Published : 07 Aug 2021 03:17 AM
Last Updated : 07 Aug 2021 03:17 AM

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி!

தமிழக சட்டமன்றத்தில் கருணாநிதி ஆற்றிய உரைகளிலேயே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது ‘மாநில சுயாட்சி’ தீர்மானத்தை நிறைவேற்றக் கோரும் அவருடைய 20.04.1974 உரை. நீண்ட அந்த உரையிலிருந்து சிறு பகுதி:

“கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் பசுமைப் புரட்சியின் மூலமாக உணவுத் துறையிலே தன்னிறைவு பெற்று, இன்றைக்கு மற்ற மாநிலங்களுக்கு உணவுத் தானியங்களை வழங்கி, அவர்களுடைய பசியை ஓரளவு குறைக்கின்ற பெருமை உடையதாகத் தமிழக அரசு விளங்குகிறது. பியுசி வரை இலவசக் கல்வி, 1967-க்கு முன்புவரையில் 103 கல்லூரிகளாக இருந்ததை 178 கல்லூரி ஆக்கியது, நாட்டிலேயே முதன்முறையாக மனுநீதித் திட்டம், விவசாயத் தொழிலாளர்களுக்குக் குடியிருப்பு மனைகளைச் சொந்தமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டு இரண்டு லட்சம் பேருக்குக் குடியிருப்பு மனைகள் சொந்தமாக்கப்பட்டன, நிலச் சீர்திருத்தம், மத்தியில் இந்திரா காந்தி கொண்டுவரும் முன்பே இங்கு நிறைவேற்றப்பட்ட நில உச்சவரம்புச் சட்டம், இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழும் குடிசை மாற்று வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், இந்தியா முழுவதும் 20 லட்சம் விவசாய பம்பு செட்டுகள் என்றால், அதில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 6 லட்சம் பம்புசெட்டுகள் நாம் தமிழகத்தில் வழங்கியது, 49% இடஒதுக்கீடு, நாட்டிலேயே முதன்முறையாகத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், அரசு அலுவலர்களுக்குக் குடும்ப நலத் திட்டம் எல்லாம் இருக்கிற அதிகாரத்தைப் பயன்படுத்தி நாம் செய்து காட்டியவைதான்.

‘இந்திய மாநிலங்கள் உள்நாட்டுக் காலனிகளாக இருக்கின்றன’ என்று சச்சிதானந்தா சின்கா தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். பத்தாண்டு காலத்தில் 1,700 கோடி ரூபாயை மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டு நாம் வாட்டத்தோடு உட்கார்ந்துகொண்டிருக்கிறோம். இந்த உள்நாட்டுக் காலனி முறை ஒழிக்கப்பட வேண்டாமா? எனவேதான் மாநில சுயாட்சி கேட்கிறோம்!

இப்போது இருக்கிற முறைக்கும், நாம் கேட்கிற மாநில சுயாட்சிக்கும் என்ன ஒரே ஒரு சிறிய வேறுபாடு என்றால், இப்போது அதிகாரங்களைக் கொடுத்தால் திரும்ப எடுத்துக்கொள்கிற உரிமை அவர்களுக்கு உண்டு; மாநில சுயாட்சியிலே அது இல்லை. அதிகாரங்கள் கொடுத்துவிட்டால் மறுபடியும் தொட முடியாது. ஆகவேதான், கொடுக்கப்பட்ட அதிகாரங்களைத் திரும்ப எடுத்துக்கொள்ள முடியாத மாநில சுயாட்சியை நாம் கோருகின்றோம்.

இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறு தேட வேண்டும் என்பது நம்முடைய நோக்கம் அல்ல. இந்தியாவின் ஒற்றுமையையே நாம் பிரதானமாகக் கருதுகிறோம். இந்தியாவின் பாதுகாப்பை திமுக அரசு எந்த அளவிற்கு அக்கறையுடன் கவனிக்கிறது என்பதற்கு உதாரணம், போர் மேகம் சூழ்ந்திருந்த வங்க தேசப் பிரச்சினையின்போது இந்திய பிரதமரை அழைத்து ரூ.6 கோடி யுத்த நிதி கொடுத்த ஒரே மாநிலம் இந்தியாவிலேயே திமுக ஆளுகிற தமிழ்நாடுதான். தென்னிந்திய மாநிலங்கள் லட்சக்கணக்கில்தான் தந்தார்கள். நாம் ரூ.6 கோடி தந்தோம். ஆகவே, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு நாம் என்றைக்கும் எதிரிகள் அல்ல. நாம் பிரிவினைவாதிகள் அல்ல. இதை அழுத்தம் திருத்தமாக ஆயிரம் முறை சொல்லிவிட்டோம். யாருடைய தேச பக்திக்கும், திமுகவினரின் தேச பக்தி எள்ளளவும், இம்மியளவும் குறைந்தது அல்ல என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

இது எந்தக் கட்சிக்கும் உரிய தீர்மானம் அல்ல. தமிழகத்திலே இருக்கிற எல்லாக் கட்சிகளுக்கும், இந்தியாவில் இருக்கிற எல்லாக் கட்சிகளுக்கும் உரிய தீர்மானம். இது எங்கள் கட்சிக்கு மட்டுமே உரியது என்று நாங்கள் வாதிட மாட்டோம். இது அனைவருக்கும் பொதுவான தீர்மானம். தமிழ்ச் சமூகத்தைக் காக்க, இந்தியாவிலுள்ள தேசிய இனங்களைக் காக்க, இந்தியாவிலுள்ள மாநிலங்களின் உரிமைகளைக் காக்க, இந்தியாவிலே இருக்கிற மாநிலங்கள் சுயமரியாதையோடு வாழ இந்தத் தீர்மானம் பயன்படும்.

பொருளாதாரத்திலே வளமும் சுயமரியாதைத் தன்மையிலே தன்னிகரற்ற நிலையும், விட்டுக்கொடுத்துப் போகின்ற நேரத்தில், மத்திய சர்க்காருக்கு அடிமைகளாக இருக்க மாட்டோம். உறவுக்குக் கை கொடுப்போம்; அதே நேரத்தில், உரிமைக்குக் குரல் கொடுப்போம்!”

(‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலிலிருந்து…)

ஆகஸ்ட் 7: மு.கருணாநிதி நினைவு நாள்

***

தெற்கிலிருந்து ஒரு சூரியன்

இந்து தமிழ் திசை வெளியீடு

124, கஸ்தூரி மையம்,

வாலாஜா சாலை, சென்னை-2.

தொடர்புக்கு: 74012 96562

விலை: ரூ.300 (இன்று ஒரு நாள் மட்டும் 20% தள்ளுபடி)

ஆன்லைனில் வாங்க: http://store.hindutamil.in/publications

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x