Published : 03 Sep 2017 10:24 AM
Last Updated : 03 Sep 2017 10:24 AM

கனடாவின் மாபெரும் ‘தமிழர் தெருவிழா’ - கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் பங்கேற்புடன்...

னடியத் தமிழர் பேரவையினரால் வருடாவருடம் நடத்தப்படும் 'தமிழர் தெருவிழா' மூன்றாவது முறையாக இந்த ஆண்டும் மிகவும் சிறப்பாக ரொறொன்ரோவில் (டொரண்டோ) நடைபெற்றது. இவ்வருடம் முதன்முதலாகத் தமிழர் தெருவிழாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ கலந்துகொண்டு விழாவுக்குப் பெருமை சேர்த்தார். ஆகஸ்ட் 26, 27 ஆகிய இரு திகதிகளில் ரொறொன்ரோவின் பிரதான வீதியான மார்க்கம் ரோட்டை இருபக்கமும் அடைத்து நிகழ்த்தப்பட்ட இந்த விழாவில் இரண்டு லட்சம் மக்கள் கலந்துகொண்டது ஒரு வரலாற்று நிகழ்வு.

புலம்பெயர் மக்களின் விழா ஒன்றுக்கு, அந்த நாட்டின் பிரதமருடன் கனடாவின் மத்திய, மாநில, உள்ளூராட்சி அரசு நிலைத் தலைவர்களும், வேறுபல உயர்நிலை அரசியல்வாதிகளும் வருகை தந்தது சிறப்பான அம்சம். அத்துடன், இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமெரிக்காவிலிருந்து வருகை தந்த தமிழ் ஆர்வலர்களும் விழாவில் பங்குபற்றினர்.

தமிழ் கனடியர்களின் இருப்பை கனடிய மைய நீரோட்டத்துக்கு எடுத்துச்செல்லும் முயற்சியே ‘தமிழர் தெருவிழா’. எதிர்கால தமிழ் கனடியச் சந்ததியினருக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்க வேண்டிய கடமையை இந்த விழா சரிவர நிறைவேற்றுகிறது. கனடாவில் வதியும் தமிழ் மக்களின் ஒற்றுமையையும் ஆற்றலையும் சக கனடியர்களுக்கு எடுத்துக்காட்டவும், தமிழ்ச் சமூகம் கனடாவின் பன்மைக்கலாச்சாரத்தில் ஒன்றிவிட்ட சான்றை வெளிக்கொணரவும் இந்தக் கொண்டாட்டம் உதவுகிறது.

தமிழ்ப் பாரம்பரிய நடனங்கள், இசை, தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, கரகாட்டம், சிலம்பாட்டம் போன்ற கலைகள் விழாவில் முக்கியத்துவம் பெற்றதுடன், வேற்றின மக்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இளையோர் பலர் ஹார்வர்டு தமிழ் இருக்கை சம்பந்தமாக சனங்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் விழாவில் அவதானிக்க முடிந்தது.

“இலங்கையில் தமிழ் மக்கள் பெரும்பான்மை இனத்தினாலும் அரசாங்கத்தாலும் அடக்கப்படுகின்ற நிலைமை மாறி, மதிக்கப்படுகின்ற நிலை உருவாக வேண்டும். அதற்கான அரசியல் உரிமைகள் தொடர்பான சட்ட மாற்றங்கள் செய்ய வலியுறுத்தி கனடிய அரசு சர்வதேச மட்டத்தில் குரல்கொடுக்கும்” என்று முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ரூடோ உறுதியளித்தார். பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றியபோது கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் உடனிருந்தார்கள்.

“தமிழ்மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் உலகமயப்படுத்த கனடாவில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் உதவியுள்ளது. கனடிய தமிழ் இனம் உலகில் மிகப் பெரிய எண்ணிக்கை கொண்ட, வெற்றியடைந்த புலம்பெயர் தமிழ்ச் சமூகமாக இருக்கிறது. அவர்களுடைய அபார வளர்ச்சியின் வெளிப்பாடுதான் இந்த விழா’ என்று கனடிய தமிழர் பேரவையின் தலைவர் மருத்துவர் வடிவேலு சாந்தகுமார் தன் வரவேற்புரையின்போது குறிப்பிட்டார்.

கனடிய நாடாளுமன்ற உறுப்பினரான கரி ஆனந்தசங்கரி, ரொறொன்ரோ மாநகர உறுப்பினர்கள் நீதன் சாண் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, பிற சமூகத்தினருடன் இணைந்து தமிழ் மக்கள் இயக்கும் ‘தமிழர் தெருவிழா’ வெற்றிபெற வாழ்த்தினார்கள். சிவன் இளங்கோ விழா பொறுப்பாளராக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

1986-ல் 155 தமிழ் அகதிகள் ஒரு படகில் அட்லாண்டிக் கடலில் தத்தளித்தபோது கனடிய மீன்பிடிக் கப்பல் ஒன்று அவர்களைக் காப்பாற்றிக் கரைசேர்த்தது. இந்தப் படகு 30 வருடங்கள் தாண்டிய நிலையில் இன்று கனடிய தமிழர்களின் சின்னமாக மாறிவிட்டது. இந்தப் படகை விழாவில் காட்சிப்பொருளாக வைத்திருந்தார்கள். ஈழத் தமிழர்கள் 56 நாடுகளில் குடியேறி வாழ்ந்தாலும், கனடாவில் அவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை அண்மித்துக்கொண்டிருக்கிறது.

338 உறுப்பினர்களைக் கொண்ட கனடிய நாடாளுமன்றத்தில் ஒரேயொரு தமிழர் அங்கம் வகிக்கிறார். அப்படியிருந்தும் தமிழ் மொழி சார்பாக ஒரு தீர்மானம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது: ‘இனி வரும் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் கனடாவில் தமிழ் மரபு மாதமாகக் கொண்டாடப்படும்.’ இந்த தீர்மானத்தை ஏகமனதாக ஜஸ்டின் ரூடோவின் அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. வேறு ஒரு நாடும் தமிழர்களுக்குச் செய்யாத ஒன்றை கனடிய அரசு மிகச் சாதாரணமாகச் செய்திருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்னர் உலக நாடுகள் அனைத்தும் கைவிட்ட நிலையில், ஈழத்தமிழர்கள் தங்கள் உடமைகள் சகலத்தையும் இழந்து தெருவில் நின்றார்கள். இன்று கனடாவில் வேற்று இனத்தினர் வியக்கும் வண்ணம் ‘தமிழர் தெருவிழா’ கொண்டாடுகிறார்கள். இது தொடக்கம்தான். இவர்களின் அமோக வளர்ச்சி வெகுவிரைவில் உலகத்தினரை பிரமிக்க வைக்கும்.

-அ. முத்துலிங்கம், கனடாவில் வசிக்கும் மூத்த ஈழத் தமிழ் எழுத்தாளர்,
தொடர்புக்கு: amuttu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x