Published : 07 May 2016 09:43 AM
Last Updated : 07 May 2016 09:43 AM

நான் என்ன படிக்கிறேன்?- ஈரோடு தமிழன்பன், கவிஞர்

பள்ளி நாட்களிலேயே பாடப் புத்தகம் தாண்டிய இலக்கிய நூல்களைப் படிக்கும் ஆர்வம் எனக்கு இருந்தது. என் அண்ணன் தங்கவேலு பாரதிதாசனின் ‘இசையமுது’, ‘அழகின் சிரிப்பு’ நூல்களை எனக்குப் படிக்கத் தந்தார். அப்போது எனக்கு 12 வயது.

எங்கள் ஊரான சென்னிமலையில் இருந்த திராவிட இயக்கப் பற்றாளர் ஏ.கே.குழந்தைசாமி ஒரு நூலை என்னிடம் தந்தார். அதில், பாரதிதாசனின் ‘காதல் நினைவுகள்’, பெரியாரைப் பற்றி சேலம் கல்லூரியில் பேசிய அண்ணாவின் உரைகள், தமிழ்ஒளியின் நாடகம் என பலவற்றின் தொகுப்பாக இருந்த அந்த நூல் என்னை வாசிப்பில் கட்டிப் போட்டது.

வீட்டில் திரைப்படம் பார்க்கச் செல்வதற்கு எல்லோருக்கும் காசு கொடுப்பார்கள். நான் காசை வாங்கிக்கொண்டு திரைப்படத்துக்குச் செல்லாமல், திராவிட இயக்கச் சிறு புத்தகங்களை வாங்கிப் படிப்பேன். அப்போது அண்ணாவின் வானொலி உரைகள், பேச்சுகள் சிறுசிறு நூல்களாக வரும். அவற்றை வாங்கிப் படிப்பதில் அப்படியொரு ஆர்வம் இருந்தது.

புத்தகம் படிப்பதில் இருந்த ஆர்வம் என்னை எழுதவும் தூண்டியது. எட்டாவது படித்தபோதே, ‘சுய சிந்தனை’ எனும் கையெழுத்து இதழை நடத்தத் தொடங்கினேன்.

தமிழ்க் கல்லூரியில் படித்த மாணவர்களில் சங்கத் தமிழ் இலக்கியத்தோடு சேர்த்து, ஆங்கிலம் வழி உலக இலக்கியத்தையும் ஆர்வமாய்ப் படித்தேன். பாப்லோ நெருடா என்னைப் பெரிதும் கவர்ந்த மகாகவிஞன். ஷேக்ஸ்பியர், மில்டனின் நூல்களையும் தேடிப் படித்தேன்.

10 ஆண்டுகள் பாரதிதாசன் கவிதைகளில் தோய்ந்திருந்த எனக்கு, 20 ஆண்டுகள் அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. எனது முதல் நாவல் ‘நெஞ்சின் நிழல்’பாரதிதாசனின் முயற்சியில்தான் நூலாக வெளிவந்தது. அப்போதே ‘தமிழ்ப்பொழில்’, ‘கார்க்கி’, ‘சிகரம்’ ஆகிய இதழ் களில் எழுதத் தொடங்கிவிட்டேன்.

வாசிப்பதும் எழுதுவதும் எனக்கு எப்போதும் பிடித்தமான செயல். அதனால்தான் இப்போதும் என்னால் இயல்பாய்த் தொடர்ந்து இயங்க முடிகிறது. பழையவை, புதியவை, மூத்தவர், இளையவர் என்கிற பேதங்கள் ஏதுமின்றிப் புத்தகங்களை வாசிப்பவன் நான்.

அண்மையில், பேராசிரியர் நா. நளினிதேவி எழுதி, புதுப்புனல் வெளியீடாக வந்திருக்கும் ‘ஞானியின் கவிதையியல் கொள்கைகள்’ எனும் புத்தகத்தை வாசித்தேன். தமிழகமறிந்த மார்க்சிய அறிஞர் ஞானி. தனக்குப் பார்வையிழப்பு ஏற்பட்ட பின்னரும் அயராமல் வாசிப்பைப் பிறரின் உதவியோடு விடாமல் தொடர்பவர். விருப்புவெறுப்பற்ற முறையில் புத்தகத்தைப் படித்து விட்டுக் கருத்துக்களைப் பதிவு செய்வதில் தனித்துவமானவர். ஞானியின் எழுத்துக்கள் பற்றி எழுதியிருக்கும் நா. நளினிதேவி அறுவை சிகிச்சையால் பேசும், கேட்கும் திறன்களை இழந்தவர். ஞானியின் கட்டுரைகளுக்குள் தோய்ந்து சென்று மிகச் சிறப் பாக இந்நூலை எழுதியிருக்கிறார். பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றிய ஞானியின் தெளிவான பார்வையையும், பாரதி, பாரதி தாசன் முதலான கவிஞர்கள் பற்றிய மதிப்பீட்டையும் ஞானி முன்வைத்துள்ள விதத்தையும் மிகச் சரியாகவே கோடிட்டுக் காட்டுகிறார் நளினிதேவி. தமிழ்க் கவிதையியலின் கொள்கை களாக ஞானி முன்வைக்கும் கருத்துக்கள் ஆழ்ந்த சிந்தனை யைத் தூண்டுபவை.

புத்தகம் வாசிப்பதென்பது நம் அறிவை வளப்படுத்தும், விசாலமாக்கும். நம்மை உரையாட வைக்கும். ஒவ்வொரு வாசிப்பிலும் நம்மைப் புதிதாய் உணர வைக்கும். கூடவே, நாம் ஒரு படைப்பாளியாகவும் இருந்துவிட்டால், நாம் எழுதுவதற்கான புதிய சக்தியையும் வாசிப்பு அளிக்கும்.

- கேட்டு எழுதியவர்: மு.முருகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x