Published : 24 Sep 2017 10:57 AM
Last Updated : 24 Sep 2017 10:57 AM

விடுபூக்கள்: இழிவின் கொடுமைக்கு எண்பது ஆண்டுகள்

தஞ்சையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் அமைந்திருக்கும் ஊர் நீடாமங்கலம். காவிரியின் கிளைநதியான வெண்ணாற்றங்கரையில் நிலவளமிக்க ஊர். இந்த ஊரைச் சேர்ந்த நிலவுடைமையாளர்கள் சுதந்திரப் போராட்டக் காலத்தில் காங்கிரஸின் முக்கியப் பொறுப்புகளை வகித்தார்கள். அதே காலகட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தினரும் அப்பகுதியில் தீவிரமான செயல்பட்டனர்.

1937-ல் நீடாமங்கலத்தில் நடந்த தென்தஞ்சை மாவட்ட காங்கிரஸ் மாநாட்டில் சமபந்தி போஜனம் என்று கூறப்பட்டதன் காரணமாக விருந்தில் கலந்துகொண்ட தலித் மக்கள் கடுமையான தாக்குதலுக்கு ஆளானார்கள். மொட்டையடித்து அவமானப்படுத்தப்பட்டார்கள். சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்தக் கொடுமையை எதிர்த்ததோடு ‘விடுதலை’ ஏட்டின் வழியாக வெளியுலகின் கவனத்துக்கும் கொண்டுவந்தார்கள். 80 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தச் சம்பவத்தைப் பற்றியும் அப்போது தமிழக அளவில் அதுகுறித்து விவாதிக்கப்பட்டதைப் பற்றியும் ‘விடுதலை’, ‘குடி அரசு’ ஏடுகளில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையிலும் அந்தச் சம்பவத்தோடு தொடர்புடையவர்களை நேரடியாகச் சந்தித்தும் வரலாற்றுப் பேராசிரியர் ஆ. திருநீலகண்டன், ‘நீடாமங்கலம் சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்’ என்ற நூலை எழுதியுள்ளார். காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூலின் வெளியீட்டு விழா செப்டம்பர் 22 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. நிகழ்வில் கி.வீரமணி, தொல்.திருமாவளவன், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

-இளவேனில்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x