Published : 16 Oct 2017 11:12 AM
Last Updated : 16 Oct 2017 11:12 AM

திராவிட இயக்கத்தின் மூன்று முக்கியத் தருணங்களைக் கொண்டாடத் தயாராகுங்கள்!

திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு, அடுத்து, திராவிடக் கட்சிகளின் அரை நூற்றாண்டு ஆட்சி நிறைவு, தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர் மு.கருணாநிதியின் அறுபதாண்டு சட்ட மன்றப் பணி நிறைவு இந்த மூன்று நிகழ்வுகளும் தமிழ்நாட்டைத் தாண்டியும் இந்தியா முழுமைக்கும் முக்கியமானவை. ஆனால், இந்தியாவின் தேசிய ஊடகங்கள் வழக்கம்போல இதற்கும் பெரிய கவனம் அளிக்காமலேயே கடந்து போயின. ‘தி இந்து’ தமிழ் நாளிதழால் அப்படிக் கடந்து போக முடியவில்லை.

‘எல்லா நிறை - குறைகளைக் கடந்தும், இந்த மண்ணில் மகத்தான ஒரு பணியை, குறிப்பாக சமூக நீதி தளத்தில் பெரிய காரியங்களை நிறைவேற்றியிருக்கும் திராவிட இயக்கத்தின் இந்த முப்பெரும் தருணத்தை ஏன் நாம் கொண்டாடக் கூடாது?’ இந்தக் கேள்வியை நாங்கள் கேட்டுக்கொண்டோம். அதற்கான பதிலே ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்!’

நவீன இந்தியாவின் முக்கியமான அரசியல் இயக்கங்களில் ஒன்றான திராவிட இயக்கம் கடந்த நூறாண்டுகளில் தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களை இன்றைய தலைமுறையினருக்குக் கடத்தும் வகையில் தயாராகியிருக்கும் நூல் இது. 1916-ல் நீதிக் கட்சியை நிறுவிய முன்னோடிகளில் தொடங்கி இன்று வரை திராவிட இயக்கம் கடந்து வந்திருக்கும் பாதையையும், கூடவே நாட்டிலேயே வளர்ச்சியில் முன்னிற்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகத்தை அது வளர்த்தெடுத்த வரலாற்றையும் இந்நூல் சொல்லவிருக்கிறது.

சர்வதேச அளவிலான அறிவாளுமைகள் அமர்த்திய சென், ழீன் தெரெசே, இஸ்ரேலிய அறிஞர் டேவிட் ஷுல்மன் ஆகியோரில் தொடங்கி யோகேந்திர யாதவ், பிரேர்ணா சிங், பால் சக்காரியா வரை பலரின் படைப்புகள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. திராவிட இயக்கம், குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி தேசிய அளவில் எத்தகைய மாற்றங்களையெல்லாம் முன்னெடுத்தார் என்று முன்னாள் பிரதமர் தேவ கௌடா உள்பட பலர் பேசியிருக்கின்றனர்.

ஒரு அரசியல் தலைவராக, எழுத்தாளராக, சினிமா கலைஞராக என்று கருணாநிதியின் பங்களிப்புகளைத் தனித்தனியே மதிப்பிடும் இந்நூலில், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கருணாநிதி எப்படியிருந்தார் என்பதை அவருடைய மகன் மு.க.ஸ்டாலின், மகள் கனிமொழி; கருணாநிதியின் செயலர்கள் ராஜமாணிக்கம், சண்முகநாதன் ஆகியோர் பேசியிருக்கின்றனர்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழைப் படைக்கும் ‘கேஎஸ்எல் மீடியா’வின் ‘தமிழ் திசைப் பதிப்பகம்’ பதிப்பித்திருக்கும் இந்நூல் அடுத்த வாரம் வெளிவரவிருக்கும் நிலையில், ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்கங்களிலும் நூலிலிருந்து குறிப்பிடத்தக்க சில பகுதிகள் அன்றாடம் வெளியாகவிருக்கின்றன. ஒரு நூற்றாண்டின் மீதான இந்த வரலாற்றுப் பயணம் விரைவில் தொடங்கவிருக்கிறது!

- ஆசிரியர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x