

சமூகம் ஒரு சிக்கலான நூற்கண்டு; அதன் ஒவ்வொரு இழைகளையும் அடையாளம் காட்டுகிறது இலக்கியம். அந்த வகையில் பெண்மை என்னும் இழையை ஒரு குறுக்குவெட்டுக் காட்சியாகக் காட்டுகிறது ‘பயணம்’ என்னும் சிறுகதை நூல். பெண்களின் மவுனங்களுக்குள் புதைந்து கிடக்கும் கதறல்களை எழுத்தாக்கி இருக்கிறார் அரோ கவிப்பிரியன்.
முதல் கதை ஒரு கிழவிக்கும் ஆட்டுக்குட்டிக்குமான உறவை; பிரிவைப் பேசுகிறது. ‘உயிரைக் கொடுக்கிறது சுலபம். உயிரைப் பிரித்துக் கொடுக்கிறதுதான் தியாகம்’ எனப் பிரிவின் துயர்மிகுந்த ஓவியம் காட்சிப்படுத்தப்படுகிறது.
‘உறக்கம்’ சிறுகதை, வேலைக்குச் செல்லும் குடும்பப் பெண்களின் இயந்திர வாழ்க்கையைத் திரையிட்டுக் காட்டுகிறது. நடந்து முடிந்த; ஆனால் கடக்க முடியாத ஒரு துயர நிகழ்வு - அதன் ரத்த ரேகைகளை அழித்து மாற்றி எழுதப்பட்ட கதை ‘பயணம்’.