Last Updated : 11 Mar, 2016 11:00 AM

 

Published : 11 Mar 2016 11:00 AM
Last Updated : 11 Mar 2016 11:00 AM

மவுனத்தின் புன்னகை 11: ஆங்கில மொழிபெயர்ப்பில் நூல் வர வேண்டுமா?

இந்திய இலக்கியத்தை மதித்த உலகத்தார் முல்க் ராஜ் ஆனந்த், ராஜா ராவ், ஆர்.கே. நாராயண் ஆகியோரை இந்தியத் திரிமூர்த்திகள் என்று அழைத்தனர். இந்த மூவரும் ஆங்கிலத்தில் எழுதினார்கள். மூவ ருக்கும் முதல் இரண்டு நூல்கள் இங்கிலாந்தில்தான் வெளியாயின. ஓரளவு கவனமும் பெற்றன.

இன்று நினைத்துப் பார்க்கும்போது இந்த வெளிநாட்டுப் பிரசுரம் கானல் நீர் போல இருந்திருக்கிறது. முல்க் ராஜ் ஆன்ந்த் அவருடைய பிரசுரகர்த்தர் களைக் கடுமையாகத் திட்டித் தீர்த்ததற் குக் காரணம் ஒருவாறு புரிகிறது. அன்று தபாலில்தான் கையெழுத்துப் பிரதிக் கட்டை அனுப்பவேண்டும். தரைவழித் தபாலுக்கே நிறையத் தபால் தலைகள் ஒட்டவேண்டும். சிறிது குறைந்தாலும் கட்டு உங்களிடமே திரும்பி வந்துவிடும். சரியான கட்டணம் எவ்வளவு என்று தெரிந்துகொள்ளவே ஒரு பெரிய தபால் நிலையத்துக்குச் செல்ல வேண்டும். கட்டை அனுப்பித்து மாதக் கணக்கில் பதிலுக்குக் காத்திருக்க வேண்டும். காத்திருக்கும் காலம் சித்ரவதை.

இதை எல்லாம் அப்போது வெளிநாட் டில் பிரசுரமாக வேண்டும் என்று விரும் பும் எல்லா இந்திய எழுத்தாளர்களும் அனுபவிக்க வேண்டும். அனுபவித் தார்கள். இப்படிப் பாடுபட்டுப் பிரசுர மான பின்னர் வானத்தில் இருந்து குபேரன் பணத்தைக் கொட்டுவான் என்று கற்பனை செய்து கொள்ளக் கூடாது. இந்த யதார்த்தம் கசப்புதான்.

நான் 1950-களில் எழுதத் தொடங்கிய போது மிகுந்த வெற்றிகரமான அமெரிக்க எழுத்தாளர் எர்ல் ஸ்டான்லி கார்ட்னர். அவர் சுமார் ஆறு அடி உயரம் இருப்பார். அவரை நிற்க வைத்து, அவர் எழுதிய நூல்களை ஒன்று மேல் ஒன்றாக அடுக்கி வைத்துப் புகைப்படம் எடுத்தார்கள். அடுக்கி வைத்த புத்தகங்கள் அவரை விட உயரமாக இருந்தன. அவருக்குத் தமிழ்நாட்டில் நிறைய வாசகர்கள் இருப்பதாக எண்ணி ‘லிப்கோ’ நிறுவனம் தமிழ் மொழிபெயர்ப்புக்கு ஏற்பாடு செய்தது. கார்ட்னர் அவ்வளவு ஒன்றும் பணக்காரராக இறக்கவில்லை. அதே போல 50 ஆண்டுகள் முன்பு உலகமே ஹரால்டு ராபின்ஸ் என்பவரையே படித்துக் கொண்டிருந்தது போலத் தோன்றியது. அப்புறம் ஜாக்லின் சூஸன். இவர்கள் மத்தியில் இந்தியத் திரிமூர்த்திகள் எம்மாத்திரம்?

சினிமா டைரக்டர்களுக்கு ஒன்று சொல்வார்கள்: You are as good as your last film. இதையே எழுத்தாளர்களுக்கும் சொல்வார்கள். You are as good as your last book. ஒருவர் அவர் காலத்திலேயே மறக்கப்படுவதும் உண்டு. இதை ஏன், எப்படி என்று விளக்க முடியாது.

ஆங்கிலத்தில் எழுதும் இந்தியர் களுக்கு இந்தியாவிலேயே மூன்று பதிப்பாளர்களிடம் கவனம் கிடைத்தது. ஒன்று, ஓரியண்ட் பேப்பர் பாக்ஸ். 2-வது ஜெய்கோ. 3-வது 1960-களில் உதித்த ஸ்டெர்லிங் பப்ளிஷர்ஸ்.

ஸ்டெர்லிங் பப்ளிஷர்ஸின் தலைவர் ஓ.பி.கை. இவர் பள்ளி ஆசிரியராக இருந்து பஞ்சாப் பிரிவினையின்போது இந்தியா வந்தவர். இவர் இரண்டு வருடங் கள் என் கையெழுத்துப் பிரதியை வைத் துக் கொண்டு, ‘‘அடுத்த பிரசுரம் உங் களுடையதுதான். ஏதாவது மாற்ற வேண்டியிருந்தால் இப்போதே செய்து விடுங்கள்’’ என்று கடிதம் எழுதி என் பிரதி யைத் திருப்பி அனுப்பினார். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. பாதிதான் வந்திருந்தது. பாக்கி எங்கே என்று கேட்டு எழுதினேன். ‘‘இவ்வளவுதான் எங்களிடம் இருப்பது’’ என்று பதில் வந்தது. நான் அதிகம் வாதிடாமல் என் னிடம் இருந்த குறிப்புகள், நினைவில் இருந்தவை வைத்துப் பாக்கி நாவலை எழுதி அனுப்பினேன்.

ஆறு மாதம் கடிதம் ஒன்றும் இல்லை. ஒரு நாள் புத்தக் கட்டு ஒன்று வந்தது. நானும் ஆங்கில நூலாசிரியராகிவிட் டேன் என நினைத்து கட்டைப் பிரித்துப் பார்த்தேன். இன்னொரு முறை தூக்கி வாரிப் போட்டது. அட்டைப் படம் மோச மாக இருந்தது. அவர்கள் எனக்கு முன் கமலா தாஸ் படைப்பைப் பிரசுரித்திருந் தார்கள். அவருக்கு எப்படியோ பரபரப்பு எழுத்தாளர் என்ற பெயர் வந்துவிட்டது.

கணவர் இறந்த பிறகு கமலா தாஸ் இஸ்லாமியராகி, கருப்பு பர்தா அணிந்து கொண்டிருந்தார். என்னிடம் அவர் “இப்போது நான் மிகவும் பாதுகாப்பாக உணருகிறேன்” என்றார். எது எப்படியோ, என் புது ஆங்கில நூலுக்கு நான் பர்தா அணியவேண்டியிருந்தது. என் பிரதிக்கு நான் பர்தா போடலாம். மற்ற 4,999 பிரதிகளுக்கு? நான் கோபமாகக் கடிதம் எழுதினேன். பதில் ஏதும் இல்லை. அடுத்த முறை நான் டெல்லிக்குப் போன போது முதல் காரியமாக ஸ்டெர்லிங் அலுவலகத்துக்குப் போனேன். அப் போது பெரியவர் ஓ.பி.கை இல்லை. அவர் மகன்தான் இருந்தார். “என்ன இப்படிச் செய்து விட்டீர்கள்?” என்று என்னால் இயன்ற கோபத்துடன் கேட்டேன்.

“நீங்கள் குறைந்த விலை வைக்கச் சொன்னீர்கள். நாங்கள் 7.50 தான் வைத்திருக்கிறோம். அப்படியும் பெரி தாக விற்கவில்லை. நீங்கள் அட்டைக்குச் சண்டை போடுகிறீர்கள். எங்கள் இதர நூல்களைப் பாருங்கள்” என்றார்.

நான் பார்த்தேன். அவற்றோடு ஒப்பிட்டால் என் புத்தகம் விஷ்ணு சஹஸ்ரநாமம் போல இருந்தது. இரண்டு ஆண்டுகளில் திருவல்லிக்கேணி முரளி கஃபே நடைபாதையில் பிரதி ஒரு ரூபாயென்று விற்கப்பட்டது. நான் ஒரு மாதத்துக்கு அந்தப் பக்கமே போகவில்லை.

ராஜா ராவ் அவர்களிடம் அதிகம் பேச எனக்கு வாய்ப்புக் கிட்டவில்லை. மைசூரில் ஒரு கருத்தரங்குக்கு அவர் வந்திருந்தார், நானும் போயிருந்தேன். அவர் பேசவே இல்லை. இதற்கு மாறாக ஆர்.கே.நாராயண் நிறையப் பேசுவார்.

“என்னுடையது 50 கதைகளுக்கு மேலாக ஆங்கிலத்தில் வந்திருக்கின்றன. யாராவது புத்தகம் போடுவார்களா?’’ என்று கேட்டேன். “போட மாட்டார்கள்” என்று பளிச் என்று சொன்னார். காரணம், இந்த நூல் வெளியீட்டு முயற்சிகளில் உள்ள கசப்பான அனுபவங்கள்தான்.

இதே போலத்தான் பரிசுகளும். இந்தியாவில் ஒரு புத்தக விற்பனை நிறுவனம் பரிசு கொடுத்து வந்தது. என் நூல்கள் இருமுறை இறுதிச் சுற்றுக்கு வந்தன. மும்பைக்குச் சென்று வருவதற்கு விமானச் சீட்டு, தங்குவதற்கு இடம் எல்லாம் ஏற்பாடு செய்துவிடுவார்கள். நான் ஒருமுறை என் உடல்நிலையையும் மீறிச் சென்றேன். அப்புறம் போகவில்லை. “உனக்குப் பரிசு உண்டா, இல்லையா என்று அங்கே வந்து தெரிந்துகொள்” என்பது சிறுபிள்ளைத்தனமாகப் பட்டது.

ஒரு காலத்தில் சாகித்ய அகாடமி விருதை நேருவே தருவார். அவருக்குப் பிறகு அது மழை நிவாரணம் போலாகி விட்டது. ஆனால், ஒரு வலுவான ஒரு செயலர் வந்தார். ‘பரிசை மரியாதை மிக்கதாகக் கருதவேண்டும் என்றால் பரிசு பெறும் எழுத்தாளரை நாம் மதிப்பு மிக்கவராக நடத்த வேண்டும்; மேடையில் அவரை அமரச் செய்து, பொன்னாடை போர்த்தி அவர் நூல் ஏன் பரிசுக்கு உகந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று எடுத்துக் கூறவேண்டும்’ என்று சொல்லி ஏற்பாடு செய்தார்.

இப்படிக் கொடுத்த பரிசைக் கொடுத் தவர் மூஞ்சியில் திருப்பி அடிப்பது எனக்கு நியாயமாகத் தோன்றவில்லை.

- புன்னகை படரும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x