

கே.பாக்யராஜ் படங்களில் இடம்பெற்ற பல சுவாரசியமான காட்சிகளும் நகைச்சுவைகளும் அவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை வைத்தே உருவாக்கப்பட்டவை என்பது, அவர் எழுதிய நூலிலிருந்து தெரிகிறது.
இந்த நூலில் பள்ளிப் பருவத்தில் நடைபெற்ற சம்பவங்கள் கணிசமாக இடம்பெற்றுள்ளன. பள்ளியில் படிக்கும்போதே நாடகத்தின் மீதும் திரைப்படத்தின் மீதும் அவருக்கு ஆர்வம் வந்துவிட்டது.
அன்று குறும்புகள் செய்து ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டவர், பிற்காலத்தில் அதே பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராகச் சென்று, அதே ஆசிரியரால் கொடி ஏற்றும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார்.
Mr. X என்கிற பெயரில் அவர் அரங்கேற்றிய நாடகத்தை, ஊரில் உள்ளவர்கள் எம்.ஆர். எக்ஸ் என்று வாசித்திருக்கிறார்கள். என்ன செய்வதென்று யோசித்து, மறுநாள் ‘மிஸ்டர் எக்ஸ்’ என்று தமிழில் எழுதியதும் அனைவரும் தங்களின் தவற்றை எண்ணிச் சிரித்தார்களாம்.