Published : 19 Dec 2021 07:27 AM
Last Updated : 19 Dec 2021 07:27 AM

பசுமை இலக்கியத் திருவிழா!

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழா’ மிகவும் பிரபலமானது. அதற்கடுத்து ‘தி இந்து இலக்கியத் திருவிழா’, ‘டைம்ஸ் இலக்கியத் திருவிழா’ எனப் பல இலக்கியத் திருவிழாக்கள் நடைபெற்றுவருகின்றன. முதன்முறையாக பெங்களூரில் டிசம்பர் 8-லிருந்து 10 வரை ‘பசுமை இலக்கிய’த் திருவிழா நடத்தப்பட்டது. பெருந்தொற்றுச் சூழல் காரணமாக இவ்விழா இணையம் வழியாகத் தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்றது.

இந்த விழாவின் பிதாமகர் ‘சஸ்டெய்னபிளிட்டி நெக்ஸ்ட் (Sustainability Next)’ என்கிற மின்னிதழின் ஆசிரியரும், எழுத்தாளருமான பெனடிக்ட் பரமானந்த். பசுமை இலக்கியத் திருவிழாவின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அரசியலரும் எழுத்தாளருமான ஜெய்ராம் ரமேஷ், சென்னை முதலை வங்கியின் துணை நிறுவனரும் எழுத்தாளருமான ஜியா விட்டேகர், பேராசிரியர் ஹரிணி நகேந்திரா, ‘டபிள்யு.டபிள்யு.எஃப்’ன் ராதிகா சூரி போன்றோர்.

பருவநிலை மாற்றம் பற்றியும், இயற்கை மனித குலத்துக்கு அளித்திருக்கும் கொடையை ஒழுங்காகப் பராமரிக்காமல் எப்படி நமது பேராசைக்குப் பயன்படுத்தி, அதைச் சீரழித்துவருகிறோம் என்பது பற்றியும் குழந்தைகள் உட்பட அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையில் இந்த பசுமை இலக்கியத் திருவிழா வடிவமைக்கப்பட்டிருந்தது இதன் சிறப்பாகும்.

முதல் நாளில் ‘காட்ஃபாதர் ஆஃப் சஸ்டெய்னபிளிட்டி’ என அறியப்படும் ஜான் எல்கிங்டன் (John Elkington) எழுதிய ‘க்ரீன் ஸ்வான்ஸ் (Green Swans)’ புத்தகம் குறித்து அவருடன் சந்தோஷ் ஜெயராம் உரையாடினார். இப்போது பிரபலமாகிவரும் ‘சூழலியல், சமூகம், நிர்வாகம்’ (Environmental, Social and Governance - ESG) என்கிற கருத்தியல் பற்றியும் அதன் அடிப்படையில் எவ்வாறு அரசும் தனியார் நிறுவனங்களும் சேர்ந்து சிறந்த நிலையான சுற்றுச்சூழலுக்கு இணக்கமான தொழில்களை உருவாக்க முடியும் என்பது பற்றியும் டாடா குழுமத்தில் உயர் பதவி வகித்துவந்த முகுந்த் கோவிந்த் ராஜனும் மஹேந்திரா குழுமத்தைச் சேர்ந்த அனிர்பான் கோஷும் உரையாடினார்கள்.

இரண்டாவது நாள் சுற்றுச்சூழல் சம்பந்தமான சில குறும்படங்கள் திரையிடப்பட்டன. இனிவரும் காலத்தில் அனைத்துப் புனைவுகளும் பருவநிலை சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடும் என்கிற கருத்து பரவிவரும் தருணத்தில், சீனாவைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளரும், சீன அறிவியல் புனைவு எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவரும் ‘வேஸ்ட் டைட்’ (Waste Tide)’ என்கிற நூலின் ஆசிரியருமான ஸ்டான்லி சானும், எழுத்தாளரும் பிரதம் புக்ஸின் ஆசிரியருமான பிஜல் வஜாரஜனியும் கலந்துகொண்டு சூழலியல் பின்னணியில் எழுதப்பட்டுவரும் புனைவுகள் குறித்தும் அதன் தாக்கங்கள் குறித்தும் பேசினார்கள்.

மூன்றாவது நாள், சுற்றுச்சூழலில் ஆர்வமுடைய பதின்ம வயதினர் கலந்துகொண்ட உரையாடல்கள் நடைபெற்றன. ‘என்னுடைய வாழ்க்கையில் பசுமை இலக்கியத்தின் பங்கு’ என்கிற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் அருணிமா கோஷ் (9 வயது, ஹைதராபாத்), ராகவன் பாலாஜி (12 வயது, மும்பை), செலஸ்டா பெர்னாண்டஸ் (14 வயது, கோவா) ஆகியோர் பங்கேற்றுத் தங்களுக்குப் பசுமை இலக்கியம் எப்படி அறிமுகமானது என்பது பற்றியும், பாடநூல்களைத் தவிர வேறு நூல்களையும் வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், எப்படி ஆசிரியர்கள், பெற்றோர்கள் இதற்கு உதவுகிறார்கள் என்பது பற்றியும் தங்களின் அனுபவங்களை அவர்களுக்கே உரித்தான பாணியில் பேசி மனதைக் கவர்ந்தார்கள். இதில் செலஸ்டா ஏற்கெனவே ஒரு நூல் எழுதி வெளியிட்டிருப்பதாகவும் இப்போது காதலையும் இயற்கையையும் இணைத்து ஒரு நாவல் எழுதிவருவதாகவும் கூறினார். அருணிமா ‘புக் க்ளப் படீஸ்’ (Book Club Buddies)’ என்கிற பெயரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாசகர் குழு நடத்திவருவதாகவும் கூறினார்.

ஒவ்வொரு நாளின் இறுதியிலும் அந்தந்த நாளின் பொருண்மைக்கேற்ப 2019, 2020 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் தொடர்பாக வெளியான புனைவு, அபுனைவு நூல்களில் சிறந்த நூல்கள் தெரிவுசெய்யப்பட்டு ‘GLF-WWF Honour Book Award’ என்கிற பெயரில் தலா ரூ. 50,000 ரொக்கப் பரிசும் சான்றிதழும் கோப்பையும் வழங்கப்பட்டன. முதல் இரண்டு நாட்கள் தலா மூன்று நூல்களும், மூன்றாவது நாள் ஐந்து நூல்களும் தெரிவுசெய்யப்பட்டன. ‘அதிகம் கற்றுக்கொள்வோம்; அதிகம் செயல்படுவோம்’ என்பது இவ்விழாவின் தாரக மந்திரம்.

- சித்தார்த்தன் சுந்தரம், மொழிபெயர்ப்பாளர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x