Published : 28 Aug 2021 03:12 AM
Last Updated : 28 Aug 2021 03:12 AM

இந்திய சினிமாவில் முஸ்லிம்களின் சித்தரிப்பு

இந்திய சினிமாவின் தோற்றக் காலத்திலிருந்தே, தொழிலிலும் பட உருவாக்கத்திலும், முஸ்லிம்களின் பங்களிப்பு கவனிக்கத்தக்க அளவில் இருந்திருக்கிறது. இந்த இரண்டு பரிமாணங்கள் பற்றி எழுதுவதுடன் சில படங்களின் உள்ளடக்கத்தையும் இந்த நூலில் ஆசிரியர் அப்சல் பரிசீலிக்கிறார். அண்மையில் வந்த சில படங்களின் அரசியலைப் பற்றியும் பேசுகிறார். ஆசிரியரின் கவனம் இந்தி, தமிழ், மலையாளம் சினிமாக்களின் மேல் பதிகிறது. இந்த நூலுக்கு ஒரு நல்ல பின்புலத்தை சுபகுணராஜனின் தீர்க்கமான முன்னுரை கொடுக்கிறது.

இந்தி சினிமாவில் இஸ்லாமியர் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள் என்று சில கட்டுரைகள் வந்துள்ளன. சினிமா ஆய்வாளர் ரேச்சல் டையர் இந்தி சினிமாவில் அடிக்கடி வரும் பத்து வித முஸ்லிம் கதாபாத்திரங்களைப் பற்றி - நடனமாது, கவிஞர், சக்ரவர்த்தி, பயங்கரவாதி போன்று - எழுதியுள்ளார். இன்று இந்தி சினிமாவில் கோலோச்சிக்கொண்டிருக்கும் மூன்று கான்களைப் பற்றியும் சில நூல்கள் வந்துள்ளன. ஒரு சினிமாவில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றனர் என்பதைக் கணிக்கச் சில ஆய்வு உத்திகள் உண்டு. எந்த மாதிரி கதாபாத்திரத்தில் அவர்கள் தோன்றுகிறார்கள்? எவ்வாறு திரையில் காட்சிப்படுத்தப்படுகிறார்கள் போன்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஹாலிவுட்டில் கறுப்பர்களும் லத்தீனோக்களும் எவ்வாறு காட்டப்படுகின்றனர் என்பது பற்றி ஆய்வுக் கட்டுரைகள் வந்துள்ளன.

நம் நாட்டில் தொடக்க ஆண்டுகளில் உருது எழுத்தாளர்களும் கவிஞர்களும் இந்தி சினிமாவுக்குள் நுழைந்து கால்பதித்ததைத் தொடர்ந்து பல முஸ்லிம்கள் இயக்குநர்களாக, நடிகர்களாக, இசையமைப்பாளர்களாக, தயாரிப்பாளர்களாக ஸ்டுடியோவுக்குள் நுழைந்து, இந்தி சினிமாவுக்கு அடித்தளம் அமைத்துப் புகழ் பெற்றனர். அந்தப் பாரம்பரியம் இன்று வரை தொடர்வதையும் ஆசிரியர் விரிவாகச் சுட்டிக்காட்டுகின்றார்.

ஆரம்ப காலத்தில் அரேபிய இரவுக் கதைகளிலிருந்து உருவாக்கப்பட்ட இஸ்லாமியர் சார்ந்த திரைப்படங்களில் அரசியல் இல்லாமலிருந்தது மட்டுமல்ல, அவை இந்திய இஸ்லாமியர்களைச் சித்தரிக்கவில்லை. மதக் காழ்ப்பு ஊட்டப்படவில்லை. ‘குலேபகாவலி’யில் (1955) குலாம் (சந்திரபாபு) “இங்கே எல்லாத்துக்கும் இடம்கொடுக்கிற அல்லாவே… நீயும் ஏமாந்திட்டா போட்டிடுவான் குல்லாவே” என்று பாடுவது, அன்று நிலவிய நல்லெண்ணத்தையே பிரதிபலித்தது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக வலதுசாரி அலை ஆரம்பித்த பின், முஸ்லிம் கதாபாத்திரங்கள் இடம்பெறும் படங்களில் வெறுப்பு அரசியல் எனும் நச்சு கலக்கப்படுகிறது. இந்த அம்சத்தின் மேல்தான் நூலாசிரியர் தன் பார்வையை ஓடவிடுகிறார்.

ஆரம்ப ஆண்டுகளில் இஸ்லாமியக் கதாபாத்திரங்களைக் கொண்டு பல இந்திப் படங்கள் வந்தன. அதில் முக்கியமான ‘பக்கீசா’ (1972), பின்னர் வந்த ‘உம்ராவ்ஜான்’ (1981) போன்ற படங்களில் இஸ்லாமியர்களின் சித்தரிப்பு சிறப்பாக அமைந்திருந்தது. இதில் சத்யஜித் ராயின் ‘சத்ரஞ் கே கிலாடி’ (1977) படத்தையும் சேர்த்துக்கொள்கிறார். அந்தக் காலகட்டத்தை ஆசிரியர் நினைவேக்கத்துடன் வர்ணிக்கிறார்: “அது ஒரு பொற்காலம். நினைத்துப் பார்க்கவே பிரமிப்பையும் சந்தோஷத்தையும் தருகிறது. ஒவ்வொரு கலைஞரும் ஒரு தேர்ந்த சிற்பியைப் போல முஸ்லிம்களின் சினிமாவைச் செதுக்கினார்கள்.” ஆனால், தொண்ணூறுகளில், குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின், நிலைமை முற்றிலும் மாறுகிறது.

‘ரோஜா’ (1992), ‘பம்பாய்’ (1995) போன்ற படங்களையும் அவற்றின் பின்னால் இருக்கும் அரசியலையும் ஆசிரியர் கூருணர்வுடன் அலசுகிறார். அந்தப் படங்கள் வெளியானபோது தமிழ்நாட்டில் விமர்சகர்கள் இப்படிப்பட்ட தீர்க்கமான பார்வையை அப்படங்களின் மீது செலுத்தவில்லை என்றே நினைக்கிறேன். அதே போல் ‘மருதநாயகம்’ படம் வராமல் தடுத்தது யார் என்ற கேள்வியை எழுப்புகிறார். ‘ஹே ராம்’ (2000), `உன்னைப் போல் ஒருவன்’ (2009) போன்ற படங்களையும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறார்.

மலையாள சினிமா பற்றி நூலாசிரியரின் அவதானிப்புகள் கவனிக்கத்தக்கவை, நல்லெண்ணத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இஸ்லாமியர் சார்ந்த படங்கள் பல வந்து மக்களின் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. படத் தயாரிப்பின் சகல அம்சங்களிலும் அவர்களின் பங்களிப்பு நிரவியிருக்கிறது. கிறிஸ்தவர், இந்து, முஸ்லிம் எனப் பல மதக் கலைஞர்களும், சினிமாவின் இயல்பை உணர்ந்து உருவாக்கும் படங்கள் மத நல்லிணக்கத்தைச் சார்ந்திருக்கின்றன. முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள சில பழக்கங்களைக் கடுமையாக விமர்சித்த முக்கியமான படமான, டி.வி.சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘பாடம் ஒண்ணு - ஒரு விலாபம்’ (2003) இப்படம் ஆசிரியரின் கவனத்தைக் கவராதது வியப்பளிக்கிறது.

ஆனால், தமிழ் சினிமாவில் நிலைமை வேறு விதமாக இருப்பதை ஆசிரியர் ஆதங்கத்துடன் சுட்டிக்காட்டுகிறார். படத் தயாரிப்பில் மதநல்லிணக்கத்துக்கான சில எடுத்துக்காட்டுகளைத் தமிழ்த் திரையுலகில் காண முடிகிறது. ஜூபிடர் பிக்சர்ஸின் மொய்தீன், விஜயகாந்துடன் இணைந்திருந்த ராவுத்தர் போன்று. இந்தப் புத்தகம் செப்பனிடப்படவில்லை என்பது தெரிகின்றது. கதாபாத்திரங்களின் பெயருக்குப் பதிலாக நடிகர்களின் பெயர்களைப் பயன்படுத்துவது குழப்பத்தைத் தருகிறது. சில ஆங்கிலச் சொற்களும் பெயர்களும் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. சில தகவல் பிழைகள் துருத்திக்கொண்டு தெரிகின்றன. திப்பு சுல்தான் வேலூர் சிறையில் வைக்கப்பட்டு அங்கு தூக்கிலிடப்பட்டதாக ஆசிரியர் எழுதுகிறார். சீரங்கப்பட்டணப் போரில் திப்பு மடிந்தார் என்பது ஊரறிந்த வரலாறு.

சினிமா சார்ந்த நூலில், கவனிப்புக்கு எடுத்துக்கொண்ட படங்களின் பட்டியல் தரப்படுவது வழமை. அதேபோல் பயன்படுத்தப்பட்ட நூல்கள் பட்டியலுடன் சொல்லடைவும் அவசியம். இந்த மூன்று அங்கங்களும் ஒரு முக்கியமான நூலின் பயனைப் பன்மடங்கு உயர்த்தும்.

- தியடோர் பாஸ்கரன், ‘கையிலிருக்கும் பூமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

*****

இந்திய சினிமாவில் முஸ்லிம்கள்

அப்சல், விலை: ரூ.250

இருவாட்சி இலக்கியத் துறைமுகம்

தொடர்புக்கு: 9444640986

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x