

எழுத்தாளர் இரா.முருகன் 74 வயதில் நம்மைத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு மறைந்துவிட்டார். என் காலத்தில், கிட்டத்தட்ட என் வயதில், என்னைப் போல் வங்கியில் வேலை செய்துகொண்டே, கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, கணினித் தமிழ், சினிமா வசனம் என்று எழுத்துப் பரிசோதனைகளைச் செய்து பார்த்த ஓர் எழுத்தாளரின் பேனாவை மரணம் பறித்துக்கொண்டது.
அவர் எழுதாமல் விட்ட வார்த்தைகள் பிணந்தின்னிக் கழுகுகளைப் போல், சக எழுத்தாளன் என்ற வகையில் என்னைச் சுற்றிப்பறந்து கொண்டிருக்கின்றன. நான் இந்தியன் வங்கி. அவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. இதனால் எங்களுக்குள் நெருக்கமான இலக்கியத் தோழமை இருந்தது.
சென்ற ஆண்டு புத்தகக் காட்சியில் இரா.முருகன் தன் துணைவியாரை இழந்த மன வருத்தத்தில், பார்க்கின்சன் நோயினால் பாதிக்கப்பட்ட தளர்ந்த நிலையிலும் என் யாளி பதிவு வெளியீடு அரங்குக்கு வந்தபோது நான் பதறிவிட்டேன். அவரை அணைத்தபோது அவர் உடம்பு அதிர்ந்தபடி இருந்ததை உணர்ந்தேன்.
1977இல் கணையாழியில் வெளியான கவிதை மூலம் இலக்கிய உலகில் நுழைந்த இரா.முருகன், கொஞ்சம் கொஞ்சமாக சிறுகதை, நாவல், கட்டுரை, கணினித் தமிழ், மொழிபெயர்ப்பு என்று 34 நூல்கள் எழுதி, கமல்ஹாசனின் ‘உன்னைப் போல் ஒருவன்’, அஜித் நடித்த ‘பில்லா 2’ ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் அளவுக்குச் சுறுசுறுப்பாக இயங்கினார்.