Published : 25 Sep 2021 03:32 am

Updated : 25 Sep 2021 06:05 am

 

Published : 25 Sep 2021 03:32 AM
Last Updated : 25 Sep 2021 06:05 AM

சாகித்ய அகாடமி தமிழைக் கண்டுகொள்வதில்லையா?

sahitya-akademi

மூத்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரும் தமிழ்ப் பேராசிரியருமான இந்திரா பார்த்தசாரதி, சாகித்ய அகாடமியின் மதிப்புக்குரிய 21 உறுப்பினர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழுக்கும் அவருக்கும் ஒருசேரக் கிடைத்திருக்கும் மரியாதை இது. ராஜாஜி, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், ஜெயகாந்தன் ஆகியோரை அடுத்து சாகித்ய அகாடமியின் இந்தப் பெருமதிப்பைப் பெறுகிற நான்காவது தமிழ் எழுத்தாளர் அவர்.

இ.பா.வுக்குக் கிடைத்திருக்கும் பெருமை தமிழுக்கும் உரியதென ஏன் கொள்ளப்பட வேண்டும்? அகாடமியின் ‘சீனியர் ஃபெல்லோ’ என்ற இந்த அங்கீகாரம், ஒரு நேரத்தில் 21 பேருக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. இது அவர்களது வாழ்நாள் வரைக்குமானது. அதன் காரணமாகவே முக்கியத்துவம் கொண்டதாகக் கருதப்படுகிறது. செப்டம்பர் 18 தேதியிட்ட அறிவிப்பில் இ.பா. உள்ளிட்ட எட்டு மூத்த எழுத்தாளர்களுக்கு இச்சிறப்பு நிலை வழங்கப்பட்டுள்ளது.


வழக்கம்போல இந்திய-ஆங்கில எழுத்தாளர்கள், அதற்கு அடுத்தபடியாக சம்ஸ்கிருத, இந்தி எழுத்தாளர்கள் அதற்கும் அடுத்தபடியாக மலையாள, கன்னட எழுத்தாளர்கள் இவர்களையெல்லாம் தாண்டி அசாமி, டோக்ரி எழுத்தாளர்களைப் போல தமிழுக்கும் சுழற்சிமுறையில் இந்த மரியாதை அளிக்கப்பட்டிருப்பதாகவே நினைக்க வேண்டியிருக்கிறது. காரணம், சாகித்ய அகாடமியின் மதிப்புக்குரிய உறுப்பினராக விளங்கிய ஜெயகாந்தன் 2015-ல் மறைந்து சுமார் ஆறாண்டுகளுக்குப் பிறகுதான் தமிழுக்கான பிரதிநிதியாக இ.பா. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கன்னடத்தின் பிரதிநிதியாக எஸ்.எல்.பைரப்பாவும் மலையாளத்தின் பிரதிநிதியாக எம்.டி.வாசுதேவனும் இருக்கையில் தமிழின் பிரதிநிதியாக இருக்கத் தகுதியான எழுத்தாளர்களுக்கா பஞ்சம்?

தன்னுடைய கலை இலக்கியப் பங்களிப்புக்காக மத்திய அரசின் பல்வேறு அமைப்புகளால் கௌரவிக்கப்பட்டவர் இ.பா. அவரது மணிமகுடத்தில் இது மேலும் ஒரு ஒளிவீசும் ரத்தினக்கல். ஆனால், ஜெயகாந்தனுக்கு 62 வயதில் கிடைத்த கௌரவம் இ.பா.வுக்குக் கிடைப்பதற்கு அவர் 91 வயது வரை காத்திருக்க வேண்டியது ஏன் என்ற கேள்வி தவிர்க்கவியலாதது. இத்தனைக்கும் எழுத்துப் பணிகளோடு கல்விப் பணிகளிலும் பெரும்பங்காற்றியவர் இ.பா. இலக்கியத் துறை பங்களிப்பு போலவே அவரது நாடகத் துறை பங்களிப்புகளும் சிறப்புமிக்கவை.

மூத்த பத்திரிகையாளரும் கவிஞருமான சுகதேவ் 90-களின் இறுதியில் எழுதிய ‘கேட்டால்தான் கிடைக்குமா?’ என்ற தலைப்பிலான கட்டுரைதான் நினைவுக்கு வருகிறது. தமிழ் இலக்கியவாதிகளுக்குத் தொடர்ந்து மறுக்கப்பட்டுவரும் மத்திய அரசின் அங்கீகாரங்களைப் பற்றியது அந்தக் கட்டுரை. அதில் இடம்பெற்றுள்ள ஒரு விமர்சகரின் கருத்து இது: “விருதை எனக்குக் கொடு” என்று கேட்பது ஒரு படைப்பாளிக்கு வெட்கத்துக்குரியது. அதற்காக “எங்கள் மாநிலத்துக்குக் கொடு” என்று குரல் எழுப்புவதுகூடவா தவறு? மற்ற மாநிலத்தவர்கள் இப்படியெல்லாம் மௌனம் காப்பதில்லை. தங்கள் மாநிலத்தவர்களுக்கு உரிய பெருமையை, அங்கீகாரத்தை முறைப்படி பெறுவதற்கும், தாமதமாகும்பட்சத்தில் அதற்காகக் குரல்கொடுக்கவும் போராடவும் தயாராக இருக்கிறார்கள்.

சாகித்ய அகாடமியின் உயர் சிறப்பு நிலைக்கு மலையாளத்தின் பிரதிநிதியாக எம்.டி.வி. இருக்கும்போதே மற்றொரு பிரதிநிதியாக இப்போது எம்.லீலாவதியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இரண்டாவது தமிழ்ப் பிரதிநிதிக்கான குரலையும் இப்போதே முன்னெடுக்க வேண்டும். செல்வாக்கு பெற்ற தமிழ் ‘ஆயனர்கள்’ கவனத்தில் கொள்வார்களாக. அதே நாளில், மொழிபெயர்ப்புகளுக்கான பரிசுகளும் சாகித்ய அகாடமியால் அறிவிக்கப்பட்டுள்ளன. ரவீந்திரநாத் தாகூரின் ‘கோரா’ நாவலை மொழிபெயர்த்த பேராசிரியர் கா.செல்லப்பனுக்குத் தமிழுக்கான பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, தமிழிலிருந்து மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்த்த இருவரும் இந்தப் பரிசினைப் பெற இருக்கிறார்கள். திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்ததற்காக டி.இ.எஸ்.ராகவன் இவ்விருதைப் பெறுகிறார். சல்மா எழுதிய ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ நாவலை மராத்தியில் மொழிபெயர்த்ததற்காக சோனாலி நவாங்குல் விருது பெறுகிறார்.

மொழிபெயர்ப்புக்கான பரிசுகளில் கன்னடத்திலிருந்து ஆங்கிலத்துக்கும் மூன்று இந்திய மொழிகளுக்கும் சென்றுள்ள மொத்தம் நான்கு புத்தகங்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில், சாகித்ய அகாடமியின் தலைவரான கன்னட எழுத்தாளர் சந்திரசேகர கம்பாரின் புத்தகமும் ஒன்று.

மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி பரிசு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ் நூல்கள் தொடர்பில் விருது பெற்ற மூவருக்கும் தமிழ்நாடு முதல்வரிடமிருந்து மட்டுமின்றி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடமிருந்தும் வாழ்த்துச் செய்திகள் வெளிவந்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. திமுகவைச் சேர்ந்த சல்மா எழுதிய நாவலின் மராத்தி மொழிபெயர்ப்புக்குப் பரிசு கிடைத்ததைப் பாராட்டும் அளவுக்கு அதிமுக நல்லிணக்கம் பாராட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது.

- செல்வ புவியரசன். தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in
சாகித்ய அகாடமிதமிழ் இலக்கியங்கள்இந்திரா பார்த்தசாரதிSahitya akademiராஜாஜி தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ஜெயகாந்தன்தமிழ் எழுத்தாளர்சீனியர் ஃபெல்லோ

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x