கோப்புப் படம்
புதுடெல்லி: ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1954-ம் ஆண்டில் மத்திய அரசு சார்பில் சாகித்ய அகாடமி நிறுவப்பட்டது. இந்த அமைப்பு சார்பில் இந்தியாவின் அதிகாரப்பூர்வமான 24 மொழிகளில் சிறந்த கவிதை, நாவல், சிறுகதை, இலக்கிய ஆய்வுகளுக்கு ஆண்டுதோறும் சாகித்யஅகாடமி விருது வழங்கப்படுகிறது. இது, இலக்கியத்துக்கான உயரிய விருதாக திகழ்கிறது.
இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.இதில், ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டு கவிதை தொகுப்புகள், 4 நாவல்கள், 6 சிறுகதைகள், 2 கட்டுரைகள், 2 நினைவுக் குறிப்புகள், ஒரு இலக்கிய விமர்சனம், ஒரு சுயசரிதை ஆகியவை சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளன.
குறிப்பாக, தெலுங்கு எழுத்தாளர் நந்தினி சித்தா ரெட்டி, மலையாள எழுத்தாளர் பிரபாகரன், கன்னட எழுத்தாளர் அமரேஷ் நுகடோனி, இந்தி எழுத்தாளர் மம்தா காலியா உட்பட மொத்தம் 24 பேர் சாகித்ய அகாடமி விருதை வென்றுள்ளனர். அவர்களுக்கு செப்பு பட்டயம், பொன்னாடை, ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு ஆகியவை வழங்கப்பட உள்ளன.
கல்லூரி காலத்தில் இருந்தே.. கடந்த 1954-ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் சண்முகம், சரஸ்வதி தம்பதிக்கு மகனாக தமிழ்ச் செல்வன் பிறந்தார். விருதுநகர் மாவட்டம் நென்மேனி மேட்டுப்பட்டியில் பள்ளிப்படிப்பையும், கோவில்பட்டியில் கல்லூரி படிப்பையும் நிறைவு செய்தார். அஞ்சல் துறை மற்றும் ராணுவத்தில் பணியாற்றிய அவர், கல்லூரி காலத்தில் இருந்தே எழுதி வருகிறார்.
இவரது முதல் கவிதையான ‘ஒரு நாள் டைரி’ கடந்த 1972-ம் ஆண்டில் வெளியானது. இவரது ‘வெயிலோடு போய்’ எனும் சிறுகதை, தமிழில் வெளிவந்த சிறுகதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்த கதையை அடிப்படையாகக் கொண்டு ‘பூ’ என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்துக்காக தமிழக அரசு கடந்த 2008-ம் ஆண்டுக்கான சிறந்த கதாசிரியர் விருதை தமிழ்ச்செல்வனுக்கு வழங்கியது. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் ‘எசப்பாட்டு’ என்ற தொடரைதமிழ்ச்செல்வன் எழுதி உள்ளார். மேலும் பல்வேறு கட்டுரைகளையும் அவர் எழுதியிருக்கிறார்.