Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM

நித்ய சைதன்ய யதி: இரு அறிமுக நூல்கள்!

யதி: தத்துவத்தின் கனிதல்
சின்னச் சின்ன ஞானங்கள்
தமிழில்: யூமா வாசுகி
தன்னறம் வெளியீடு
வேங்கிக்கால், திருவண்ணாமலை-606601.
மொத்த விலை: ரூ.620
தொடர்புக்கு: 98438 70059

1998-ல் ‘காலச்சுவடு’ இதழில் ‘மந்திரம், இசை, மௌனம்’ என்ற தலைப்புடன் ஜெயமோகன் எடுத்திருந்த நேர்காணல், நித்ய சைதன்ய யதி (1924 – 1999) என்ற பெயரைத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே அறிமுகப்படுத்தியது. தத்துவம், கலை, இலக்கியம், ஆன்மிகம் எனப் பல தளங்களில் அமைந்த செறிவான அந்த உரையாடல், நித்ய சைதன்ய யதியின் ஆளுமையை உணரச்செய்தது. அதன் பிறகு, செப்டம்பர் 1999-ல் வெளியான ‘சொல் புதிது’ முதல் இதழின் முகப்பில் நித்ய சைதன்ய யதியின் படம் இடம்பெற்றது. மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதிய கட்டுரைகளின் மொழிபெயர்ப்புகள் ‘சொல் புதிது’ இதழில் தொடர்ந்து வெளியாயின. ‘நித்யா ஆய்வரங்கு’, ‘காவிய முகாம்’ உள்ளிட்ட இலக்கிய அரங்குகள் பலவும் ஜெயமோகனின் ஒருங்கிணைப்பில் உதகை நாராயண குருகுலத்தில் தொடர்ந்து நடந்துவருகின்றன.

ஜெயச்சந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட நித்ய சைதன்ய யதி, நடராஜ குருவின் மாணவர். தத்துவம், புராதன தத்துவம், உளவியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். உளவியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவர். கொல்லம் எஸ்.என். கல்லூரியில் உளவியல் துறைத் தலைவராகவும், சென்னை விவேகானந்தா கல்லூரியில் தத்துவத்தில் முதுநிலைப் பேராசிரியராகவும், கொழும்பு வித்யோதயா பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். அமெரிக்காவில் புகழ்பெற்ற கல்லூரிகளில் சிறப்புப் பேராசிரியராகவும், வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ஹவாய் பல்கலைக்கழகத்தில் கவிதைத் துறை சிறப்புப் பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.

நித்ய சைதன்ய யதி கவிஞர், ஓவியர், எழுத்தாளர். ஆங்கிலத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும், மலையாளத்தில் ஐம்பது நூல்களையும் எழுதியுள்ளார். இலக்கியம், கலை, அறிவியல் தொடர்பான பல அறிமுக நூல்களையும் மலையாளத்தில் எழுதியுள்ளார். இந்தியச் சிந்தனை மரபையும், மேற்கத்தியச் சிந்தனை மரபையும் ஆழக் கற்றவர். அத்துடன் கலை, இலக்கியத்தையும் இணைத்துப் பார்க்கும் பார்வையைக் கொண்டிருந்தவர். இவை அனைத்தையும் கவித்துவமாக அணுகுவது அவரது சிறப்பு. ராபர்ட் ஃபிராஸ்ட், எமிலி டிக்கன்ஸன் இருவரும் அவருக்குப் பிடித்தமான கவிஞர்கள். அவரது அலமாரியில் கவிதை நூல்களுக்கு நடுவே சாலிம் அலியின் பறவைகள் பற்றிய புத்தகமும், ஐன்ஸ்டைனின் கோட்பாடுகள் அடங்கிய நூலும், ‘குட்டி இளவரச‘னும், ‘அற்புத உலகில் ஆலிஸு’ம் இடம்பெற்றிருக்கும். அவரைப் பொறுத்தவரை அவையும்கூடக் கவிதைகளே. திருக்குறள் அவருக்குப் பிடித்தமான தமிழ்க் கவிதை நூல்.

யதி அபாரமான நகைச்சுவை உணர்வு கொண்டவர். நுட்பமான புன்னகையை எப்போதுமே அவரது கண்களில் பார்க்க முடியும். ‘குருகுலம் சிரிப்புடன் திகழ வேண்டும்’ என்பது அவரது கூற்று. ‘நகைச்சுவை இல்லாவிட்டால் தத்துவம் உயிரிழந்துவிடும்’ என்பது அவரது நம்பிக்கை.

நித்ய சைதன்ய யதியைக் குறித்த விரிவான அறிமுக நூலாக அமைந்திருக்கிறது, அண்மையில் ‘தன்னறம் நூல்வெளி’ வெளியிட்டிருக்கும் ‘யதி: தத்துவத்தில் கனிதல்’. 2004-ல் ‘யுனைடெட் ரைட்டர்ஸ்’ வெளியிட்ட ‘அனுபவங்கள் அறிதல்கள்’ நூலின் விரிவாக்கப்பட்ட பதிப்பாக அமைந்துள்ளது இது. ‘சொல் புதிது’, ‘சுபமங்களா’ உள்ளிட்ட இதழ்களில் வெவ்வேறு காலகட்டங்களில் வெளியான யதியின் கட்டுரைகளும் நேர்காணல்களும் அவரது சுயசரிதையின் சில பகுதிகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

யதியின் மாணவரான சௌகத் அலி தொகுத்திருக்கும் ‘சுயசரிதை’ நூலின் சில பகுதிகளை ஆர்.சிவக்குமாரும் பாவண்ணனும் மொழிபெயர்த்திருக்கிறார்கள். செஷான், ஷகால், கிளாட் மோனே ஆகியோரின் ஓவியங்கள் குறித்த கட்டுரைகளை நிர்மால்யா மொழிபெயர்த்திருக்கிறார். நடராஜ குருவுடனான அவரது அனுபவங்களை விவரித்திருக்கும் கட்டுரையைத் தமிழில் தந்திருக்கிறார் ஆனந்த் ஸ்ரீனிவாசன். தொல்படிமங்கள், விடுதலையின் மெய்யியல், இருப்பும் அறிதலும் உள்ளிட்ட கட்டுரைகளை மொழிபெயர்த்திருக்கும் ஜெயமோகன், இந்த நூலுக்கு விரிவான குறிப்பிடத்தக்க ஒரு முன்னுரையையும் எழுதியிருக்கிறார்.

நித்ய சைதன்ய யதி, குழந்தைகளின் மேல் அபார பிரியம் கொண்டவர். குழந்தைகளுக்காக எழுதுவதிலும் ஓவியம் வரைவதிலும் மிகுந்த ஈடுபாடு காட்டுபவர். மலையாளத்தில் குழந்தை இலக்கிய நூல்களை எழுதியிருக்கிறார். அவ்வாறான நூல்களில் ஒன்று ‘சின்னச் சின்ன ஞானங்கள்’. உதகை நாராயண குருகுலத்தில் நித்யாவைச் சந்திக்கச் சென்றபோது, இந்த நூலின் வடிவமைப்பையும் நேர்த்தியையும் கண்டு வியந்த யூமா வாசுகி, எதைப் பற்றியது இந்தப் புத்தகம் என்று நண்பர்களிடம் விசாரித்துத் தெரிந்துகொண்டார். அங்கிருந்துதான் யூமா வாசுகியின் மொழிபெயர்ப்புப் பணி தொடங்கியது. முதன்முதலாக அவர் மொழிபெயர்க்க விரும்பிய ‘சின்னச் சின்ன ஞானங்கள்’ இப்போது வெளிவந்துள்ளது.

குழந்தைகளுக்குச் சொல்ல விரும்பிய சில விஷயங்களை மிகச் சுருக்கமாகவும் ருசிகரமாகவும் எழுதியிருக்கிறார் யதி. இது குழந்தைகளுக்கானது மட்டுமல்ல; குழந்தைகளைவிட அவர்களது பெற்றோர்களும் ஆசிரியர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம் என்பது முக்கியமானது. வீட்டு நூலகத்தின் தேவை, வாசிப்புப் பழக்கம், மரணத்தை எப்படிப் புரிந்துகொள்வது, உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கான அரங்கங்கள், கலாச்சாரங்கள், சிரிப்புப் படங்கள், கணிதம் போன்று பல்வேறு விஷயங்களையும் அவரது அனுபவங்களின் பின்னணியில் எளிமையாகச் சித்தரித்திருக்கிறார் யதி. இவற்றைச் சுவை குன்றாமல் செறிவுடன் மொழிபெயர்த்திருக்கிறார் யூமா வாசுகி. தேவையான இடங்களில் தமிழுக்குப் பொருந்தும் வகையில் பட்டியல்களையும் தந்திருக்கிறார்.

கவித்துவமும் அழகும் நிறைந்த பொருத்தமான பல படங்கள் இந்த இரண்டு நூல்களிலும் இடம்பெற்றுள்ளன. வடிவமைப்பு, அச்சாக்கம், தரம் என எல்லா வகையிலும் மிகுந்த நேர்த்தியுடனும் அழகுடனும் அமைந்துள்ள இந்த இரண்டு நூல்களும் நித்ய சைதன்ய யதியை மிகச் சரியாக அறிமுகப்படுத்தக்கூடிய தகுதியைக் கொண்டுள்ளன.

- எம்.கோபாலகிருஷ்ணன், ‘மனைமாட்சி’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: magopalakrishnan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x