Last Updated : 12 Mar, 2022 12:15 PM

 

Published : 12 Mar 2022 12:15 PM
Last Updated : 12 Mar 2022 12:15 PM

நூல் வெளி | நூல்நோக்கு: கொல்கத்தாவின் வீதிகள் வழியே…

வேலூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிப் பணி நிமித்தம் சில ஆண்டுகள் கொல்கத்தாவில் வாழ்ந்ததன் அடிப்படையில் அழகன் சுப்பு (இயற்பெயர்-அ.திருமுருகன்) எழுதிய இந்தக் கட்டுரைகள் பயண இலக்கியத்துக்கு ஒரு நல்வரவு. 16 கட்டுரைகளில் துர்கா பூஜை டிராம் வண்டி, ரசகுல்லா, கால்பந்து விளையாட்டு, ஹூக்ளி நதி என கொல்கத்தா என்றவுடன் நம் நினைவுக்குவரக்கூடிய அந்நகரத்தின் பிரத்தியேகமான விஷயங்கள் மட்டுமல்லாமல் ஓலா, ஊபர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊடுருவலால் பாதிக்கப்படாத மஞ்சள் நிற அம்பாசடர் டாக்ஸிகள், மண்குவளையில் வழங்கப்படும் தேநீர், ஜால்மூரி, பப்ரிசாட், கோட்டிகுரோம் உள்ளிட்ட தெரு உணவுகள் என கொல்கத்தாவுக்குச் சென்றிடாதவர்களுக்குத் தெரியாத விஷயங்களையும் தெரிந்த விஷயங்களில் தெரியாத கூறுகளையும் தன் வசீகரமான எழுத்து நடையின் துணையால் விவரிக்கிறார் அழகன் சுப்பு.

மென்று விழுங்க வேண்டிய ரசகுல்லாக்களையே சாப்பிட்டறிந்த நமக்கு, வாயில் போட்டவுடன் கரையும் சூடான ரசகுல்லாக்களைச் சாப்பிடுவதற்காகவேனும் ஒருமுறை கொல்கத்தாவுக்குச் சென்றுவந்துவிட வேண்டும் என்று உந்துதல் ஏற்படுகிறது. பழைய புத்தகங்களை விற்கும் கடைகள் நிறைந்த சன்டே ஸ்ட்ரீட் குறித்த கட்டுரையில், ‘இரவலாகப் பெறப்படும் இலக்கியப் புத்தகத்திலுள்ள அடிக்கோடுகளை வைத்து, நாம் ஒரு மனிதனின் இயல்பைக்கூடக் கணித்துவிட முடியும்’ என்கிறார். இதுபோன்று ஆங்காங்கே தெறிக்கும் கூர்மையான அவதானிப்புகள் இந்த நூலின் வாசிப்பனுபவத்தை இனிதாக்குகின்றன.

- கோபால்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x