Last Updated : 26 Nov, 2016 08:27 AM

 

Published : 26 Nov 2016 08:27 AM
Last Updated : 26 Nov 2016 08:27 AM

பொருளாதார ஏற்றத்தாழ்வு நோய்க்கு ஒரு சிகிச்சை!

கடந்த சில பத்தாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் அதே வேகத்தில் மக்களுக்கு இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வும் அதிகரித்துவருகிறது. உலகச் சூழல்கள் ஒருபுறமிருக்க இந்தியச் சூழல் இன்னும் விநோதம். வறுமை ஒழிப்பை லட்சியமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆக்ஸ்ஃபாம் கூட்டமைப்பு (OXFAM) அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு பற்றி 2014-ல் வெளியிட்ட அறிக்கை தற்போதைய சூழலில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. தமிழில் இந்த அறிக்கையை என். சிவராமன் மொழிபெயர்த்திருக்கிறார்.

உருவாகும் செல்வத்தில் பெரும் பகுதியை மிகச் சிறு எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் குவித்துக்கொள்வதுடன் இயற்கை வளங்களையும் வசப்படுத்தும் போக்குகளை நூல் விவாதிக்கிறது. ‘வளர்ச்சிக்காக…’ என்ற பெயரில் ஒருசிலருக்குச் சாதகமாகச் செயல்படுவதை அரசுகள் எப்படி நியாயப்படுத்துகின்றன என்பதை நூல் விளக்குவது இந்தியாவுக்கு எவ்வளவு பொருத்தம்! இதைத் தடுத்து நிறுத்தும் அழுத்தக் குழுக்களாக மக்கள் உருவாக வேண்டியதன் அவசியம் இதிலிருந்து பெறப்படுகிறது.

தேசிய வருமானம் முறையாகப் பங்கிடப்பட்டால் வறுமையின் தீவிரம் குறைகிறது. ஆனால், ‘ஏற்றத்தாழ்வுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் நேரடித் தொடர்பு இல்லை, நாடு வளர்ந்தால் அதன் பலன் எல்லாத் தரப்புக்கும் சமமாகக் கிடைத்துவிடும்’ என்றே ஆட்சியாளர்கள் பேசுகின்றனர். சமத்துவம் உள்ள நாட்டில் ஏற்படும் வளர்ச்சியே நீடித்து நிலைக்கிறது என்பது நூலில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

7% பெரும் பணக்காரர்களின் நுகர்வுப் பழக்கத்தால் உற்பத்தியாகும் கரியுமிலக் கழிவுகள் 50%; ஆனால், 50% ஏழைகளால் வெளியாகும் கரியுமிலக் கழிவு வெறும் 7%. உலகின் மொத்தத் தண்ணீரில் 85%-ஐ வெறும் 12% மக்களே பயன்படுத்துகிறார்கள். இந்தத் தரவுகளெல்லாம் நம் கண்ணைத் திறக்க உதவ வேண்டும்.

இருப்பவர்களுக்கும் இல்லாதவர் களுக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்துவதில் சாதி, இனம், இடம், மதம், இனக்குழு போன்ற அடையாளங்களெல்லாம் முக்கியப் பங்காற்றுகின்றன என்ற தகவல் இந்தியாவுக்கு முழுக்க முழுக்கப் பொருந்தக்கூடியது. இதை நீக்கத்தான் இட ஒதுக்கீடு போன்ற சமூகநீதி நடவடிக்கைகள் அவசியமாகின்றன.

இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் ஒன்றி ணைந்துதான் மக்களின் வேலைவாய்ப்புகள், வருமானம், செல்வம், சொத்துரிமை போன்றவற்றுடன் அவர்களுடைய கல்வி, சுகாதாரம், ஆயுள் போன்றவற்றையும் தீர்மானிக்கின்றன. குறுகிய ஆயுள், குறைந்த கல்வி, ஆரோக்கியமற்ற வாழிடம், சவால்கள் நிறைந்த வாழ்க்கை, உடல் பருமன், பதின்பருவக் கர்ப்பம், வன்முறை சார்ந்த குற்றச் செயல்கள், மனநோய், போதைப் பழக்கம் இவற்றின் விளைவாக சிறைவாசம் போன்றவை ஏழைகளுக்கே நேரிடுவதால் அது அவர்களை மட்டுமல்ல சமூக நலத்தையும் ஒற்றுமையையும் பாதிக்கும் என்பது உலக அனுபவம். ஒரு நாட்டில் ஏழைகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது நாளடைவில் சமூக அமைதி குலைந்து, நிலையற்ற அரசுக்கும் சர்வாதிகாரத்துக்கும் வழியேற்படுத்தி முதலில் அந்த நாட்டையும் பிறகு பக்கத்து நாடுகளையும் பாதிக்கும் என்பது சமீபத்திய ஆப்பிரிக்க உதாரணங்கள். இந்த உதாரணங்களைக் கண்டாவது இந்தியா விழித்துக்கொள்வதாக இல்லை!

பெண்களுக்கான பொருளாதாரச் சமத்துவம் பற்றிய பகுதி நூலுக்குக் கூடுதல் முக்கியத்துவம் சேர்க்கிறது. “இந்தியாவில் ஒரு ஆண் தொழிலாளியின் சராசரிக் கூலி ஒரு பெண்ணின் கூலியைவிட இரண்டரை மடங்கு அதிகம்” என்ற தரவு நம் சமூகத்தின் பெண்ணுழைப்புக்கு நாம் கொடுக்கும் மரியாதையைத் தோலுரித்துக்காட்டுகிறது.

உலகமயமாக்கல், தாரளமயமாக்கல் இந்தியாவை சொர்க்கபுரி ஆக்கிவிடும் என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருந்தோம். அதேபோல், இந்தியா சொர்க்கபுரியாக ஆகியிருக்கிறது, பணம், அதிகாரம், சாதியமைப்பு போன்றவற்றில் உச்சத்தில் உள்ளவர்களுக்கு மட்டும். இவர்கள் உச்சத்தில் இருப்பதற்காக அடிமட்டத்தில் அழுத்தப்பட்டவர்களின் நிலையோ மேலும் மோசமாகியிருக்கிறது என்பதை இந்தப் புத்தகம் தெளிவாகச் சொல்கிறது. “சமீப ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்றத்தாழ்வு அதிகரித்துவிட்டது. இந்தியாவில் ஏற்றத்தாழ்வு பெருகுவதை நிறுத்தி, இருக்கும் அளவிலேயே வைத்திருந்தால் 2019-க்குள் கடுமையான வறுமையிலிருந்து 9 கோடி மக்களை வெளியே கொண்டுவந்துவிடலாம்” என்கிறது இந்த நூல். ஏற்றத்தாழ்வுக்கு எதிரான போரில் சுகாதாரமும் கல்வியும் முக்கியமான ஆயுதங்கள் என்று இந்த நூல் குறிப்பிடுகையில் இந்தியாவில் சுகாதாரமும் கல்வியும் யாருடைய கையில் இருக்கின்றன என்பதை நினைத்து வேதனைதான் கொள்ள முடிகிறது.

சமூகப் பதற்றத்தையும் அமைதியின்மை யையும் தவிர்க்க அரசுகள், பெருநிறுவனங் கள், சமூகக் குழுக்கள், மருந்து உற்பத்தி யாளர்கள் என்று ஒவ்வொரு தரப்பினரும் செய்ய வேண்டுவது என்ன என்று அக்கறை யுடன் குறிப்பிடுகிறது நூல். உலகெங்கும் பல்வேறு நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு, எல்லா நாடுகளுக்குமிடையில் ஒப்பீடு செய்து இந்த அறிக்கையை விரிவாக உருவாக்கி யிருக்கிறார்கள். ‘பணமதிப்பு நீக்க’ பிரச்சி னையில் சிக்கி இந்தியா திணறும் தருணத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணமாக இருப்பவர் கள், சமத்துவத்துக்காகப் போராடுபவர்கள் என்று அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது. துல்லியமான மொழிபெயர்ப்பும் தெளி வான நடையும் இந்த நூலின் சிறப்பம்சங்கள்!

-வ. ரங்காசாரி,

தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in

அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு: சரிசெய்வதற்கான தருணம்

ஆக்ஸ்ஃபாம் அறிக்கை

தமிழில்: என்.சிவராமன்

விலை: ரூ. 180

வெளியீடு: க்ரியா, சென்னை-41.

72999 05950.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x