Published : 10 Oct 2020 08:14 AM
Last Updated : 10 Oct 2020 08:14 AM

இன முரண்பாடு காலத்தில் முஸ்லிம்கள் 

என்ட அல்லாஹ்
தொகுப்பு: ஏபிஎம்.இத்ரீஸ்
ஆதிரை வெளியீடு
விற்பனை உரிமை: டிஸ்கவரி புக் பேலஸ்
கே.கே.நகர் மேற்கு, சென்னை-78.
தொடர்புக்கு: 87545 07070
விலை: 180

இலங்கை உள்நாட்டுப் போரால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்று. எண்பதுகளுக்குப் பிறகு தொடங்கிய இந்தப் போர், 2009-ல் அதன் உச்சம் தொட்டது. இலங்கையிலிருந்து உலகம் முழுக்க நிலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் பலரும் போரின் விளைவுகள் குறித்துக் காத்திரமாகத் தொடர்ந்து எழுதிவருகின்றனர். தமிழ் இலக்கியம் உலகம் முழுக்கப் பரவியதற்கு ஈழத் தமிழர்களின் புலம்பெயர்வும் காரணமாகச் சொல்லப்படுகிறது. இறுதிக்கட்ட போருக்குப் பிறகும் ஈழத் தமிழர்களின் வாழ்வில் வசந்தம் வீசிவிடவில்லை. அதிலும், ஈழம் தொடர்பான உரையாடல்களில் முஸ்லிம்களின் வாழ்க்கை பிரத்யேகமான கவனம் பெற்றதில்லை. இவர்கள் சிறுபான்மையினரினும் சிறுபான்மையினராக இருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். அந்த வகையில், ‘என்ட அல்லாஹ்’ என்ற பெயரில் ஏபிஎம்.இத்ரீஸ் தொகுத்திருக்கும் இந்தப் புத்தகம் மிக முக்கியமான வரவாகிறது. இந்தத் தொகுப்பானது போரின் காரணமாக மும்முனைத் தாக்குதலை எதிர்கொண்ட முஸ்லிம்கள் பற்றிய உரையாடலை நிகழ்த்துகிறது என்ற வகையில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தத் தொகுப்புக்குப் பல்வேறு முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன. வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த, வெவ்வேறு தரப்பைச் சேர்ந்த படைப்பாளிகளின் கதைகளைத் தொகுப்பாக வாசிக்கும்போது பல பரிமாணங்களிலான பார்வை கிடைக்கிறது. முன்னுரையில் ஏபிஎம்.இத்ரீஸ் குறிப்பிட்டிருப்பதுபோல நிறைய கதைகளிலிருந்து வடிகட்டுவதற்கு வசதியாகக் கலையம்சம் கூடிய கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் இந்தத் தொகுப்பின் இன்னொரு பலம். மிக முக்கியமாக, கதைகளில் கையாளப்பட்டிருக்கும் மொழி. ஈழ இலக்கியங்கள் என்றாலே மொழிக்குக் கூடுதல் அழகு சேர்ந்துவிடும் என்றாலும் இந்தத் தொகுப்பில் கையாளப்பட்டிருக்கும் மொழியையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. சில பரிசோதனை முயற்சிக் கதைகளும் தொகுப்பின் பின்பாதியில் அமைந்துள்ளன. என்றாலும், நேரடியாக நெருக்கடிகளைப் பகிரும் கதைகளே தொகுப்பின் பலமாகத் தோன்றுகிறது.

இந்தச் சிறுகதைத் தொகுப்பை வாசிக்கும்போது பல கேள்விகள் எழுகின்றன. சிங்களப் பேரின அரசுக்கு எதிராகவும் ஈழத் தமிழர்களின் மீட்பராகவும் உருவான இயக்கங்கள் முஸ்லிம் மக்களுக்கு அளித்த இடம் என்ன? அந்த இயக்கங்கள் இவர்களை எவ்வாறு எதிர்கொண்டன? புலிகளுக்கும் இவர்களுக்குமான உறவு எத்தகையதாக இருந்தது? இயக்கங்களுக்கு இவர்களுடைய பங்களிப்பு என்னவாக இருந்தது? மேலுமொரு ஐயத்தைக்கூட இந்த நூலின் கதைப் பின்புலங்கள் உருவாக்குகின்றன: தமிழீழம் மலர்ந்திருந்தால் அதில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தைப் புதிய அரசு அளித்திருக்குமா? இந்தத் தொகுப்பிலுள்ள பதினெட்டுக் கதைகளையும் எழுதியவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் இல்லை; ஆனால், பதினெட்டுக் கதைக்குள்ளும் இருப்பவர்கள் முஸ்லிம்கள். மேற்குறிப்பிட்ட ஐயம் முஸ்லிம்களுக்கு மட்டும் எழவில்லை என்பதற்காக இந்தத் தகவலைக் குறிப்பிட்டேன்.

இயக்கங்களுக்கும் முஸ்லிம்களுக்குமான உறவு குறித்துப் பேசுவதில் இரண்டு கதைகளுக்கு முக்கியமான இடம் இருக்கிறது. சக்கரவர்த்தி எழுதிய ‘என்ட அல்லாஹ்’, எஸ்.நளீம் எழுதிய ‘வண்ணாத்திக் குறி’. இயக்கக்காரர்கள் தவிர்த்து, எல்லா அத்துமீறல்களையும் பார்த்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருக்கும் கௌதமரையும் சில புனைவுகள் விமர்சிக்கின்றன. ஆர்மிக்காரர்களுக்கும் இயக்கக்காரர்களுக்கும் இடையே நடந்த போரில், போருக்குத் தொடர்பே இல்லாத பொதுமக்கள் இரு தரப்பினராலும் பழிவாங்கப்பட்ட கதையும் உண்டு. ரயிவேயில் விளையாடி வியாபாரம் செய்தவர்களை ஆயுதம் தூக்க வைத்ததை நினைவுகூரும் ‘ரெயில்வே ஸ்ரேஷன்’ கதையும் முக்கியமானது.

இவை மட்டுமல்லாமல் தொகுப்பிலுள்ள பல கதைகளும் முன்வைக்கும் அம்சம் வன்முறைக்கு எதிரானதுதான். ஈழ மக்களுக்கு ஆதரவாக நிற்கும் இயக்கங்களுக்கும் ஆர்மிக்காரர்களுக்கும் இடையில் வித்தியாசங்கள் இல்லாத தருணங்களை இந்தத் தொகுப்பின் பல கதைகள் முன்வைக்கின்றன. அந்த வகையில், போருக்கு எதிரான குரல்கள் இந்தத் தொகுப்பில் ஆழமாக வெளிப்படுகின்றன எனலாம்.

மிக முக்கியமாக, மிகப் பெரிய பேரழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கும்போதும்கூட மனித மனம் எப்படிப் பாகுபாடுகளைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது என்ற உண்மையையும் அப்பட்டமாகச் சொல்கிறது இந்தத் தொகுப்பு. ஏறக்குறைய முப்பது வருட காலத்தில் முஸ்லிம் மக்கள் இந்தப் போரின் காரணமாக எதிர்கொண்ட பல்வேறு நெருக்கடிகளை இந்தத் தொகுப்பின் கதைகள் பேசுகின்றன.

ஒட்டுமொத்தத்தில், ஒவ்வொரு கதையையும் சமூகவியல் நோக்கில் விரிவான வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும். இதுபோன்ற பன்முகத்தன்மை கொண்ட தொகுப்புகள் அதிகம் வர வேண்டும். நேர்த்தியாகப் பதிப்பித்திருக்கும் ‘ஆதிரை’ பதிப்பகத்தைப் பாராட்ட வேண்டும்.

- சுப்பிரமணி இரமேஷ், ‘தமிழ்ச் சிறுகதை: வரலாறும் விமர்சனமும்’ நூலின் தொகுப்பாசிரியர்.
தொடர்புக்கு: ramesh5480@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x