Last Updated : 10 May, 2016 12:07 PM

 

Published : 10 May 2016 12:07 PM
Last Updated : 10 May 2016 12:07 PM

எங்கிருந்து ஆரம்பிப்பது வரலாற்றை?

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கக் கப்பற்படையில் பணியாற்றியவர்தான் அலெக்ஸ் ஹேலி. இவர் எழுதிய 'வேர்கள்' என்ற சுயசரிதை நாவல் மூலம் உலகின் கீழ்த்திசை இருட்டுக்கு மாபெரும் வெளிச்சத்தைக் கொண்டுவந்தார். தான் ஒரு மிகப் பெரிய பாரம்பரியக் கிளையில் பூத்த ஒரு பூ என்பதை உணர்ந்ததோடு அந்த மரத்தின் வேர் எங்கிருந்து வருகிறது என்பதையும் ஆராயப் புகுந்தார் அவர்.

கறுப்பினத் தாய்க்கும் (கலப்பினத்தவரான) தந்தைக்கும் கலப்பின மகனாகப் பிறந்த ஹேலி தனக்குக் கிடைத்த கடலோரப் பாதுகாப்புப் படையின் உணவகப் பணிக் காலத்தை செவ்வனே முடித்துக்கொண்டு நிம்மதியாக ஏதோ ஒரு தோட்டத்தை வாங்கிப்போட்டு நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம்.ஆனால், நீண்டகாலமாய் அடிமைப்பட்டுக் கிடந்த தம் இன மக்களின் வாழ்க்கை அவரை தூங்க விடாமல் துரத்திவந்திருக்கிறது.

ஒருமுறை லண்டன் மியூசியத்தில் அவர் பார்த்த சிறு கல்லில் செதுக்கப்பட்ட எழுத்துக்கள்தான் அவரை யோசிக்க வைத்திருக்கின்றன. அந்தக் கல் நைல் நதியிலிருந்து எடுத்துவரப்பட்டது என்பதை அறிந்து அதன் மொழி என்னவென்று தெரிந்துகொள்ள அதற்கான புத்தகங்களைத் தேடுகிறார். இதைப் போலத்தானே நம் மூதாதையரும் ''கோ, கேம்பி பொலாங்கோ'' என்று கூறியதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதற்காகவே 12 ஆண்டுகளில் 5 லட்சம் மைல்கள் பயணித்து அலைந்து திரிந்து காம்பியா காடு வரை சென்று திரும்பி, கிடைத்த அரிய தகவல்களைக் கொண்டு வேர்களை எழுதத் தொடங்குகிறார்.

ஹேலியின் மூதாதையான குண்டா கின்டே ஆப்பிரிக்காவிலிருந்து கடத்திவரப்பட்டார். இதைப் பற்றி அமெரிக்காவிலேயே வாழ்ந்த ஹேலி குடும்பத்தினரின் ஏழு தலைமுறையினரும் வழிவழியாய்த் தங்கள் பரம்பரைக் கதைகளை அடுத்தடுத்த தலைமுறையினருக்குச் சொல்லிச் சொல்லி ஆழமாய்ப் பதிய விட்டே தங்கள் குழந்தைகளை வளர்த்தனர் என்பதும் தெரிகிறது. அப்படிச் செய்ததன் நோக்கம் ஏதோ ஒரு சம்பிரதாய விளைவு அல்ல.

இதைப் பற்றிய வியப்பு கலந்த ஆர்வம்தான் அவரை அமெரிக்கக் கண்டத்தின் பல்வேறு முனைகளுக்குத் துரத்தியிருக்கிறது. கடைசியில் ஆப்பிரிக்கக் கண்டத்துக்கு விமானத்தில் செல்கிறார். காம்பியா நாட்டுக்குச் சென்று தங்கள் மூதாதையர் கிராமம் எதுவென தேடிச் சென்று மாண்டிங்கா மொழி பேசும் மக்களைச் சந்திக்கிறார். ‘கோ’ என்பது கித்தார் என்றும், ‘கேம்பி பிளாங்கோ’ என்பது காம்பியா நதி என்றும் மாண்டிங்கா மொழியில் புழங்குவதை அறிந்துகொள்கிறார். காம்பியா நதிக்கரையில்தான் அவர்களது நாகரிகம் உருவானது.

ஜுஃப்யூர் மலைக்கிராமத்துக்கு இவர் சென்றபோது அந்த கிராம மக்கள் இவரைச் சுற்றி அமர்கிறார்கள். ஜுஃப்யூர் கிராமத்துக்கு கின்டே குடும்பத்தினரின் ஆதிகாலத்துக் கதைகளிலிருந்து இவரது மூதாதை குண்டா கின்டே கடத்திச்செல்லப்பட்டதுவரை கிராமத்தினர் கதை சொல்ல ஹேலி மீதிக் கதையை அவர்களுக்குச் சொல்கிறார். உடனே மக்கள் ஆனந்தமடைகின்றனர். உட்கார்ந்திருந்த அனைவரும் நடனம் ஆடத் தொடங்குகிறார்கள். சற்று மாறுபட்டிருந்த அவரது உடல் நிறத்தைக் கண்டு முதலில் அவரை அந்நியராகக் கருதிய பெண்கள் இப்போது, ‘நீங்கள் எங்களைச் சார்ந்தவர்'’ என்று பொருள்படும் வகையில் தங்கள் முதுகுத்தூளிக் குழந்தைகளை எடுத்து இவர் கையில் கொடுத்து வாங்குகிறார்கள். அவர் அங்கிருந்து கண்ணீர் ததும்பப் பிரிந்து வந்து நாவலை எழுதத் தொடங்குகிறார்.

நூல் முழுக்க ஏராளமான குடும்பங்கள் உயிரோட் டமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கான இருப்பு அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏதிலி வெள்ளையர்களைக் கறுப்பினத்தவர்கள் காத்துநின்ற கதைகள் மட்டுமின்றி வெள்ளையர்கள் கறுப்பினத்தவர்களுக்கு அடைக்கலம் தந்த கதைகளும் நேர்மையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

நாவலினூடே லிங்கன் போன்ற வெள்ளையின நல்லவர்களையும், டக்ளஸ் போன்ற கறுப்பினப் போராளிகளையும் காண்கிறோம். நல்லவர் யார், கெட்டவர் யார் என்ற கேள்விகளை இந்நூல் எழுப்பவில்லை. மாறாக, நான்கு பேர் சேர்ந்து வாழக்கூடிய இந்த உலக சமுதாயத்தில் அதில் சிலரை அடிமைப்படுத்தி வேறு சிலர் காணும் சுகத்தைப் பற்றியே நாவல் கேள்வி எழுப்புகிறது. வரலாற்றை எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் எதை முன்னெடுக்க வேண்டும் என்ற தேடலை இந்தப் புத்தகம் வகைப்படுத்திக் காட்டுகிறது. எழுதப்பட்ட வரலாறுகளில் பாதிக்கப்பட்டவர்களின் வரலாற்றையே அது கோரி நிற்கிறது.

பொன். சின்னத்தம்பி முருகேசனின் தெளிவான மொழியாக்கத்தில் எதிர் வெளியீடாக வெளியாகியிருக்கும் 'வேர்களி'ன் வாசிப்பு வாசம் புதிய உலகானுபவத் தேடலை நோக்கி நம்மை உந்தித் தள்ளும்.

- பால்நிலவன், தொடர்புக்கு: sridharan.m@thehindutamil.co.in

வேர்கள்

அலெக்ஸ் ஹேலி

தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்,

விலை: ரூ. 999

வெளியீடு: எதிர் வெளியீடு, பொள்ளாச்சி- 642002,

தொடர்புக்கு: 98650 05084, மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x