

‘தொடுகை’ நாவலில் காட்டப்படும் குடும்பத்தில் எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனால், ஏதோ ஒன்று சரியாக இல்லை. நாவலாசிரியர், இந்நாவலில் நல்ல உறவுகளை, நல்ல குழந்தைகளை, நல்ல கிராமத்தைப் படைத்திருக்கிறார். ஆனால் ‘கரணம் தப்பினாலும் மரணம்’ என்கிற வகையில், ஏதேதோ ஆபத்துகள் அவர்களைத் துரத்திக் கொண்டேயிருக்கின்றன.
அதற்குப் பெயர் விதியா? அப்படிச் சொல்லிவிட முடியாது. “மகிழ்ச்சியான குடும்பங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கின்றன; மகிழ்ச்சியற்ற குடும்பம் ஒவ்வொன்றும் வெவ்வேறு மாதிரியாக இருக்கின்றது” என்றார் டால்ஸ்டாய். அன்பில் சிறு பிசகு ஏற்பட்டாலும் எல்லாமே தலைகீழாகி விடக்கூடிய சாத்தியம் அதிகம்; எல்லாமே மனிதர்கள் வசம்தான் இருக்கிறது என்பதையும் இந்நாவல் பேசத் தவறவில்லை.