிலும் முழு வீச்சாக முனைகிறார்கள்.

இதுவே முதன்முதலாகத் தோன்றிய பாதை, தூய பாதை என கற்பனை செய்துகொள்கிறார்கள். மதங்களுக்கு அப்பால், அடிப்படைவாதிகளின் மற்றொரு பொதுக் குணம் என்பது அவர்கள் பழமையைக் கொண்டாடினாலும், அவர்கள் மிக சமீபத்தில், நவீன உலகுக்கு எதிர்வினையாக உருவாகிவந்தவர்கள். அடிப்படைவாதத்தின் முக்கியமான முரண்பாடு என்னவென்றால், வெவ்வேறு விளக்கங்களையும் சாத்தியங்களையும் ஒரு பக்கம் மறுதலித்தாலும் அந்த சாத்தியத்தைக் கொண்டே அதுவும் காலூன்ற இயலும்” என்கிறார் அப்பையா.

அடிப்படைவாதம் என்பது நவீன உலகுக்கு எதிர்வினையாக உருவானது எனும் அப்பையாவின் பார்வை மிக முக்கியமான ஒன்று. காலனியம், ஏகாதிபத்தியம், தொழில்மயமாதல் ஆகியவற்றுடன் சேர்த்தே அடிப்படைவாதத்தின், தூய்மைவாதத்தின் எழுச்சியையும் புரிந்துகொள்ள வேண்டும். அடிப்படைவாதங்களுக்கு எதிரான வலுவான தரப்பு அந்தந்த மதங்களின் உள்ளிருந்தே எழ வேண்டியது காலத்தின் கட்டாயம். ‘இதுவல்ல எங்கள் மதம்’ என உரக்க சொல்ல வேண்டும். அடிப்படைவாதத்துக்கு உகந்த வகையில் புனித மறை நூல்களைப் பொருள் கொள்ளச் செய்ய முடியும் எனில் அதற்கு மாற்றாக மானுட நேயத்துக்குச் சார்பாகவும் சர்வ நிச்சயமாகப் புனித நூல்களை விளக்கிக்கொள்ள முடியும். “மரபு, நாம் புதிய திசை நோக்கிச் செல்லும் வகையிலான விளக்கங்களை ஒருபோதும் முற்றிலும் மறுக்காது” என்கிறார் அப்பையா. அப்பையா மதத்தையோ பிற அடையாளங்களையோ நிராகரிக்கவில்லை. அவற்றை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்கிறார்.

மதத்துக்கான மறுவரையறை

காந்தியும் அப்பையாவும் வெவ்வேறு நூற்றாண்டுகளில் புழங்குபவர்கள். ஆனால், இருவருமே அடையாளங்கள் நம்மைச் சிறைப்படுத்துபவை அல்ல என்பதில் தெளிவாக இருந்தார்கள். “நம்மிடம் எப்போதும் வாய்ப்புகள் உள்ளன, நமது அடையாளங்கள் நம் தலைவிதி அல்ல, அவற்றைக் கொண்டு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்... நமது புரிதலுக்கு ஏற்ப நமது அடையாளங்களின் ஆபத்தான அம்சங்களிலிருந்து சுதந்திரமாக விலகிச் செல்ல முடியும்” என்கிறார் அப்பையா. “நடைமுறைச் சிக்கல்களைக் கணக்கில் கொள்ளாத, அவற்றுக்குத் தீர்வளிக்காத மதம் என்பது மதமே அல்ல” என்கிறார் காந்தி. இறுதி வரை தனது மதத்தை ஆக்கபூர்வமாக மறுவரையறை செய்ய முயன்றார் காந்தி. இந்து மதம் என்பதே ‘அகிம்சை வழியில் சத்தியத்துக்கான தேடல்’ என்றார். அனைத்து மதங்களும் சாரத்தில் ஒன்றே என நம்பினார். மத அடிப்படைவாதத்துக்கு எதிரான வலுவான குரல் வெளியிலிருந்து அல்ல சக மனிதர்களின்மீது அன்பும் நம்பிக்கையும் கொண்ட சாமனியரிடமிருந்தே வர முடியும். அவர்களே அடிப்படைவாதத்துக்கு எதிரான மிகப் பெரும் விசை என்பதை காந்தி நம் முன் நிறுவிவிட்டுச் சென்றிருக்கிறார். அடையாளங்களைத் துறக்காமலும், வலிந்து சுய இழிவைச் சூடிகொள்ளாமலும், தன்னிலிருந்து பிரித்து ‘பிறர்’ என்ற ஒரு தரப்பை உருவகிக்காமலும் வாழ முடியுமா எனும் சவாலுக்கு நம் முன் காந்தியே நிகரற்ற விடையாக நிற்கிறார்.

-சுனில் கிருஷ்ணன், ஆயுர்வேத மருத்துவர்,

‘காந்தி இன்று’ இணையதளத்தின் ஆசிரியர்.

தொடர்புக்கு: drsuneelkrishnan@gmail.com

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author