

உலகமே மாயை, அதிலிருந்து விடைபெற்று வீடுபேறு அடைதலே வாழ்க்கையின் லட்சியம் எனும் மாயாவாதம் தூக்கிப்பிடிக்கப்பட்ட காலத்திலேயே பூவுலகம் சத்தியமானது, மனித வாழ்க்கை நிதர்சனமானது என்றவர் புத்தர்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்த வரலாற்று மனிதர் ஆற்றிய 84 ஆயிரம் சொற்பொழிவுகளின் சாரமே பௌத்தத் தத்துவம்.
சமயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் பெளத்தம் உள்ளபடி ஒரு சிந்தனா முறை. சிந்தையே செயலாகப் பிரதிபலிப்பதால் அது ஒரு வாழ்க்கை முறையாகப் பரிணமிக்கிறது.
வாழ்க்கை எனும் நெடும் பயணத்தில் தேர்ந்தெடுக்க வேண்டிய பாதையை, அதில் எடுத்து வைக்க வேண்டிய அடிகளை போதி மரத்தடியில் ஞானம் பெற்ற பெருங்கருணையாளர் புத்தர் போதித்தார்.